தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநர் ஆன RSS காரியகர்த்தா.. விஜய்யை திணற விட்ட ஆர்.வி. அர்லேகர்.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பொறுப்பு ஆளுநராகச் செயல்பட்டு வந்த அர்லேகர் தற்போது முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். யார் இவர்?

சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து செயல்பட்ட அர்லேகர், பாஜக சார்பில், எம்.எல்.ஏவாகவும், சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். இப்போது,தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Arlekar

யார் இந்த அர்லேகர்?

கோவா மாநிலம் பனாஜியில் 1954ல் பிறந்தவர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். 1961ல் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவா விடுதலை பெற்ற பிறகு இருந்த குழப்பமான அரசியல் சூழலில் வளர்ந்தவர் அர்லேகர். தனது சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்தார் அர்லேகர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975ல் அறிவித்த எமெர்ஜென்சி காலம் அர்லேகருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவரும், அவருடைய தந்தையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு இணைந்து எமெர்ஜென்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாஜகவில் அர்லேகர்

1989-ல் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். அவர் கட்சியில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தார். குறிப்பாக கோவா மாநில பாஜக பொதுச் செயலாளர், தெற்கு கோவா பாஜக தலைவர் மற்றும் 2003 முதல் 2007 வரை கோவா மாநில பாஜக தலைவராகவும் பணியாற்றினார்.

2002 ஆம் ஆண்டு வாஸ்கோ தொகுதியில் இருந்து முதன்முறையாக கோவா சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் அர்லேகர். 2007 ஆம் ஆண்டு வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் 2012 ஆம் ஆண்டு வட கோவாவில் உள்ள பெர்னெம் தொகுதியிலிருந்து மீண்டும் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கோவா சட்டப்பேரவை சபாநாயகராகவும் செயல்பட்டார்.

சபாநாயகராக மிகப்பெரிய முயற்சி

கோவா சபாநாயகராக இருந்த காலத்தில், இந்திய சட்டமன்ற வரலாற்றில் மிகப்பெரிய சீர்திருத்தம் ஒன்றை மேற்கொண்டார் அர்லேகர். ஒட்டுமொத்தச் சட்டமன்றத்தையும் காகிதங்களே இல்லாத காகிதமில்லாச் சட்டமன்றமாக மாற்ற முயற்சி எடுத்தார்.

ஆரம்பத்தில் பல எம்.எல்.ஏ-க்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சிலருக்கு டேப்லெட்டுகள் மற்றும் டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் இருந்தது. அவரது தலைமையின் கீழ் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் "காகிதமில்லாச் சட்டமன்றமாக" கோவா உருவெடுத்தது.

கோவா அமைச்சர்

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பிறகு கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆனார். அந்த சமயத்தில் கோவாவின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு அர்லேகரின் பெயர் அடிபட்டது. ஆனால், பாஜக தலைமை அவருக்குப் பதிலாக பர்சேகரைத் தேர்வு செய்தது.

2015-ல், கோவா முதல்வர் பர்சேகர் தலைமையிலான அமைச்சரவையில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சாராக பணியாற்றினார். 2017 வரை இரண்டு ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார்.

ஆளுநர்

ஜூலை 2021-ல் அர்லேகர் இமாச்சலப் பிரதேச ஆளுநராகப் பொறுப்பேற்றார். பின்னர், பிப்ரவரி 2023 ல் பீகார் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 2025 ல் கேரள மாநில ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநர் அர்லேகர் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநராக இருந்த அர்லேகர் தான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விஜய்க்கு சிக்கல் கொடுத்த ஆளுநர்

தவெக 108 இடங்களில் வென்றபோதிலும் பெரும்பான்மை கிடைக்காததால் அவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் இழுத்தடித்தார் அர்லேகர். அடுத்தடுத்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உரிமை கோரிய போதிலும், பெரும்பான்மை ஆதரவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மெஜாரிட்டி நம்பருடன் வந்தால் தான் ஆதரவு என்று ஆளுநர் உறுதியாகக் கூறினார்.

அப்போது ஆளுநர் பின்னால் பாஜக இருப்பதாகவும், அதிமுக, திமுக இணைந்து ஆட்சியமைக்க ஆளுநர் மறைமுகமாக காலந்தாழ்த்துவதாகவும் விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன.

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநர்

இந்த நிலையில், தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநர் பொறுப்பில் இருந்து ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விடுவிக்கப்பட்டு தமிழ்நாடு ஆளுநராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கேரளம் மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+