விடிஞ்சா இடைத்தேர்தல்..இறங்கியடித்த எடப்பாடி, ஸ்டாலின்.. ஸ்பாட்டுக்கே போன விஜய்! தோற்றால் அவ்ளோதான்?
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் களத்தின் கவனமும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளின் மீதுதான் இருக்கிறது. காரணம், இது வெறும் 2 தொகுதிகளுக்கான தேர்தல் இல்லை... கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு 3 பலமான அரசியல் கட்சிகள் நேரடியாக மோதும் களமாக இந்த இடைத்தேர்தல் மாறியிருக்கிறது.. கம்யூனிஸ்ட்டுகள், நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி இருந்தாலும், திமுக, அதிமுக, தவெக இடையிலான மோதல்தான் அரசியல் ரீதியாக அதிக கவனம் பெற்றிருக்கிறது.. அப்படியென்றால் இந்த 2 தொகுதிகளும் ஏன் இவ்வளவு முக்கியம்?
முதலில் அதிமுகவை எடுத்துக்கொள்வோம்... சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், இந்த 2 தொகுதிகளிலுமே அதிமுக அபார பெற்றது.. அதிமுகவின் கோட்டையாகவும் கருதப்படுகிறது.. அதனால்தான், இந்த 2 தொகுதிகளில் ஒரு தொகுதியையாவது தக்கவைத்துக்கொள்வது அதிமுகவுக்கு முக்கியமானதாக உள்ளது..

தாராபுரம், மதுராந்தகம்
இதில் தாராபுரத்தை முக்கியமாக சொல்ல வேண்டும்.. ஆரம்பம் முதலே அதிமுகவுக்கு சாதகமான களமாக இருந்ததாக கட்சியினர் கருதுகிறார்கள். ஆனால், அந்த சாதகமான சூழலை வாக்குகளாக மாற்ற வேண்டிய நேரத்தில், சில நிர்வாகிகள் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியதாகவும், சிலர் தவெக பக்கம் சென்றதாகவும் அதிமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் எடப்பாடி பழனிசாமி, உள்ளூர் நிர்வாகிகளை மட்டும் நம்பாமல் வெளியிலிருந்து கட்சியினரை களமிறக்கி தேர்தல் வேலையை முடுக்கிவிட்டார்... மதுராந்தகத்திலும் கே.பி.முனுசாமி தலைமையில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன..
எடப்பாடி பழனிசாமி
இவ்வளவு வேலை பார்த்தும் 2 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்தால், அது இந்தத் தேர்தலில் ஏற்பட்ட ஒரு தோல்வியாக மட்டும் பார்க்கப்படாது. பொதுத்தேர்தலில் வென்ற தொகுதிகளைக்கூட அதிமுகவால் தக்கவைக்க முடியவில்லையா? என்ற கேள்வி எழும்... அதைவிட முக்கியமாக, கட்சிக்குள் தலைமைக்கு எதிராக காத்திருக்கும் அணிகளுக்கும் அது புதிய அரசியல் ஆயுதமாக மாறலாம்.
அதுமட்டுமல்ல, சிவி சண்முகம், வேலுமணி உட்பட நிறைய அதிமுக தலைவர்கள், ஒரே ஜம்ப்பாக தவெக பக்கம் போகவும் வாய்ப்புள்ளது.. ஏற்கனவே அதிமுகவுக்கு, விஜய் சொந்தம் கொண்டாடி வரும்நிலையில், "மற்றும் பலர்" என்று எடப்பாடியை கிண்டலடித்து விமர்சித்து வரும்நிலையில், எப்படியாவது வென்றாக வேண்டிய நெருக்கடி அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது..
அதனால்தான் அதிமுகவுக்கு இது ஒரு தொகுதியை வெல்வதற்கான தேர்தல் மட்டுமல்ல. கட்சி தன்னுடைய பழைய வாக்கு பலத்தை இன்னும் தக்கவைத்திருக்கிறதா என்பதையும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் கட்சி களத்தில் ஒருங்கிணைந்து நிற்கிறதா என்பதையும் காட்ட வேண்டிய தேர்தலாக உருமாறியிருக்கிறது.
தவெகவுக்கு முக்கியம்
அடுத்து தவெகவை எடுத்துக் கொண்டால், இந்த தேர்தல் தவெகவுக்கு இன்னும் நேரடியான சோதனை என்றே சொல்லலாம்.. காரணம், இப்போது அது எதிர்க்கட்சியாக இல்லை. ஆளுங்கட்சி... ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்திருக்கிறது. அதனால், இரண்டில் ஒரு தொகுதியில் தோல்வி ஏற்பட்டால்கூட அதை ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையாக எதிர்க்கட்சிகள் கட்டமைக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலே தேவையில்லாத ஒன்று என்று பெரும்பாலான கட்சிகள் விமர்சித்து வரும்நிலையில், குதிரை பேரம் பற்றின பேச்சுகள் அடிபட்டு வரும்நிலையில், இவைகளை மீறிதான் களம் கண்டுள்ளது தவெக.. போதாக்குறைக்கு வேட்பாளர்களுக்கான வரவேற்பும் 2 தொகுதிகளிலும் இல்லை..
எப்போதுமே ஒரு தொகுதியில் தேர்தல் என்றால், கட்சி தலைவரை முன்னிறுத்திதான் வாக்காளர்கள் அந்த தேர்தலை அணுகுவார்கள். ஆனால், இங்கு 2 இடங்களிலுமே வேட்பாளர்களை நோக்கி எதிர்ப்பு கணைகள் பாய்கின்றன.. நிலைமை 2 இடங்களிலும் சரியில்லை என்பதால்தான் விஜய், நேரடியாகவே 4 நாட்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது..
கோட்டை விடுமா தவெக?
பொதுத்தேர்தலில் இருந்த அணுகுமுறையைவிட இந்த இடைத்தேர்தலில் விஜய்யின் பிரச்சார பாணியும் மாறியிருக்கிறது. மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும் நேரடியாக களத்தில் இறங்கி பிரசாரம் செய்த விஜய், தாராபுரத்தில் இறுதிக்கட்ட ரோடு ஷோவிலும் ஈடுபட்டார். இந்த பிரச்சார பாணியும் முதல் சத்யபாமா கண்ணீர்விட்டது வரை தவெகவின் கலக்கத்தையே காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறுகிறார்கள்..
இவ்வளவு செய்தும் கோட்டை விட்டுவிடக்கூடாது என்ற பயம் தவெகவுக்கு இருக்கவே செய்கிறது.. குறிப்பாக இந்தத் தோல்வி விஜய்யின் தனிப்பட்ட அரசியல் இமேஜை பாதிக்கக்கூடாது என்பதுதான் கட்சியின் மிகப்பெரிய கவலையாக உள்ளது.. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால்கூட, தேர்தல் களத்தில் தவெக வெல்லக்கூடிய கட்சி என்ற நம்பிக்கை வலுப்பெறும். இரண்டிலும் வெற்றி என்றால், விஜய்யை மையமாக வைத்து தமிழக அரசியலில் உருவாகிவரும் புதிய அரசியல் கணக்கு இன்னும் வேகமாக நகரலாம்... அடுத்தடுத்த இடைத்தேர்தல்கள் தவெகவுக்கு சாதகமாகக்கூடும்.
அதனால்தான் தாராபுரத்தில் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருப்பதாக தெரிந்தபோதும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், பூத் அளவிலான நிர்வாகிகள் என ஒட்டுமொத்த கட்சி இயந்திரத்தையும் களமிறக்கியிருக்கிறது தவெக. தாராபுரம் கை விட்டாலும் மதுராந்தகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று செல்வாக்கை காட்ட வேண்டும் என்பதும் அந்தக் கட்சியின் தேர்தல் கணக்காக கூறப்படுகிறது.
