விட்டதைப் பிடிக்க ரெடி.. ஆதரவாளர்களிடம் ஓபிஎஸ் கேட்ட ஒரு கேள்வி.. க்ரீன் சிக்னல் - விரைவில் ரிலீஸ்!
சென்னை : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறார் ஓபிஎஸ்.
டெல்லிக்கு சென்று திரும்பியபோதே தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்லும் திட்டத்தோடு தான் வந்தார் ஓபிஎஸ். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது.
இந்நிலையில், சுற்றுப்பயணத் திட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய தனது ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒற்றைத் தலைமை
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் ஜூன் 14ஆம் தேதி நடந்த அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் வெடித்த நிலையில், அதிமுகவில் தொடர் பரபரப்புகள் ஏற்பட்டு, பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றப் படியேறிய நிலையில், ஓபிஎஸ்ஸின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஆதரவு தேடி
கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிய நிலையில் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியைச் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச முயன்றார. ஆனால், அதற்கு பிரதமர் நேரம் ஒதுக்காத நிலையில் பாஜக மேலிட புள்ளிகளிடம் பேசிவிட்டுத் திரும்பினார். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுற்றுப்பயணம் செய்து அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களின் ஆதரவைப் பெற அவர் திட்டமிட்டிருந்தார். இதற்காக தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குச் சென்றிருந்தார்.

திட்டத்தை தடுத்த ஈபிஎஸ்
ஆனால், அதற்குள் எடப்பாடி பழனிசாமி திடீரென தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை அறிவித்த நிலையில், அவசர அவசரமாக சென்னைக்கு அடித்துப் பிடித்துக் கிளம்பினார் ஓபிஎஸ். தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்திற்கு தடை பெறுவது குறித்த ஆலோசனைகள், சட்டப்பூர்வ முயற்சிகள் என அதோடு சுற்றுப் பயணத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் போனது.

பொதுச் செயலாளராக எடப்பாடி
இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதியன்று வானகரத்தில் பொதுக்குழு நடக்கும்போது, தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமைக் கழகத்திற்குள் புகுந்தார் ஓபிஎஸ். அப்போது ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். கடும் ரகளையால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கே சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஈபிஎஸ்.

ஆலோசனை
எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தை எதிர்த்தும், அவரது தரப்பினர் நடத்தும் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் தேர்தல் ஆணையத்தில் அப்பீல் செய்துள்ளார் ஓபிஎஸ். மேலும், அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தனது ஆதரவாளர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்.

சுற்றுப்பயணம்
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பயணித்து தொண்டர்களைச் சந்திக்கும் தனது திட்டத்தை இப்போது செயல்படுத்தலாமா என்பது பற்றியும் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக மோதல் பரபரப்புகள் அடங்குவதற்குள் இந்த நேரத்தில் தொண்டர்களைச் சந்திப்பதுதான் சரி என அனைவருமே தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பெரிய அளவில் தனது பயணத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தனக்கு நெருக்கமானவர்களிடம் ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளாராம்.

சுற்றுப் பயணத்தில் முழக்கம்
ஓபிஎஸ் தனது சுற்றுப்பயண திட்டத்தை விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சுற்றுப் பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமி இழைத்த துரோகங்களை பட்டியலிட்டு, கோடநாடு கொலை கொள்ளை விவகாரம், ஈபிஎஸ் ஆதரவாளர்களின் ஊழல்கள் ஆகியவற்றையும் பற்றி பிரதானமாக பேசி, மக்களிடையே தனக்கு ஆதரவு பெறத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பயணம் உறுதி
இன்று ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஓ.பன்னீர்செல்வம் விரைவில் புரட்சிப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி உட்பட அவர் பக்கம் உள்ள அனைவரும் சிறையில் இருப்பார்கள்" என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் தொடங்க இருப்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications