தண்ணீர், போக்குவரத்து.. ம்ஹூம்! அடிப்படை வசதிகள் குறைபாடால் திணறும் "இந்தியாவின் டெட்ராய்ட்" சென்னை
சென்னை: சென்னையில் நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் மனிதர்களால் பேரிடர்கள் உருவாக்கப்படுகின்றன. வெள்ளம், வறட்சி மற்றும் உள்கட்டமைப்பு சிதைவால் சென்னை ஆபத்தில் உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
நகர்ப்புற உள்கட்டமைப்பு நிபுணர் அகிலேஷ்வர் சஹாய் இந்திய நகரங்களின் உள்கட்டமைப்பு சவால்கள் குறித்து இன்ப்ரா வாணியில் குறிப்பிட்டு வருகிறார்.
தற்போது சென்னை பற்றி அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். சென்னையின் உள்கட்டமைப்பு, வறட்சி, வெள்ள பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் என அனைத்து அம்சங்களை அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

வீடற்ற நிலையில் 40 ஆயிரம் பேர்
மே 1, 2022ல் ஒரு செய்தியை பார்த்தேன். வீடற்ற நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்குகின்றனர். இது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனென்றால் சென்னையில் மொத்தம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வீடற்ற நிலையில் வாழ்கை நடத்துகின்றனர். இந்தியாவில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட முதல் இந்திய நகரமான சென்னை தற்போது மிகப்பெரிய உள்கட்டமைப்பு குறைபாட்டை சந்தித்து வருகிறது.

மக்கள் தொகை எவ்வளவு?
2022ல் சென்னையின் மக்கள்தொகை 11.5 மில்லியன்(ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) என இருந்தது. 1981ல் 4 மில்லியனாக இருந்த மக்கள்தொகை கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளது.2035ம் ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை 15 மில்லியனாக அதிகரிக்கலாம். இந்நிலையில் தான் சென்னை வறட்சி மற்றும் பேரிடர்களை எதிர்கொள்கிறது. ஆண்டுக்கு 140 செமீ மழையை சென்னை பெற்று வருகிறது. இந்த மழை மட்டுமின்றி தவறான நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல், மோசமான நீர் நிர்வாகம் ஆகியவற்றால் சென்னை பாதிப்பை சந்தித்து வருகிறது.

வறட்சிக்கு காரணங்கள் என்ன?
மேலும் சென்னையானது 1974, 1982, 1992, 1996, 2003, 2017, 2019 ஆகிய ஆண்டுகள் வரை தண்ணீரின்றி சிரமத்தை சந்தித்தது. 2019ல் மிகப்பெரிய பிரச்சனையை சென்னை சந்தித்தது. ஏரிகள், நீர்த்தேக்கள் வறண்டன. உணவகங்கள் மூடப்பட்ட நிலையில் தண்ணீரின்றி பள்ளிகளும் மூடப்படாலாம் என்ற தகவல்கள் பரவின. பல இடங்களில் டேங்கர் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டன. ரயில்கள் மூலமாகவும் தண்ணீர் கொண்ட வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன. சென்னையின் இந்த வறட்சி என்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரிடராகும். சென்னை மாஸ்டர் பிளான் 2026 என்பது நகரின் நீர்வழித்தடங்களான கூவம், அடையாறு, பக்கிங்ஹாம், கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி மற்றும் மாம்பலம் ஆகியவை கழிவுநீர் வடிகால்களாக மாறியுள்ளன என்பதை உறுதி செய்கிறது. மேலும் சென்னையின் நீர்நிலைகள் 1897 ல் 12.6 சதுர கிலோமீட்டராக இருந்த நிலையில் 2017 ல் 3.2 சதுர கிலோமீட்டராக சுருங்கியுள்ளது என்பதை அண்ணா பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. நகரில் நவீனத்துவம் என அடையாளமாக உள்ள ஐடி காரிடார்கள் 230 சதுர கிமீ சதுப்பு நிலங்களை விழுங்கியுள்ளது. நீர்நிலைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னைக்கு தண்ணீர் தேவை எவ்வளவு?
சென்னையில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு ஏழைகள், விளிம்பு நிலை மக்களை தான் அதிகம் பாதிக்கிறது.சென்னை மற்றும் அதனையொட்டி பகுதிகளுக்கான தண்ணீர் தேவை 1981ல் 1321 எம்எல்டியாக(ஒரு நாளைக்கான மில்லியன் லிட்டர்) இருந்த நியைலி்ல தற்போது 2021ல் 1980 எம்எல்டியாக அதிகரித்துள்ளது. 2019 வறட்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி நீர் 500 எம்எல்டி தண்ணீர் வழங்கவே போராடியது. நீர்வளம் சிறக்கும் வேளையிலும் பல நேரங்களில் அரிதாகவே 830 எம்எல்டியை தாண்டுகிறது.

நீர்நிலைகளுக்கு மேலும் ஆபத்து
மஹிந்திரா-டெரி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆய்வின்(2021) முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதன்படி சென்னை பெருநகர பகுதியில் 2019ல் 2074 மில்லிலிட்டர்களாக இருந்த தண்ணீரின் தேவை 2025ல் 2238 மில்லிலிட்டராக அதிகரிக்கும் எனவும், சதுரகிலோமீட்டர் பரப்பளவில் கட்டப்படும் கட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை செய்கிறது. இதன்மூலம் நீர்நிலைகளின் பரப்பும் சுருங்கும் என ஆய்வு விளக்குகிறது.

தண்ணீர் பற்றாக்குறை ஏன்?
சென்னையில் தினசரி வினியோகத்தில் 35-40 சதவீத நீர் இழப்பு ஏற்படுகிறது. டெல்லிக்கு அடுத்து அதிக நீர் இழப்பில் சென்னை உள்ளது. இது ஒருபுறம் இருக்க அண்ணா பல்கலைக்கழக ஆய்வின்படி, 2030ம் ஆண்டுக்குள் 60 சதவீத நிலத்தடி நீர் மாசுபடும் என எச்சரிக்கை மணி அடிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் அதிக ஈரப்பதம் கொண்ட நகரங்களில் ஒன்றாக சென்னை இருந்தது. ஆனால் தற்போது கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. தலா ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் 100 எம்எல்டி நீருக்கான இரண்டு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ரூ.1,259.38 கோடி மதிப்பீட்டில் 150 எம்எல்டி நீர் கிடைக்கும் வகையில் 3வது ஆலையின் பணி நடைபெற்று வருகிறது. 4வது 400 எம்எல்டி நீருக்காக ரூ. 6,078 கோடி செலவில் பணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பொருளாதார செலவு அதிகரித்து வருகிறது. இது அரசுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் சென்னையில் நீர் இழப்பை பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதும், மழைநீர் சேகரிப்பை தீவிரப்படுத்தி, நீர்நிலைகளை புனரமைப்பதும் முக்கியமாகும்.

வெள்ள பாதிப்பு
சென்னையை பொறுத்தமட்டில் 1903, 1943, 1969, 1976, 1978, 1985, 1996, 1998, 2002 2005, 2010, 2013, 2015, 2021 ஆகிய ஆண்டுகள் மிகக்கடுமையான வெள்ளப்பாதிப்பை சந்தித்து உள்ளது. இதன்மூலம் சென்னை வறட்சியில் தவிப்பது அல்லது தண்ணீரில் மூழ்குவது என்பது வாடிக்கையாக உள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை (2022) மும்பை மற்றும் சென்னை உட்பட பல உலகளாவிய கடலோர நகரங்களுக்கு அதிக வெள்ள அபாயங்கள் பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் காலநிலை மாற்றம் மற்றும் சென்னை சீதோஷ்ண நிலை ஆகியவை தொடர்ந்து மோசமடைந்து வந்தாலும் கூட நகரின் வெள்ளப்பாதிப்புக்கு அடிப்படை காரணம் நீர்வழிப்பாதைகள், நீர்நிலைகளில் உள்ள கட்டுமானங்கள் தான். சென்னையின் அதீத வளர்ச்சியானது நீர்வழித்தடங்கள், நீர்நிலைகளை அழித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஆபத்து நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. 2015 வெள்ளத்தின்போது 3,00,000 மில்லியன் கனஅடி நீர் வீணாக கடலில் கலக்கப்பட்டது. இதனை சேமித்து இருந்தால் நிச்சயமாக 2019 வறட்சியை தடுத்திருக்கலாம். ஆனால் அதை செய்யாததால் 2019ல் சென்னை கடும் வறட்சியை சந்தித்தது. மேலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இயற்கையான வெள்ள தடுப்பு படுகை அழிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் மேலாண்மை
மேலும் சென்னையின் 50 சதவீத அளவுக்கு வடிகால் குறைபாடு உள்ளது. இதனால் நீர்நிலைகள் தினசரி 1073 மில்லி லிட்டர் கழிவுநீரை உறிஞ்சுகின்றன. இதன்மூலம் நீர்நிலைகள் மாசு அடைவதுடன், துர்நாற்றம் மிகந்த நகராகவும் சென்னை மாறுகிறது. சென்னையை பொறுத்தமட்டில் தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் 727 எம்எல்டியாக உள்ளது. சென்னையில் 2025க்குள் 1,789.2 எம்எல்டி கழிவுநீர் வெளியேற்றப்படும். இதனால் கழிவுநீர் சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் கழிவுநீர் ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் இன்னும் கூடுதலாக வழிந்தோடும்.

