இந்தியா ஆகஸ்ட் 15.. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14.. சுதந்திர தினம் மட்டும் ஏன் ஒரு நாள் வித்தியாசம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வந்தாலே இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. ஆனால் இரு நாடுகளின் சுதந்திர தினங்களுக்கு இடையே ஒரு நாள் வித்தியாசம் உள்ளது. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதியும், இந்தியா ஆகஸ்ட் 15ஆம் தேதியும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. இரு நாடுகளும் ஒரே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றன. அப்படியிருக்க சுதந்திர தினம் மட்டும் ஏன் வெவ்வேறு தேதிகளில் உள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளுமே பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்தே சுதந்திரம் பெற்றது. ஆனால், இந்தியா ஆகஸ்ட் 15ம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடும் நிலையில், பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ம் தேதியை கொண்டாடுகிறது.

Independence Day

காரணங்கள்

இப்படி இரு வேறு சுதந்திர தினம் அமைய உண்மையில் என்ன காரணம் என கேட்டால் இதற்கான பதில் பிரிட்டிஷ் சட்டம், அப்போதைய வைஸ்ராய் மவுண்ட்பேட்டனின் பயண திட்டம், அதிகாரப் பரிமாற்ற நிகழ்வுகள் மற்றும் பின்னர் பாகிஸ்தான் எடுத்த முடிவு ஆகியவற்றில் உள்ளது.

முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். 1947ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட "இந்தியன் சுதந்திர சட்டம்"- இரு புதிய நாடுகளும் உருவாகும் தேதியாக ஆகஸ்ட் 15, 1947 என்பதை தான் நிர்ணயித்தது. அதாவது சட்ட ரீதியாகப் பார்த்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் ஆகஸ்ட் 15ஆம் தேதியே சுதந்திர நாடுகளாக உருவாக வேண்டும் என்பதே ஆரம்பக்கட்ட ஏற்பாடு. ஆனால் அதிகாரப் பரிமாற்ற நிகழ்வுகள் வேறு விதமாக அமைந்தன.

ஒரே மவுண்ட்பேட்டன்.. இரண்டு நாடுகள்!

இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கும் பணிகளை மேற்பார்வையிட்டார். அப்போது ஒரு நடைமுறை சிக்கல் இருந்தது. பாகிஸ்தானின் தலைநகரம் கராச்சி.. இந்தியாவின் தலைநகரம் டெல்லி. இரு நாடுகளிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் மவுண்ட்பேட்டன் பங்கேற்க வேண்டியிருந்தது.

இதனால் பாகிஸ்தானில் அதிகார பரிமாற்ற நிகழ்ச்சி ஆகஸ்ட் 14ஆம் தேதி கராச்சியில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மவுண்ட்பேட்டன் டெல்லிக்கு வந்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனால் பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதியும், இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதியும் என்ற வேறுபாடு உருவானது.

ஆகஸ்ட் 15 ஏன்?

இதற்கு பின்னால் மற்றொரு சுவாரஸ்யமான காரணமும் இருந்ததாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் சரணடைந்த நாள் 1945 ஆகஸ்ட் 15. அப்போது தென்கிழக்கு ஆசியாவில் நேச நாடுகளின் படைகளுக்கு மவுண்ட்பேட்டன் தலைமை வகித்தார். எனவே ஆகஸ்ட் 15 அவருக்கு தனிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தேதியாக இருந்தது. இதுவும் இந்தியாவின் சுதந்திர தேதியாக ஆகஸ்ட் 15 தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

வரலாற்று பதிவுகள்

இதில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் பாகிஸ்தானும் ஆரம்பத்தில் ஆகஸ்ட் 15ஐ தேதியை தான் சுதந்திர நாளாக பயன்படுத்தியது. இது பலருக்கும் தெரியாது. பாகிஸ்தானின் ஆரம்பக்கால பதிவுகளில் ஆகஸ்ட் 15, 1947 சுதந்திர தேதியாக குறிப்பிடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. 1948ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாகிஸ்தானின் முதல் நினைவு தபால் தலைகளிலும் கூட ஆகஸ்ட் 15, 1947 என்ற தேதி இடம் பெற்றிருந்ததாக வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலான முகமது அலி ஜின்னா, தனது முதல் உரையில் ஆகஸ்ட் 15ஐ தான் சுதந்திர பாகிஸ்தானின் பிறந்த நாளாக குறிப்பிட்டார். ஆனால் பின்னர் சில காரணங்களுக்காக பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14 என அதிகாரப்பூர்வமாக கடைப்பிடிக்க தொடங்கியது.

இதற்கு ஒரே ஒரு காரணம் என்று உறுதியாக கூற முடியாது. முக்கிய காரணமாக 1947 ஆகஸ்ட் 14 அன்று கராச்சியில் நடைபெற்ற அதிகார பரிமாற்ற நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. அந்த நாளில் தான் மவுண்ட்பேட்டன் பாகிஸ்தானின் அரசியல் தலைவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார். அதாவது ஆகஸ்ட் 14ம் தேதியோடு பிரிட்டன் அதிகாரம் பாகிஸ்தானுக்கு முடிவுக்கு வந்தது.

இந்தியா ஏன் ஆகஸ்ட் 15ஐ மாற்றவில்லை?

பாகிஸ்தான் இதுபோல சுதந்திரத்திற்கான தேதியை மாற்றினாலும் கூட இந்தியா ஆகஸ்ட் 15 தேதியையே தொடர்ந்து சுதந்திர தினமாக கடைப்பிடித்தது. 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு இந்தியா சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தபோது, ஜவஹர்லால் நேரு தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். அதன்பின் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் முதல் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

பாகிஸ்தான் உண்மையில் எப்போது சுதந்திரமானது?

இந்த கேள்வியை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்தே இதற்கான பதில் மாறுபடும். சட்ட ரீதியாகப் பார்த்தால் இரு நாடுகளின் சுதந்திரத்திற்கான தேதி ஆகஸ்ட் 15, 1947 தான். அதேநேரம் பாகிஸ்தானின் அதிகார பரிமாற்ற நிகழ்வின்படி பார்த்தால் ஆகஸ்ட் 14, 1947ஐ சுதந்திர தினமாக சொல்லலாம்.. ஜின்னாவின் ஆரம்பக்கால குறிப்புகளின்படி ஆகஸ்ட் 15, 1947 சுதந்திர பாகிஸ்தானின் பிறந்த நாளாக குறிப்பிடப்பட்டது. ஆனால், பின்னர் பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதியை தனது அதிகாரப்பூர்வ சுதந்திர தினமாக கொண்டாட ஆரம்பித்தது.

இந்தியா பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது நடந்த பிரிவினை மிக பெரிய பேரழிவாக அமைந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவானதுடன், பஞ்சாப் மற்றும் வங்கமும் பிரிக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு எல்லைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. குடும்பங்கள் பிரிந்தன; பெரும் வன்முறை வெடித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+