• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எப்போது கவிழப் போகிறது எடப்பாடி அரசு?

|
  மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடியை நோக்கி அஇஅதிமுக அரசு- வீடியோ

  -ஆர். மணி

  சென்னை: தமிழ் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக அரசு மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடியை நோக்கி மாநிலத்தை தள்ளிக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.

  காரணம் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்காக (அமமுக) அரசியல் பணியாற்றியதாக கூறி தற்போது எடப்பாடி அஇஅதிமுக வில் உள்ள எம்எல்ஏ க்கள் இரத்தின சபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாச்சலம்) மற்றும் பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏப்ரல் 26 ம் தேதி தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபாலிடம் ஒரு மனு கொடுத்ததுதான்.

  When will Edappadi Palanisami government fall

  ஏற்கனவே டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறி அடிப்படையில் அஇஅதிமுக எம்எல்ஏ க்களாக இருந்த 18 பேரின் பதவிகளை சபாநாயகர் பறித்தார். அதனை எதிர்த்து இந்த 18 பேரும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்களது பதவி பறிப்பு செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. இந்த 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 மக்களை தேர்தல் நடைபெற்றபோது வாக்கு பதிவு நடந்து முடிந்து விட்டது. இதனை தவிர்த்து மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 19 ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது.

  இந்த பின்புலத்தில்தான் மூன்று எம்எல்ஏ க்களுக்கு எதிராக சபாநாயகரிடம் புகார் மனுவை அரசு கொறடா கொடுத்துள்ளார் என்பதை நாம் பார்க்க வேண்டும். இவர்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் ஆகவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் அரசு கொறடா. உரிய நடவடிக்கையின் பொருள் சம்மந்தப்பட்ட மூவரின் எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும் என்பதுதான்.

  '’சம்மந்தப்பட்ட மூவரும் டிடிவி தினகரனின் கட்சிக்குச் சென்று களப்பணியாற்றிய விவரங்கள் எங்களிடம் உள்ளன. இதற்கான வீடியோ ஆதாரங்களை வைத்திருக்கிறோம். அதனால்தான் சபாநாயகரிடம் புகார் கொடுக்கப் பட்டிருக்கிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று எம்எல்ஏ க்கள் மீதும் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்’’ என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

  என்னவோ நடக்கிறது திமுக முகாமில்.. துரைமுருகன் பேட்டி உணர்த்துவது என்ன.. அதிமுக ஆட்சிக்கு ஆபத்தா?

  இந்த செயலை ஆளும் அஇஅதிமுக ஏன் தற்போது செய்கிறது என்பதுதான் பிரதான கேள்வி. இதற்கான காரணமாக விவரம் அறிந்த வட்டாரங்களில் பரவலாக சொல்லப் படுவது என்னவென்றால் நடந்த முடிந்த 18 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும், நடக்கவிருக்கும் 4 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் அஇஅதிமுக வுக்கு பெரிய வெற்றி கிடைக்காது, அப்படியே சில இடங்கள் கிடைத்தாலும், அது இழு, பறி யில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுவதில்தான் போய் முடியும். '’கரணம் தப்பினால் மரணம்’’ என்பார்களே அது போலத்தான். இந்த விவரங்களை அரசியல் கட்சி வட்டாரங்கள் மற்றும் உளவுத்துறை மூலமாக அறிந்த எடப்பாடி பழனிசாமி அரசுதான் இந்த நடவடிக்கையை தற்போது கையில் எடுத்திருக்கிறது என்று சொல்லப் படுகிறது.

  தமிழக சட்டப் பேரைவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை. 235. இதில் ஒரு உறுப்பினர் ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவருக்கு சபையில் வாக்களிக்கும் உரிமை கிடையாது. ஆகவே 234 என்று வைத்துக் கொள்ள வேண்டும். இந்த 234 பேரில் மூன்று பேர் தகுதி நீக்கம் செய்யப் பட்டால் சபையில் எண்ணிக்கை 231 ஆக வந்து விடும். இதில் சாதரண பெரும்பான்மை என்பது 116. தற்போது அஇஅதிமுக விடம் உள்ளது 114. இதில் மூன்று போனால் எண்ணிக்கை 111. ஆகவே 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் குறைந்தது நான்கு இடங்களில் வென்றால் கூட எடப்பாடி அரசு தப்பிப் பிழைத்து விடும். எப்படியென்றால் 111 + 4 என்பது 115 இடங்கள். இரு தரப்பும் சமமாக வந்தால் சபாநாயகர் தன்னுடைய வாக்கை ஆளும் தரப்புக்குப் போடுவது என்பது காலங்காலமாய் இருந்து வரும் மரபு. அதன்படி சபாநாயகரின் வாக்கும் சேர்ந்தால் 116 இடங்கள் எடப்பாடிக்கு கிடைத்து ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கூட அவரால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

  ஆனால் இவற்றை எல்லாம் விட முக்கியம் மத்தியில் யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்பதுதான். எல்லோருக்கும் தெரிந்த விஷயம் மத்தியில் உள்ள மோடி அரசுதான் தமிழக அரசை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பது. மே 23 ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டபின்னர் மத்தியில் யார் ஆளப் போகிறார்கள் என்பது தெரிந்து விடும். மோடி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால், 22 தொகுதிகளிலும் அஇஅதிமுக தோற்றாலும் எடப்பாடியால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

  ஆனால் மத்தியில் காங்கிரஸ் அல்லது மூன்றாவது அணி ஆட்சி வந்தால் அப்போது, 22 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் எடப்பாடி வென்றாலும் அவரால் தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்றால் அதற்கான பதில் கிட்டத்தட்ட இல்லை என்பதுதான். ஒரு வேளை 22 சட்டமன்ற தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியும், எம் பி தொகுதிகளிலும் குறைந்தது 8 லிருந்து 10 இடங்களாவது அஇஅதிமுக வென்றால் ஆட்சியை சிரமப்பட்டு தக்க வைத்துக் கொள்ள ஓரளவுக்கு சாத்தியக் கூறுகள் உண்டுதான். ஆனால் அது அவ்வளவு சுலபமானதல்ல. காரணம் மத்தியில் ஆட்சி அமைக்கப் போகிறவர்களின் அரசியல் கணக்குகளுக்கு பொருந்தியதாக எடப்பாடியின் கணக்குகள் இருக்க வேண்டும்.

  எடப்பாடி அரசின் ஆயுட்காலம் மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்களோ அவர்களது அரசியல் தலை விதியுடன் பிண்ணிப் பிணைந்ததாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். ஆகவே எடப்பாடி அரசு தப்பிப் பிழைக்குமா அல்லது கவிழ்ந்து விடுமா என்பது மத்தியில் மே 23 ம் தேதிக்குப் பிறகு அமையவிருக்கும் அந்த புதிய மத்திய அரசை சார்ந்ததாகவே இருக்கிறது.

  ஒரு மாநிலத்தில் ஒரு கட்சிக்கு போதிய எம்எல்ஏ க்கள் ஆதரவு கிடைத்தாலும் அந்த ஆட்சி ஆளுவதும், வீழுவதும் அதனது சொந்த பலத்தை நம்பியிராமல் மாறாக மத்தியில் அமையும் ஒரு ஆட்சியின் அரசியல் சதுரங்க விளையாட்டில் இருக்கறது என்பது இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய கேலிக்கூத்து என்றே நாம் சொல்ல வேண்டும்.

  இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை உருவாக்கிய மேதைகள் தங்களுடைய சவக்குழிகளில் நெளிந்து கொண்டிருப்பார்கள் (The forefathers of our constitution may be turning on their graves). எடப்பாடி அரசு தப்பிப் பிழைக்கலாம் அல்லது கவிழ்ந்து போகலாம். இதில் எது நடந்தாலும் அது இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை கேலிக்கூத்தாக ஆக்கியதாகவே முடியப் போகிறது என்பதே தற்போதய கள யதார்த்தம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Edappadi Palanisamy govt is in new crisis as the result date is nearing.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more