மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! அறிவிப்பு எப்போது? திடீரென எழுந்த கேள்வி! சட்டென வந்த பதில்!
சென்னை : நாளை உங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறதே.. எப்போது அமைச்சராக போகிறீர்கள். அது தொடர்பான அறிவிப்பு எப்போது வரும்" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். கட்சி தாண்டி திரைத்துறையிலும் உதயநிதி தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், உதயநிதி சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்..முதல்வர் ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்
இதையடுத்து கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகியும் பரம்பரை பரம்பரையாக கலைஞர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பழக்கமான குடும்பத்தினராக இருந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரனும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சர் பதவி
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதிகளையும் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு வர வேண்டும் என்றும், அவருக்கு உள்ள திறமைகளும் பயன்பட வேண்டும் என்பதால் அவரை அமைச்சராக வேண்டும் என கூறினார். தற்போது வரை பல கூட்டங்களில் அதனை பேசியும் வருகிறார்.

அமைச்சர்கள் கோரிக்கை
அதே போல அமைச்சர் சிவசங்கர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்வில் பேசும்போது , ஸ்டாலின் வழியில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாகவும், அவரை அமைச்சராக வேண்டுமென இரண்டாவது குரல் எழுப்பினார். திமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோரும் உதயநிதி அமைச்சர் ஆக வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர்.

அறிவிப்பு எப்போது?
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்னர் அது தள்ளிப்போனது. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டது போல் அமைச்சர் பதவியும் வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் இன்னும் சிறிது காலம் போகட்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும் , உதயநிதி ஸ்டாலின் தற்போதைக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என கூறியதால் அது தொடர்பான அறிவிப்புகள் வரவில்லை.

உதயநிதி பதில்
இருந்த போதும் திமுகவினர் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கையை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் எப்போது அமைச்சராவேன் என்பது குறித்து உதயநிதி ஸ்டாலினை வெளிப்படையாக பேசியிருக்கிறார். சென்னையில் இன்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பேருந்து நிறுத்த ஒலி அறிவிப்பு திட்டத்தை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சிவசங்கர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது 'நாளை உங்களுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறதே.. எப்போது அமைச்சராக போகிறீர்கள். அது தொடர்பான அறிவிப்பு எப்போது வரும்" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு 'முதலமைச்சர் தான் முடிவு செய்வார்' என சிம்பிளாக பதில் அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.