வெள்ளை அறிக்கை: பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு சறுக்கிய தமிழகம்
சென்னை: நாட்டின் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானத்தில் 4-ம் இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு தமிழகம் சறுக்கியுள்ளது; அதேபோல் பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு கீழிறங்கிவிட்டது என நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 10 ஆண்டுகால நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார் இதில் தனிநபர் வருமானத்தில் தமிழகத்தின் நிலைமை தொடர்பான கூறப்பட்டுள்ளதாவது:

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் 2006-07 முதல் 2010-11 வரையில் 9.37% ஆக இருந்தது. 2011-12 முதல் 2015-16 வரையில் 6.32% ஆக பெருமளவில் சரிவடைந்தது. பின் 2016-17 முதல் 2019-20 வரையில் 6.70% ஆக ஓரளவு உயர்ந்தது.
இந்திய அளவில் 2006-07 முதல் 2010-11 வரையில் தனிநபர் வருமானம் 7.12% ஆகவும்; 2011-12 முதல் 16 வரை 4.84% ஆகவும் 2016-17 முதல் 2019-20 வரை 5.24% ஆகவும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
2010-11 முதல் 2012-13 வரையிலான 3 ஆண்டு காலத்துக்கு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானத் தர வரிசையில் பெரிய மாநிலங்களுக்கு இடையே தமிழ்நாடு 4-வது இடத்தை வகித்தது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு குஜராத்துக்கு இணையாகவும் பஞ்சாப், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு மேலாகவும் இருந்தது.
2016-17 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானத்தில் பெரிய மாநிலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் நிலை 5-வது இடத்துக்கு சறுக்கிறது. இந்த கால கட்டத்தில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானத்தில், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்கள் தமிழ்நாட்டைக் காட்டிலும் முன்னேறிச் சென்றன.

2004-05 முதல் 2011-12 வரை சராசரி வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய மாநிலங்களில் 3-வது இடத்தைப் பிடித்தது. ஆனால் 2012-13 முதல் 2018-19 வரை 11-வது இடத்துக்குப் போய்விட்டது தமிழகம்
தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 2006-11-ம் ஆண்டில் 10.5%-ல் இருந்து 2016-20 ஆம் ஆண்டில் 7.22% ஆக குறைந்தது.
பணமதிப்பிழப்பு, அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, கொரோனா ஊரடங்கு போன்றவை வளர்ச்சியைப் பாதித்தது. மற்ற வளமான மாநிலங்களைக் காட்டிலும் நிதி ஒதுக்கம் இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.

நிலையில்லா துறைவாரியான வளர்ச்சி, போட்டித் திறன் இல்லாமை ஆகியவை விரைவான முறையில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள். தொழில், சேவைத் துறைகள் போதுமான வளர்ச்ச்சி பெறவில்லை. இதுவிரைவாக சரி செய்யப்படவில்லை எனில் ஒப்பீடு மாநிலங்களுடன் தமிழ்நாடு மிகவும் பின் தங்கிவிடும்.
தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு மாநில தனிநபர்களின் நல்ல பொருளாதார நிலையை குறிக்கிறது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இவ்வாறு வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications