Deva: "கானா கிங்" "தேனிசைத் தென்றல்" தேவாவுக்கு என்ன நடந்தது? வடபழனி மருத்துவமனை மருத்துவர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா, மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே அவருக்கு நாடித் துடிப்பு இல்லை என வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தேவாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்து வந்தனர். அவர் கொண்டு வரப்பட்ட போதே அவருக்கு நாடித் துடிப்பே இல்லை. தேவாவுக்கு ஏற்கெனவே இதயம் சார்ந்த பிரச்சினைகள் இருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

Deva

யார் இவர்?

தேனிசைத் தென்றல் தேவா "வைகாசி பொறந்தாச்சு" படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தது. அதன் பின்னர் 1990-களில் தமிழ் சினிமாவை ஆண்டார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பிஸி!

1990- 1995 ஆம் ஆண்டுகளில் அண்ணாமலை, பாட்ஷா, காதல் கோட்டை, ஆசை, பவித்ரா உள்ளிட்ட அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு ஹிட் பாடல்களை கொடுத்தவர்.

1990- 1999ஆம் ஆண்டுகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 1995 ஆம் ஆண்டு 36 படங்களுக்கு இசையமைத்திருந்தார். தேவா தமிழில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் டைட்டில்

ரஜினிகாந்த் படத்தின் டைட்டில் கார்டுக்கு பிஜிஎம் அமைத்தது தேவாதான். இன்று வரை எல்லா ரஜினி படங்களிலும் அந்த பிஜிஎம்தான் ஒலிக்கிறது. கிராமிய இசை, குத்துபாட்டு, கானா என தமிழக மக்களின் ரசனைக்கேற்றாற்போல் தேவா தனது பயணத்தை அமைத்துக் கொண்டார்.

கானா காட்ஃபாதர்

இவர் கானா கிங் என்றும் அழைக்கப்படுகிறார். காப்பிரைட் பிரச்சினையை கூட எழுப்பாதவர். யார் வேண்டுமானாலும் தனது பாடல்களை பாடிக் கொள்ளலாம் என்றவர். மிகவும் எளிமையானவர், அவரிடம் பேசினால் எந்த பந்தாவும் இல்லாமல் நம் உறவினர் போல் உரிமையுடனும், பாசத்துடனும் பேசுவார்.

நெஞ்சு வலி

அவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 75. தேவாவுக்கு ஜெயா என்ற மனைவியும், 4 பிள்ளைகளும் உள்ளனர். அந்த 4 பேரில் ஸ்ரீகாந்த் தேவா பிரபல இசையமைப்பாளர்.

பொதுமக்கள் அஞ்சலி

தேவாவின் உடல் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தேவா மறைவை கேட்டதும் சத்யராஜ் அவரது வீட்டிற்கு வந்து முதல் ஆளாக அஞ்சலி செலுத்தினார். தந்தையின் உடலை ஆம்புலன்ஸில் கொண்டு வந்த போது, மகன் ஸ்ரீகாந்த் தேவா, "அப்பா உங்களை இந்த வீட்டிற்குள் இப்படியா பார்க்கணும்" என கதறினார்.

ஸ்டாலின் அஞ்சலி

தேவாவின் உடலுக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்பி தயாநிதி மாறன், நடிகர் எஸ்வி சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக தேவாவின் மறைவுக்கு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் , தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.

வெள்ளை மனம் கொண்டவர் தேவா

பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.

எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.

குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.

ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.

தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+