மகளிர் உரிமைத்தொகை யாருக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை.. மிக தெளிவாக சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்பட உள்ளது. தகுதி வாய்ந்த மகளிருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் , குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் 100 சதவீதம் பேரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் எனவும் ஏழை எளிய மக்களுக்கு 100 சதவீதம் இந்த உதவித்தொகை கிடைக்கும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்தார்.

ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் புரட்சி ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார். மேலும் உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறியிருந்தார்.

அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் தேர்தல் அறிக்கையில் கூறியது போல அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை யாருக்கு கிடைக்கும் என்பது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார். இது தொடர்பாக மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

உரியவர்களுக்கு இது கொடுக்கப்படும்
7 ஆயிரம் கோடி அறிவித்து இருக்கிறீர்கள். 2 கோடியே 10 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இத்தனை பேருக்கும் எப்படி கொடுப்பீர்கள் என்று கேட்கிறார்கள். நிதி அமைச்சர் மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். உரியவர்களுக்கு இது கொடுக்கப்படும் என்று சொன்னார். உரியவர்கள் யார் என்றால் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் 100 சதவீதம் பேரும் உரியவர்கள். ஏழை எளிய மக்களுக்கு 100 சதவீதம் இந்த உதவித்தொகை கிடைக்கும்.

எங்கே கொடுக்கனுமோ அங்கே..
பங்களாவில் இருப்பவர்களுக்கா கொண்டு போய் கொடுக்க முடியும். எங்கே கொடுக்கனுமோ அங்கே கொடுக்க வேண்டும். அதைத்தான் உரியவர்களுக்கு கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அளித்த பேட்டியில் மகளிர் உரிமைத் தொகை யாருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

முதியோர் உதவித்தொகை பெறும் மகளிருக்கு
இந்த திட்டம் குறித்து முதல்வரின் தலைமையில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும். இந்த அரசாணை வெளியாகும் போது யார்-யாருக்கு, எத்தனை பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்பது தெரியவரும். முதியோர் உதவித்தொகை பெறும் மகளிருக்கு இந்த பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவர்கள் ஏற்கனவே ஒரு திட்டத்தில் பயன் அடைந்து வருகிறார்கள். பெரிய பெண் தொழில் அதிபர்கள் உரிமைத்தொகை கேட்க மாட்டார்கள். லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ஊதியம் பெறும் பெண்கள் இந்த உரிமைத்தொகையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது எனது கருத்து. எனவே தகுதி வாய்ந்த மகளிருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications