சட்டென முதல்வர் அறைக்கு போன பாஜக புள்ளி.. பின்னணியில் அமித்ஷா அசைன்மென்ட்?- 4 கேள்வி! அப்படி போகுதா?
சென்னை : சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது பல்வேறு அரசியல் யூகங்களைக் கிளப்பி விட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக விசிட்டுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்திருப்பது விவாதமாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி ஆகியோர் சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.
தங்களது தொகுதி சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக பாஜக எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர். அதேபோல, பொன்.ராதாகிருஷ்ணன், மத வழிபாட்டு தலம் கட்ட வேண்டுமானால் அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றுத் தான் கட்ட வேண்டும் எனும் நிலையை உருவாக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

முதல்வர் - பாஜக மீட்டிங்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி மற்றும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்று சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களுடைய தொகுதிப் பிரச்சனைகள் தொடர்பாக முதல்வரிடம் பேசி, கோரிக்கை மனுக்களை அளித்ததாக தெரிவித்தனர்.

பொன்னார் பேட்டி
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மண்டைக்காடு கலவரம் குறித்த வேணுகோபால் கமிஷன் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசினோம். வேணு கோபால் கமிஷன் அறிக்கையை அரசாணையாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம். மதக் கலவரங்களை தடுக்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில், மத வழிபாட்டுத் தலம் கட்ட வேண்டுமானால் அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றுத் தான் கட்ட வேண்டும் என்கிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம் எனத் தெரிவித்தார்.

அமித்ஷாவின் வருகைக்குப் பிறகு
ஆளுங்கட்சிக்கு எதிராக நாளொரு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பாஜக எம்.எல்.ஏக்கள் திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது, குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து, முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைகள் கூறிவிட்டுச் சென்றபிறகு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டது. தொகுதி பிரச்சனைகள் தொடர்பாக சந்தித்தோம் என அவர்கள் கூறினாலும், இதில் வேறு அரசியல் காரணங்கள் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்தது.

தொகுதி பிரச்சனை
2011ல் அதிமுக வென்ற பிறகு, கூட்டணி கட்சியாக இருந்த தேமுதிகவில் இருந்து அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை தொகுதிப் பிரச்சனை தொடர்பாக சந்தித்தனர். பிறகு அவர்கள் அதிமுகவுக்கு தாவினர். ஆனால், இப்போது மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவின் எம்.எல்.ஏக்களுக்கு அப்படியான எந்த அரசியல் அவசியமும் இல்லாதபோது முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன் என்பதுதான் குழப்பத்தை ஏற்படுத்தியது.

4 கேள்விகள்
மூன்று பாஜக எம்.எல்.ஏக்கள் ஒரே நேரத்தில் தொகுதிப் பிரச்சனைக்காக ஸ்டாலினை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன வந்தது? அப்போது, எம்.எல்.ஏ அல்லாத முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்னாரும் ஏன் சென்றார்? பாஜக எம்.எல்.ஏக்கள் மூவருக்கும் பொன்னார் நெருக்கமானவராகவும் இல்லாதபோது, இவர்கள் நால்வரும் இணைந்து சென்றது ஏன்? பொன்.ராதாகிருஷ்ணன் தனியாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தால் பல கேள்விகள் எழும் என்பதற்காக எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்றாரா என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுந்தன.

அமித்ஷா அசைன்மென்ட்
மத்திய உள்துறை அமித்ஷா, கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு, அண்ணாமலை, எல்.முருகன் மற்றும் சிலரோடு தனியாக ரகசியமாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமித்ஷா கொடுத்த அசைன்மென்ட் படியே, எம்.எல்.ஏக்களுடன் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தாரா? பொன்னார் திடீரென தனியாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தால் பல கேள்விகளும் எழும் என்பதற்காக எம்.எல்.ஏக்களை தொகுதி பிரச்சனை என அழைத்துச் சென்றாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஆளுநர்?
தமிழக பாஜக தலைவர்களில் ஒருவர் விரைவில் புதிய ஆளுநராக வரவிருப்பதாகப் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. அதில் பொன்.ராதாகிருஷ்ணனின் பெயரும் அடிபட்டு வருகிறது. இந்த பின்னணியில் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வரை ஸ்டாலினை சந்தித்துள்ளதும் கவனிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தரப்பில் இருந்து எந்த விளக்கங்களும் அளிக்கப்படாத நிலையில், பாஜக - திமுக இடையேயான நெருக்கம் அரசியல் பார்வையாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

மம்தா - ஸ்டாலின்
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு குடைச்சல் கொடுத்து வந்த ஜெகதீப் தங்கர் துணை குடியரசுத் தலைவர் ஆக்கப்பட்ட பிறகு அம்மாநில பொறுப்பு ஆளுநராக மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் நியமிக்கப்பட்டார். அவர் மம்தாவுடன் இணக்கத்தைப் பேணி வருகிறார். சமீபத்தில் கூட இல.கணேசன் வீட்டு நிகழ்வுக்காக மம்தா சென்னை வந்தார். அதேபோல, தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி திமுக அரசுக்கு குடைச்சலாக இருந்து வருகிறார். இந்நிலையில், வேறொருவரை தமிழக ஆளுநராக நியமித்து ஸ்டாலினுடன் இணக்கத்தைப் பேண பாஜக விரும்புகிறதா என்ற யூகங்களும் எழுந்துள்ளன.











Click it and Unblock the Notifications