குப்பை உற்பத்தி அதிகம்
கழிவுநீர் மற்றும் திடக்கழிவு பற்றி கொலம்பியா பல்கலைக்கழகத்தின் புவிசார் பொறியியல் மையம் - வேஸ்ட் டு எனர்ஜி ரிசர்ச் அண்ட் டெக்னாலஜி கவுன்சில் (2011) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி சென்னையில் தினசரி 6,404 டன் குப்பைகள் உருவாகின்றன. இது தனிநபர் விகிதத்தில் 0.71கிலோவாகும். இது நாட்டிலேயே மிக அதிகமாகும்.சென்னை பெருநகர பகுதி எவ்வளவு கழிவுகளை உருவாக்குகிறது என்பது தெரியாவிட்டாலும் கூட மதிப்பீடுகள் மூலம் தினசரி 5,000 மெட்ரிக் டன் முதல் 10,000 மெட்ரிக் டன் வரை கழிவுகள் உருவாவதாக கணிக்கப்பட்டுள்ளது. தேசிய உற்பத்தி திறன் கவுன்சில் அறிக்கையின்படி, சென்னையில் 68 சதவீதம் குடியிருப்பு, 16 சதவீதம் வணிகம், 14 சதவீதம் நிறுவனங்கள், 2 சதவீதம் தொழிற்சாலை கழிவுகள் உருவாகின்றன.

பிளாஸ்டிக் கழிவில் 2வது இடம்
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கணக்கீட்டுப்படி தினசரி 420 டன்களுடன் இந்தியாவின் இரண்டாவது பெரிய பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நகராக சென்னையை அடையாளம் கண்டுள்ளது. மேலும் 225 ஏக்கர் பரந்துள்ள பெருங்குடி குப்பை கிடங்கானது பெரும் பிரச்சனையை சந்தித்து வருகிறது. 2022 ஏப்ரல் இறுதியில் ஏற்பட்ட தீவிபத்தை 4 நாட்கள் போராடி அணைத்தனர். 13 தீயணைப்பு வாகனங்கள், 20 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஸ்கைலிப்ட், 120 தீயணைப்பு வீரர்கள், மில்லியன் லிட்டர் தண்ணீர், 22 ஜேசிபிக்ள், 15 லாரிகள், 7 ஜெட் ராடிங் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு 2800-3000 டன் குப்பையும், பெருங்குடிக்கு 2600-2800 டன் குப்பையும் அனுப்பப்படுகிறது. இதில் 1000 டன் கட்டுமானக் கழிவுகள் சேராது. மேலும் குப்பைகள் அனைத்தும் பிரிக்கப்படாமல் அங்கு கொட்டப்பட்டு வருகிறது.

காற்று மாசுபாட்டால் ஆபத்து
சென்னை வறட்சி, வெள்ளத்தில் தப்பித்தாலும் கூட காற்று மாசு அவர்களை அச்சுறுத்துகிறது. கிரீன்பீஸ் அறிக்கையின்படி 2020ல் 11,000 சென்னை மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்ததாகவும், அந்த ஆண்டிற்கான பொருளாதார இழப்பு ரூ.1 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், அதீத கட்டுமானங்கள், பிரிக்கப்படாத குப்பைகள் ஆகியவற்றால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. 2012ல் கலிபோர்னியா பல்கலைக்கழகம் பெர்க்லி நடத்திய ஆய்வில், கொல்கத்தா மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக வாகன புகை உற்பத்தியில் சென்னை மூன்றாவது இடத்தில் இருப்பதாக எச்சரிக்கை செய்தது. 2018ல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மைய ஆய்வின்படி, 14 நகரங்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நச்சுத்துகள்கள் வெளியேற்றுவதில் சென்னை 2ம் இடத்தை பிடித்தது. இதனால் காற்று மாசை குறைப்பதற்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

விபத்து நிலவரம்
2015 முதல் 2020 வரையிலான காலத்தில் சென்னை சாலைகளில் 2,191 பாதசாரிகள் விபத்தில் இறந்துள்ளனர். 9,754 பேர் காயமடைந்துள்ளனர். 2019ல் சாலை விபத்துக்களில் 1,262 பேர் பலியானதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரம் கூறுகிறது. இந்த எண்ணிக்கையானது 2020ல் 872 ஆக குறைந்தது மகிழ்ச்சியான செய்தியாகும்.

டெல்லியை விட மோசம்
இருப்பினும் சென்னை சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 60 லட்சத்துக்கும் அதிகமாக வாகனங்கள் செல்கின்றன. இது 1981, 1991 மற்றும் 2011ல் முறையே 1.5 லட்சம், 6 லட்சம் மற்றும் 36 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 2780 கிமீ நீள சாலைகளில் வாகன அடர்த்தி கிலோமீட்டருக்கு 29 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. இது டெல்லியை ஒப்பிடும்போது 10 மடங்கு மோசமாகும். அதோடு இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை சென்னையில்தான் அதிகம். இதனால் விபத்துகளில் உயிரிழப்புகள் தொடர்கிறது. 2004 ல், உலக வங்கி தனது அறிக்கையில், சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள நகர்ப்புற போக்குவரத்து பற்றிய தகவல்களை கூறி இருந்தது. அதில் பாதசாரிகள் நடமாட்டத்துக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும், மழைக்காலங்களில் வெள்ளப்பாதிப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும் காரை மையப்படுத்தி சாலைகள் உள்ளதால் இருசக்கர வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதனை பரிசீலனை செய்து சரிசெய்ய வேண்டிய நேரம் இதுவாகும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

வாகன நிறுத்தத்துக்கு சாலைகள்
மேலும் 2008ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 27 சதவீதம் சென்னை சாலைகள் வாகன நிறுத்தத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இது மற்ற பெரிய நகரங்களை விட மோசமாக உள்ளது. இதனை முறைப்படுத்துவது அவசியமாகும். மேலும் பஸ் போக்குவரத்தும் சென்னையில் சிரமங்களை கொடுக்கிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (MOHUA)விதிகள் படி 1 லட்சம் மக்களுக்கு 60 பஸ்கள் வேண்டும். தற்போதைய சென்னை மக்கள்தொகையின்படி 7,000 பஸ்கள் தேவையாகும். மேலும் சென்னை பெருநகர பகுதியின் இயக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த எண்ணிக்கை 10,000 ஆக உயர்த்தி கொள்ளலாம்.

நடவடிக்கை அவசியம்
1990 களில் மெட்ராஸுக்கு மெட்ரோ ரயில் கிடைக்கவில்லை. 2009-ல்தான் சென்னை இரண்டு வழித்தடத்தில் 45 கிமீ மெட்ரோ ரெயிலை அமைக்க துவங்கியது. முதல் 10 கிமீ ரயில் சேவை ஜூன் 2015ல் துவங்கியது. மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதோடு சென்னை நகரை விரிவுப்படுத்தி வருகின்றனர். ஜூலை 2017ல், தமிழ்நாடு சட்டமன்றமானது சென்னை பெருநகரப் பகுதி 8,878 சதுர கிமீட்டராக அதிகரிக்கப்படும் என அறிவித்தது. இது கூடுதல் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் சென்னை நகரின் மீது அதிக கவனம் கொண்டு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் எதிர்காலம் மிகவும் கடினமானதாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications