பாஜகவில் இணைந்தது ஏன்?.. தேமுதிக மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த சென்னை வேட்பாளர்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் செயல்பாடுகள் கட்சியில் இல்லாததால் பாஜகவிற்கு மாறியதாக தேமுதிக வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது.
இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் மாற்றுக் கட்சியில் இணைவதும், தனித்து போட்டியிடுவதும் வாடிக்கையாகி வருகிறது. அது போல் சிலர் ஒரு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டு பின்னர் மாற்று கட்சியில் இணையும் போக்கும் அதிகரித்து வருகிறது.

சென்னை மணலி வார்டு
அந்த வகையில் சென்னை மணலி வார்டின் தேமுதிக வேட்பாளர் ஒருவர் தனது ஆதரவாளர் ஒருவருடன் பாஜகவில் இணைந்துவிட்டார். சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட மணலி 20வது வார்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் திருவொற்றியூர் மேற்குப் பகுதி செயலாளருமான வேம்படியான் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தேமுதிக மீது அதிருப்தி
இந்த நிலையில் தேமுதிக மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக பாரதிய ஜனதா கட்சியில் மணலிக்கு பிரசாரத்திற்காக வந்த மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்தின் செயல்பாடுகள் கட்சியில் இல்லாத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தேன்.

விஜயகாந்த் பிரச்சாரம் இல்லை
மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு தனது பகுதிக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரசாரத்திற்கு வர வேண்டும் என்று ஆசையோடு காத்திருந்தேன். ஆனால் அவர் பிரச்சாரத்திற்காக வரமாட்டார் என்ற செய்தி மனவேதனை அளித்தது.

இணைந்தது ஏன்
அதனால் லஞ்ச லாவண்யம் அற்ற தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் எனது தொண்டர்கள் 100 பேரோடு இணைந்து விட்டேன் என தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விஜயகாந்த் நேரடி அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்துவிட்டார். கட்சி சார்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் பொதுக் குழு கூட்டங்களில் மட்டுமே கலந்து கொள்கிறார். விஜயகாந்திற்காக நிறைய பேர் கட்சியில் சேர்ந்து அவர் கட்சி தொடங்கியதுமே அவருக்கு வெற்றியை தந்த தொண்டர்கள் இன்று அவரது நேரடி தலையீடு இல்லாததால் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

தொடர் சறுக்கல்
ஏற்கெனவே 2014, 2016, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் கூட்டணி வைத்ததில் செய்த தவறால் இதுவரை கட்சி முன்னேற்றம் அடையாமல் இருப்பதாக தொண்டர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இந்த உள்ளாட்சி தேர்தலிலாவது விஜயகாந்த் நேரில் வருவார், அனல் பறக்கும் பிரச்சாரத்தை தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வராததால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications