எலான் மஸ்கின் “ரைட் ஹேண்ட்”.. ட்விட்டரை ஆளப் போகும் சென்னை இளைஞர் - யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?
சென்னை: உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதன் சிஇஓ உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்த நிலையில், சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு ட்விட்டரில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இந்தியாவை சேர்ந்த ட்விட்டர் சி.இ.ஓவான பராக் அகர்வால், நிறுவனத்தின் தலைமை சட்ட வல்லுநர் விஜயா கட்டே உள்ளிட்டோரை எலான் மஸ்க் பணியிலிருந்து நீக்கினார்.
அவர்களுடன் ட்விட்டரில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் எலான் மஸ்க் வருகைக்கு பின் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள். அதே நேரம் தனக்கு நெருக்கமான புதிய வட்டத்தை எலான் மஸ்க் உருவாக்கியுள்ளார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன்
இந்த குழுவின் முக்கிய நபராக கருதப்படுபவர் ஸ்ரீராம் கிருஷ்ணன். சென்னையை பூர்வீகமாக கொண்ட மென்பொறியாளரான இவர், இதற்கு முன் ட்விட்டரில் பணிபுரிந்து இருக்கிறார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பலர் பணி நீக்கம் செய்யப்பட்ட அதே நேரம், ஸ்ரீராம் கிருஷ்ணனை மீண்டும் பணியில் சேருமாறு அழைத்து இருக்கிறார்கள்.

மறுக்கும் ஸ்ரீராம்
ட்விட்டர் தலைமை செயலதிகாரியாக இருந்த பராக் அகர்வால் நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு ஸ்ரீராம் கிருஷ்ணனின் பெயர் பேசுபொருளாக மாறி இருக்கிறது. ஆனால், அவருக்கு ட்விட்டர் நிறுவனத்தில் வழங்கப்பட்டு உள்ள பொறுப்பு குறித்து தெரிவிக்கப்படவில்லை. பல ஊடகங்கள் ஸ்ரீராம் கிருஷ்ணனை தொடர்புகொண்டு விபரங்களை கேட்டபோதும் அவர், அதுகுறித்து தெரிவிக்க மறுத்து உள்ளார்.

நடுத்தர குடும்பம்
சென்னையை பூர்வீகமாக கொண்ட சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் கிருஷ்ணன். கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த கிருஷ்ணன், "1990 களின் பிற்பகுதியில் ஒரு கணினி வாங்க நான் சிரமப்பட்டேன். அப்போது அதன் மதிப்பு ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை இருந்தது. எது என்னுடைய தந்தையின் ஊதியத்தின் பெரும் பங்காகும். படிப்பதற்காக கணினி வேண்டும் என்று நான் அதை வாங்கிக் கேட்டேன்." என்றார்.

மென்பொருள் ஆர்வம்
அந்த கணினிதான் தன்னுடைய வாழ்க்கையை மாற்றியதாக தெரிவித்த அவர், இணையதள சேவையை வைக்க பொருளாதார வசதி இல்லாமல் கஷ்டப்பட்டதாக கூறி உள்ளார். ஆனாலும் பல்வேறு கஷ்டங்களை தாண்டி மென்பொருள் புரோகிராமிங்குகளை கற்பதில் ஆர்வம் காட்டினார். இதற்காக மென்பொருள் புத்தகங்களை வாங்கி அடிப்படையில் இருந்து அவர் கற்றுக்கொண்டார்.

அண்ணா பல்கலை மாணவன்
பள்ளிப்படிப்பை நிறைவு செய்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார் ஸ்ரீராம் கிருஷ்ணன். அங்குதான் தன்னுடைய எதிர்கால மனைவியான ஆர்த்தி ராமமூர்த்தியை அவர் சந்தித்து இருக்கிறார். இருவரும் கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications