பாஜக அமைச்சருக்கு எதிரான போராட்டத்திற்கு.. தவெக அரசு அனுமதி மறுப்பது ஏன்? மாணவர்கள் கேள்வி!
சென்னை: டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். ஆனால், அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக அமைச்சருக்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்? என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
சென்னை திருவொற்றியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்-இளைஞர்கள் டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அனுமதி மறுப்பு
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அமைதியான போராட்டங்களுக்கு அனுமதி உண்டு என்று கூறியிருந்தார். ஆனால், போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) கூறியிருக்கின்றனர்.
மாணவர்கள் கண்டனம்
இந்த அமைப்பின் மாநில செயலாளர் சம்சீர் அகமது இது குறித்த கூறுகையில், "இதற்கு முன்னர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அனுமதி வாங்கி போராடி இருக்கிறோம். இப்போது போராட அனுமதி கேட்டால் கொடுக்கமாட்டேன் என்கிறார்கள். இருப்பினும் அனுமதி மீறி போராட்டம் நடத்தி கைதானோம். இன்றும் முறையான அனுமதி கோரியிருந்தோம். ஆனால் கொடுக்கப்படவில்லை. ராஜரத்தினம் ஸ்டேடியம் என்பது வழக்கமாக போராட்டம் நடத்தப்படும் இடம்தான். நாங்கள் புதிய இடத்தில் அனுமதி கேட்கவில்லை.
தூண்டுதலின் பேரில்
அறவழியில் போராடுபவர்களுக்கு அனுமதி கொடுத்து.. போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்று காலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருந்தார். ஆனால் இப்போது காவல்துறையினர் அனுமதி கொடுக்க மறுத்து எங்களை கைது செய்கிறார்கள். தூண்டுதலின் பெயரில் போராட்டம் நடக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொல்கிறார். ஆனால் யார் தூண்டுதலின் பெயரில் போராடுபவர்களுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது தவெக அரசு?
பல்வேறு இடங்களில் போராட்டம்
இது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம். நீட் எதிர்ப்பில் உறுதியாக இருப்பதாக சொல்லக்கூடிய தவெக அரசு, இப்படி மாணவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சென்னை மட்டுமல்லாது திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை என பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு, மீறி போராடியவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கைது நடவடிக்கை
மதுரையில், காமராஜர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர் தலைவர்களை கைது செய்ய போலீசார் முயற்சித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தவெக அரசுதான் நீட் தேர்வை வேண்டாம் என்று சொல்கிறதே! அப்படி இருக்கையில் ஏன் போராடும் மாணவர்களை கைது செய்ய வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
