ஆளுநருக்கு நீதிமன்றம் கொடுத்த அடி; சட்டரீதியாக வெற்றிபெற்ற ஸ்டாலின்! - 6 பேர் விடுதலை சொல்வது என்ன?
சென்னை: 'ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்வதில் அதிகாரம் யாருக்கு?' என்ற நீண்டகால கேள்விக்கு உச்சநீதிமன்றம் கடந்த மே 18 ஆம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்ததன் மூலம் பதில் கொடுத்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிரம்பிய தமிழக சட்டப்பேரவையில் அமைச்சரவை கூடி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மதிப்பளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மௌனம் காத்துவந்தார். 'அவரது மௌனம் சட்டத்துக்குப் புறம்பானது' எனக் கூறி நீதிமன்றம் சென்றது தமிழக அரசு.
'நியமன பதவியில் இருக்கும் ஓர் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்பட வேண்டும்' எனத் தொடர்ந்து திமுக தனது வாதத்தை முன்வைத்தது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, ஆளும்கட்சியாக வந்து ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தபோதும் சரி, இந்த நிலைப்பாட்டில் அக்கட்சி உறுதியாக உள்ளது.

கேள்விக்குறியான ஆளுநரின் அதிகாரம்
ஆனால், கடந்தகால வரலாற்றில் பொறுப்பிலிருந்த ஆளுநர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் ஏறக்குறைய ஒரே அணுகுமுறையையே கடைப்பிடித்து வந்துள்ளனர். அதிலும், 'ஆளுநர் ரவியின் செயல், அரசியல் கலந்ததாக உள்ளது' என திமுக குற்றம் சுமத்தியது.
அதை உறுதி செய்யும் நோக்கில், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிக்கு சாதகமாக பேரறிவாளன் விடுதலை அமைந்தது. இப்போது அதன் அடுத்தகட்ட வெற்றியாக நளினி உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தால் கடந்த 11 ஆம் தேதி நளினி உள்ளிட்ட ஆறு பேரும் அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் விடுதலைக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜூவின் ஆதரவு
"ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலிருந்த கொலையாளிகளை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இருப்பினும் சிலரின் பழிவாங்கும் எண்ணம் இன்னும் ஓய்ந்தபாடில்லை" என்று கருத்து தெரிவித்துள்ளார், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.
ஆக, 'இந்த 6 பேரின் விடுதலை நியாயமானதே' என்ற பொருளில்தான் அவர் இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார் என நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பிரபு, "18.5.2022-ல் நீதிபதி நாகேஷ்வர ராவ் மற்றும் நீதிபதி கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்தார்களோ, அதே முகாந்திரத்தின் அடிப்படையில்தான் நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்துள்ளனர்'' என்றார்.
தொடர்ந்து பேசிய பிரபு, ''நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில், 'பேரறிவாளன் வழக்கின் கூறுகள் இவர்களுக்கும் பொருந்துமா?' எனக் கேட்டார்கள். நாங்கள் அதை விளக்கினோம். மேலும், 'இந்த வழக்கில் வேறு ஏதேனும் வேறுபாடுகள் உள்ளனவா?' எனத் தமிழக அரசின் வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதியிடம் கேட்டார்கள்.
அவர், 'பேரறிவாளனுக்கு உண்டான அனைத்து விதிகளும் இவர்களுக்கும் பொருந்தும். முன்பே, ஆளுநரின் தாமதத்துக்கு நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்துவிட்டது. ஆகவே இந்த 6 பேரை விடுவிக்கலாம்' எனக் கூறினார். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த வழக்கில் தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறிய விளக்கமே, விடுதலைக்கு மிக முக்கியமான காரணியாக அமைந்தது. மேலும், நீதிபதிகள் 'சட்டப்படி ஏற்கெனவே பேரறிவாளன் வழக்கில் ஒரு முடிவை எடுத்துவிட்டோம்' என்றனர். ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பது தவறு என்பதை பேரறிவாளன் விடுதலையின்போது நீதிமன்றம் கூறிவிட்டது.

மத்திய அரசுக்கு பங்களிப்பு இல்லை
மத்திய அரசு சார்பில் வழக்கறிஞருக்கு விளக்கம் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. எனவே, அரசுத் தரப்பு வழக்கறிஞர், 'இந்த வழக்கில் மத்திய அரசுக்கு எந்தவித பங்களிப்பும் இல்லை. ஆகவே, மத்திய அரசு தரப்பில் விளக்கம் கேட்காமலே விடுதலை செய்யலாம்' என்ற வாதத்தை முன்வைத்தார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
மாநில அரசின் அமைச்சரவைக்கு உள்ள அதிகாரத்தைக் கருத்தில் கொண்டே இந்த விடுதலையை நீதிமன்றம் அளித்துள்ளது. 'அந்த அதிகாரத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது' என்பதை நீதிமன்றம் இந்த விடுதலையின் மூலம் உறுதி செய்துள்ளது.
'ஆளுநரின் நடவடிக்கை சரியானதல்ல' என்பதை தமிழக அரசு தொடர்ந்து உணர்த்திக் கொண்டே உள்ளது. அதற்கான ஒரு சான்றுதான் இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு. மாநில அரசு இவர்களை விடுதலை செய்ய முடிவெடுத்த பிறகும் எட்டு ஆண்டுகள் தாமதமானது வேதனை அளிக்கிறது. அதற்கு ஆளுநர் ஒரு காரணியாக இருந்துள்ளார்" என்கிறார் பிரபு.
ஆறு பேரின் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மக்களாட்சிக் கோட்பாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேரின் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் முன்வைத்த விளக்கம்
மக்கள் அதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட்டு வந்த ஆளுநரின் நடவடிக்கைக்கு சட்டரீதியாக ஒரு தீர்வை உச்சநீதிமன்றத்தின் மூலம் திமுக போராடிப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றுத் தீர்ப்பை முன்வைத்து இன்னும் பல வழக்குகள் நீதிமன்றத்துக்கு வரும் எனத் திடமாக நம்பலாம்.
வழக்கறிஞர் பிரபு ஒரு விஷயத்தை மிகத் தெளிவாக முன்வைத்திருந்தார். அதாவது, இந்த ஆறு பேரின் விடுதலை தொடர்பாக ஆரம்பத்தில் மத்திய அரசு தரப்பில் பங்கேற்று வந்த வழக்கறிஞர், இறுதிக்கட்ட தீர்ப்பின்போது எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை. எனவே, 'மத்திய அரசின் விளக்கம் தேவையில்லாமலே விடுதலை செய்யலாம்' எனத் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டே விடுதலை செய்துள்ளனர்.
ஆனால், அப்போது மௌனம் காத்த மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் 7 பேரின் விடுதலையை எதிர்த்து மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் முடிவு எடுக்காமல் அமைதியாக இருந்து முடக்கப் பார்த்தார். இப்போது மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வது மூலம் இந்த வழக்கை மேலும் இழுத்தடிக்க விரும்புகிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்தநிலையில்தான் ஸ்டாலினின் அறிக்கை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அவர், 'பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், முருகன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மு.கருணாநிதி ஆட்சியில் நடந்தது என்ன?
நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, முதன்முதலில் 2000 ஆம் ஆண்டிலேயே ஆயுள் தண்டனையாக மாற்றியது முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசுதான்.
எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தமிழ்நாடு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தது, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும் முதலமைச்சர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு இவர்களின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம்.
மாநில அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதற்கான அனுமதியை வழங்கத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தோம். பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான விசாரணையிலும், மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் சட்டப்பிரிவுகளை மையப்படுத்தி வாதங்களை முன்வைத்து வாதாடினோம்.
'மாநில அமைச்சரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில், பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டது. ஏழு பேர் விடுதலையில் இது முதல்கட்ட வெற்றியாக அமைந்தது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலையானது இரண்டாவது வெற்றி. ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி இது.
மனிதநேயத்துக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி இது என்று தெரிவித்துக் கொள்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும் ஆதாரமாக அமைந்திருக்கிறது. மக்களாட்சிக் கோட்பாட்டுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிந்துரையாக இத்தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்புக்குரியது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் வரவேற்பு
'திமுக அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருந்தார்' என்பதை பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கையும் சுட்டிக் காட்டுகிறது. 'அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் ஏற்றிருந்தால் 4 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் விடுதலை ஆகியிருப்பார்கள்' என்கிறார் அவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும், 'ஆளுநரும் மத்திய அரசும் காலம் தாழ்த்தியதால் 6 பேரின் விடுதலை தாமதமானது" என்கிறார். இந்த வழக்கில் சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அவரும், 'ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது சட்டப் பிழை என்பதற்கான சான்றுதான் இந்தத் தீர்ப்பு' என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
ஆறு பேரின் விடுதலையை பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரும் ஆதரித்துள்ளனர்.
அதேநேரம், 'ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுவித்தது சரியல்ல' என்ற கருத்தை இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களும் காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
'நளினி உள்பட ஆறு பேரும் குற்றவாளிகள் அல்ல என யாரும் கூறவில்லை. மாறாக, குற்றவாளிகளுக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின் அடிப்படையிலேயே விடுதலையை கோரினர். அதை உணர்ந்தே நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
இதற்காக, ஆளுநர் வழியாக முதலில் மறைமுகமாக முட்டுக்கட்டை போட்ட மத்திய அரசு, இப்போது சீராய்வு மனு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது. இதையும், திமுக அரசு சட்டரீதியாகவே சந்திக்க உள்ளது. வழக்கின் முடிவில், சட்டப் போருக்கான இறுதி விடை கிடைக்கும்.
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications