நிழல் கூட படக்கூடாதாம்.. அந்த சீட்டையும் விடாம.. ஓபிஎஸ் தடத்தையே துடைத்து எறிய எடப்பாடி பிளான்!
சென்னை : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தரப்பினரை ஜென்ம விரோதிகளைப் போல அணுகி வருகிறார். ஓபிஎஸ் தரப்பினர் எந்த வகையிலும் இனி அதிமுகவுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்பதற்காக ஒரு வேலையைச் செய்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்களை கூண்டோடு கட்சியை விட்டுத் தூக்கிய எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் வகித்து வந்த பதவிகளையும் பறித்து தனது ஆதரவாளர்களுக்குக் கொடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளையும் மாற்ற ஈபிஎஸ் தரப்பு சபாநாயகருக்கு கடிதம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பன்னீர்செல்வம் நீக்கம்
ஓ.பி.எஸ் - ஈபிஎஸ் மோதலால் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டு அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பொதுக்குழுவிலேயே நீக்கப்பட்டனர். பின்னர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டனர். ஆனால், அவர்களை நீக்கியது செல்லாது எனக் கூறி ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி தரப்பினரை கட்சியை விட்டு நீக்கினார்.

ஓபிஎஸ் இடத்தில்
ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு அந்தப் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. ஓபிஎஸ் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடாவான வேலுமணி, சபாநாயகர் அப்பாவுவின் உதவியாளரிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

வேலுமணி கடிதம்
அந்தக் கடிதத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, ஆர்.பி.உதயகுமார் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அதனை அதிகாரப்பூர்வமாக நியமிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றக்கூடாது என ஏற்கனவே ஓபிஎஸ் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் கடிதம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அப்பாவுதான் இனி இறுதி முடிவு எடுப்பார்.

இன்னொரு விஷயம்
மேலும், சட்டமன்றத்தில் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாகவும் அதிமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சியினர் ஒருபக்கம், எதிர்க்கட்சியினர் ஒருபக்கம், மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் அடுத்தடுத்து என சட்டமன்றத்தில் இருக்கை ஒதுக்கப்படுவது வழக்கம். ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் அருகருகே அமர்ந்திருப்பார்கள். இப்போது, அதிமுகவில் மோதல் எழுந்திருப்பதால், ஓபிஎஸ் தரப்பினரை கட்சியில் இருந்தே நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சீட்டை மாற்றவும்
இதனால், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய எம்.எல்.ஏக்களை முன்பு இருக்கும் இருக்கைகளில் அதிமுக எம்.எல்.ஏக்களோடு அமர வைக்காமல், வேறு பக்கம் இருக்கை ஒதுக்குமாறும், புதிதாக எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்பி உதயகுமார், துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு முன்புறம் இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் கோரியிருப்பதாகத் தெரிகிறது.

ஓபிஎஸ் மகன்
அதிமுக சார்பில் மக்களவையில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு எம்.பியான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தையும் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதோடு அ.தி.மு.க எம்.பி மற்றும் மக்களவைக் குழுத் தலைவர் என்ற அந்தஸ்துடன் இருக்கும் ஓ.பி.ரவீந்திரநாத்தின் அங்கீகாரத்தைக் குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். ஓ.பி.ரவீந்திரநாத் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தகவலை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

நிழல் கூட படக்கூடாது
கட்சியிலும், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ஓபிஎஸ் தரப்பினரை முழுமையாக ஓரங்கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் தரப்பினர் சட்டமன்றத்தில் அமரும் இருக்கை கூட அதிமுகவினருக்கு இடையே இருக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து கறாராக களமிறங்கியிருப்பது அதிமுகவுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈபிஎஸ் தரப்பின் இந்தக் கோரிக்கை ஏற்கப்படுமா என்பது சபாநாயகர் அப்பாவுவின் கையில் தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications