முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக டிராபிக்கில் நீதிபதி தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்? என்ன நடந்தது?
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்காக சாலையில் வாகனங்களை நிறுத்தியபோது அதில் ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் வாகனமும் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் உள்துறை செயலாளரை காணொளி மூலம் ஆஜராகச் சொல்லி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மீண்டும் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று மாநில உள்துறை செயலாளர் வருத்தம் தெரிவித்துக் கொள்ள வேண்டிதாயிற்று.
நேற்று அப்படி என்ன நடந்தது, ஏன் டிராபிக் நெரிசல்.. இதோ இதுதான் விஷயம்.

சிவாஜி பிறந்த நாள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கூகுள் நிறுவனம் கூட தனது டூடுளில் சிவாஜி கணேசன் படத்தை இடம்பெறச் செய்து கவுரவம் வழங்கியது. தமிழக அரசு சார்பிலும், சிவாஜி கணேசனை நினைவுகூற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணி மண்டபத்தில் நிகழ்ச்சி
டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில், சிவாஜி மணி மண்டபம் உள்ளதல்லவா, அங்கு வைத்துதான் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலர் இதில் பங்கேற்றனர். சிவாஜி குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பல ஆயிரம் வாகனங்கள் காத்திருப்பு
மொத்தமே 20 நிமிட நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சாலையில் காத்திருந்ததோ பல ஆயிரம் வாகனங்கள். முதல்வர் வருகை தந்ததால், போலீசார் அந்த சாலையில் பிற வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்தனர்.

எந்த பகுதிகள் பாதிப்பு
இதனால், மைலாப்பூர், மெரினா பீச், எம்ஆர்சி நகர், சாந்தோம், பட்டினப்பாக்கம், மெட்ராஸ் ஹைகோர்ட் மற்றும் கிண்டி போகும் சாலைகளில் வாகனங்கள் நகர முடியவில்லை. சில டூவீலர்கள் மட்டும் குறுக்கு சந்துகள் வழியே நுழைந்து சென்றன, கார்கள் அங்கேயே நின்றன.
Recommended Video

30 ஆயிரம் கார்கள்
காவல்துறை புள்ளி விவரப்படி, அடையாறு ரோடு ஜங்ஷனில் தினமும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 11,000 கார்கள் பயணிக்கின்றன. ஆனால், முதல்வர் வருகை தந்ததால் வாகனங்களை போலீசார் நிறுத்தி வைத்த காரணத்தால், அங்கு சுமார் 30 ஆயிரம் கார்கள் வரிசையாக நின்றன. இது தவிர டூவீலர்களும் காத்திருந்தன.

வெயில் நேரம் வேறு
கடுமையான வெயிலில் வாகன ஓட்டிகள் அப்படியே காத்திருக்க வேண்டியதாயிற்று. அலுவலகம் செல்வோரும் தாமதமானதால் வாட்ச்சை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருந்தனர். இந்த டிராபிக்கில்தான் ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்.

நீதிபதி கார்
இந்த நிலையில்தான் நீதிமன்றம் சென்றதும், அரசு உள்துறை செயலாளரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக கூறி விளக்கம் கேட்டுள்ளார் நீதிபதி. நீதிமன்றத்திற்கு 25 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதை சுட்டிக் காட்டிய நீதிபதி, அரசு ஊழியரான தன்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்புக்கு ஈடான குற்றம் என்று கடுமையாக கண்டனத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய சாலை
இதுபற்றி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் கூறுகையில், ஒரு முக்கியமான சாலையை இப்படி மூடி வைத்தது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியளிக்கிறது. இவ்வளவு பேர் பயணிக்கும் சாலையில் போக்குவரத்து நிறுத்துவது விபரீதமானது, துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் அவசரம்
முதல்வருக்காக டிராபிக் நிறுத்தப்பட்டு சர்ச்சையானது இது முதல் முறை கிடையாது. முன்னாள் முதல்வர்கள் சிலரும் கூட இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்துள்ளனர். பொதுவாக, டிராபிக்கை நிறுத்துங்கள் என்று, முதல்வர்கள் சொல்வதில்லை. சில அதிகாரிகள்தான், முதல்வர் மெச்சவேண்டும் என்பதற்காக இவ்வாறு பொதுமக்களைப்பற்றி கவலைப்படாமல் செய்கின்றனர்.

ஜெயலலிதாவுக்காக நிறுத்தப்பட்ட ரஜினி
1991-96ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வருவதற்கு பல மணி நேரம் முன்னரே டிராபிக் நிறுத்தப்படுவது வாடிக்கையாக இருந்தது. அவர் முதல் முறையாக முதல்வராக பதவி வகித்து வந்த காலகட்டம் அது. ஜெயலலிதா சென்றால், அவருக்காக சாலையில் ஆங்காங்கே சுங்கச்சாவடிபோல் தடுப்புகளும் அமைத்தார்கள். ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் அருகே டிராபிக்கில் மாட்டிக்கொண்டு வீட்டுக்கு திரும்ப முடியாமல் காரிலிருந்து இறங்கி வெளியில் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போது பொதுமக்களால் இது கடுமையாக பார்க்கப்பட்டது. பத்திரிக்கைகள் விமர்சித்தன, கார்ட்டூன்கள், சினிமாக்களில் கூட காமெடிக்காட்சிகள் வைக்கப்பட்டன.

கருணாநிதி, ஜெயலலிதா
இந்த நிலையில்தான், 1996ம் ஆண்டுக்கு பிறகு, ஆட்சிக்கு வந்த கருணாநிதி முற்றிலும் இதை நிராகரித்தார். அதன் பின்னர் 2வது முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவும் முன்னர்போல் நடக்காமல் பார்த்துக்கொண்டார். நடந்த தவறுகளை திருத்த கடுமையாக போலீசாருக்கு உத்தரவிட்டார். எனவே ஜெயலலிதா வரும் நேரம் மட்டுமே டிராபிக் நிறுத்தப்பட்டு உடனடியாக வாகனங்கள் செல்லவும் வழி அமைக்கப்பட்டது.

அனுபவம் இல்லாத செயல்
ஆனால், முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் சமீப காலமாக அனுபவமில்லாத சில அதிகாரிகளால் முதல்வர் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்னரே சாலைகள் அடைக்கப்படுவதும், அவர் சென்றபின்னரும் வாகனங்களை விடாமல் வைத்திருப்பதும் ஆங்காங்கே தொடர்கதையாக நடந்து வருகிறது.

அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்
இது முதல்வர்மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை அதிகாரிகள் புரிந்துக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் காவலுக்கு நிற்கும் கடைகோடி போலீஸாரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இனியும் இதுபோன்ற செயல்கள் தொடராமல் இருக்க சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications