உலகில் டிராபிக் சிக்னலே இல்லாத ஒரே நாடு எது தெரியுமா? இந்தியாவின் பக்கத்திலேயே இப்படி ஒரு இடமா?
சென்னை: உலகில் டிராபிக் சிக்னல்களே இல்லாத ஒரு நாடு இருக்கிறது. அதுவும் நம் நாட்டின் பக்கத்திலேயே அந்த நாடு இருக்கிறது. அதற்காக இலங்கை என்றோ, நேபாளம் என்றோ, வங்கதேசம் என்றோ நினைக்க வேண்டாம். ரிங் ரோடுகளும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி கொள்ளாமல் செல்லும் அளவுக்கு அந்த நாட்டில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இன்று பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். அதிலும் இந்தியா போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் சொல்லவே தேவையில்லை. மெட்ரோ நகரங்கள் இன்றி அதற்கு அடுத்த நிலை நகரங்களில் கூட கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதை காண முடியும்.

டிராபிக் சிக்னலே இல்லாத நாடு
அதிலும் பீக் நேரங்களில் சலைகளில் சாரை சாரையாக வாகனங்கள் அணிவகுத்து செல்லும். போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளாமல் பயணிப்பதற்கு ஏதுவாக சிக்னல்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. சில நிமிடங்கள் சிக்னல்கள் செயல் இழந்தாலே வாகனங்கள் முண்டியடித்துக்கொண்டு அந்த இடத்தில் ஒரு களேபரமே ஏற்படும் சூழல் இருப்பதை காண முடியும். வளர்ந்த நாடுகளில் கூட போக்குவரத்து ஒழுங்குக்கு சிக்னல்களே தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றன.
சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.. உலகில் போக்குவரத்து சிக்னல்களே இல்லாத ஒரு நாடு இருக்கிறது. அதுவும் இந்தியாவின் பக்கத்திலேயே அந்த நாடு இருக்கிறது. உடனே இலங்கையா, நேபாளமா.. வங்கதேசமா.. இங்கெல்லம் இதற்கு சான்ஸே இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆம் அது உண்மைதான் இந்த மூன்று நாடுகளும் இல்லைதான்.. இந்தியாவில் பக்கத்திலேயே இருக்கும் மற்றொரு நாடான பூடான் தான் அது..
இயற்கையான மலை அமைப்பு
மலைப்பிரதேசங்களும் இயற்கை எழில் கொஞ்சும் அழகும் கொண்ட பூடான் முற்றிலும் வித்தியாசமான நாடு. மன்னராட்சி நடைபெறும் பூடானின் மக்கள் தொகை சுமார் 8 லட்சமே ஆகும். பூடான் தலைநகரான திம்பு உள்பட அந்த நாட்டில் எங்குமே போக்குவரத்து சிக்னல்கள் கிடையாது. பிசியான நகரங்களில் போக்குவரத்து போலீசாரே நின்று ஹேண்ட் சிக்னல்கள் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விடுகிறார்கள்.
1990 -களில் டிராபிக் சிக்னல்கள் பரவலாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மக்கள் மத்தியில் இதற்கு அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அந்த சிக்னல்களை நீக்கிவிட்டு மேனுவல் சிக்னல்களுக்கு மாறிவிட்டார்கள். பூடான் சாலைகளும் ரிங் ரோடுகளும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிகொள்ளாமல் செல்லும் அளவுக்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதுபோக அந்த நாட்டின் இயற்கையான மலை அமைப்புகளும் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத நிலையை உருவாக்குகின்றன.
ஹாரன்கள் அடிக்க மாட்டார்கள்
இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல்கள் பெரிதாக ஏற்படுவது இல்லை. பூடான் டிரைவர்களும் சாலை போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுகிறார்கள். பாதசாரிகளும் சாலையை கடக்க எங்கு பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறதோ அங்கு மட்டுமே கடந்து செல்வார்கள். தேவையின்று ஹார்ன்களை அடிப்பதை அங்குள்ள வாகன ஒட்டிகள் விரும்புவது இல்லை. பூடானின் சுற்றுச்சுசூழல் கொள்கைகளும் இதற்கு தடை விதிக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் அங்கு சிக்னல்களே இல்லாவிட்டாலும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவது இல்லை.
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் நேபாளத்தையும் பிரிக்கும் இடமாக பூடான் உள்ளது. இந்தியாவில் இருந்தே பெட்ரோலிய பொருட்கள் பெருமளவு பூடானுக்கு செல்கிறது. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும் இருக்கும் பூடானுக்க்கு இந்தியர்கள் சென்று வர பாஸ்போர்ட் தேவையில்லை. அடையாள ஆவணம் ஏதேனும் ஒன்றை காட்டி சாலைமார்க்கமாகவே செல்ல முடியும். சுற்றுலாவுக்கு பெயர் போன நாடுகளில் ஒன்றாக பூடான் உள்ளது.


Click it and Unblock the Notifications