திமுகவின் கணக்கு வேறு
ஆனால், திமுகவின் கணக்கு வேறு. இந்த 2 தொகுதிகளுமே ஆரம்பத்தில் திமுகவுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்த தொகுதிகள் கிடையாது.. குறிப்பாக மதுராந்தகத்தில் கடந்த 2 தேர்தல்களிலும் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பலம் இருந்தபோதும்3வது இடத்துக்குத்தான் வர முடிந்தது. வேட்பாளரின் தொகுதி அறிமுகம் குறைவு, ஆரம்பகட்ட களப்பணி மந்தம் என கட்சிக்குள்ளேயே பல பிரச்சனைகள் இருந்ததாக திமுக தரப்பு கூறுகிறது.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல களம் மாறியதாக திமுக கருதுகிறது... குறிப்பாக தாராபுரத்தில் தவெகவின் கடந்த தேர்தல் நிலை, வேட்பாளர் மீதான அதிருப்தி, அதிமுக நிர்வாகிகளின் சுணக்கம் போன்றவை தங்களுக்கு சாதகமாக மாறியதாக அக்கட்சி கணக்கிடுகிறது. அதனால்தான் கடைசி நேரத்தில் மு.க.ஸ்டாலினே தொகுதி பொறுப்பாளர்கள் முதல் கீழ்மட்ட நிர்வாகிகள் வரை நேரடியாக அழைத்து தேர்தல் பணியை முடுக்கிவிட்டதாக தெரிகிறது..
தனிமரம் திமுக?
இங்கே திமுகவுக்கும் ஒரு அரசியல் கணக்கு உள்ளது.. 2ல் 1 தொகுதியில் வென்றால்கூட போதும் என்று திமுக நினைக்கிறது.. ஆளுங்கட்சியான தவெகவை எதிர்த்து எதிர்க்கட்சியாக ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றால், அதை வைத்து அடுத்த கட்ட அரசியலை இன்னும் உற்சாகமாக முன்னெடுக்க முடியும். குறிப்பாக புதிதாக உருவாகியிருக்கும் தவெக அரசியல் செல்வாக்குக்கு எதிராக திமுக தனது களப்பலத்தை நிரூபிக்க அது ஒரு வாய்ப்பாக அமையும்.
நேற்றைய தினம் மூத்த பத்திரிகையாளர் மணி, ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "திமுக தனிமரமாகிவிட்டது.. 2 தொகுதிகளிலும் வாக்கு வங்கி திமுகவுக்கு குறைவாக உள்ளது.. தாங்கள் பலவீனமாக இல்லை, தாங்களும் களத்தில் நிற்கிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே இப்போது களமிறங்கி உள்ளது" என்று கருத்து கூறியிருந்தார்.
3 கட்சிகள் - 3 கணக்குகள்
அந்தவகையில், திமுகவுக்கு இந்தத் தேர்தலில் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதுவரை கூட்டணி பலத்தை நம்பியே தேர்தல் அரசியல் செய்ததாக விமர்சிக்கப்படும் நிலையில், இந்த 2 தொகுதிகளிலும் திமுக தனித்து களமிறங்கியிருக்கிறது... அதனால் கிடைக்கும் வாக்கு பலமும் அரசியல் ரீதியாக கட்சிக்கு ஒரு புதிய அளவுகோலாக பார்க்கப்படும்.. இந்த அளவுகோல், 2 தொகுதிகளிலும் தங்களின் கட்டமைப்பை பலப்படுத்திக்கொள்ள பயன்படும்.
ஆக, 3 கட்சிகளுக்கும் 3 விதமான கணக்குகள் உள்ளன.. தனித்தனியான கட்டாயங்கள், நெருக்கடிகள் உள்ளன.. அதிமுகவுக்கு, பழைய பலத்தை காப்பாற்ற வேண்டிய தேர்தல்... தவெகவுக்கு, புதிய ஆட்சியின் மீதும், விஜய்யின் அரசியல் செல்வாக்கின் மீதும் வரும் முதல் பெரிய சோதனை... திமுகவுக்கோ, எதிர்க்கட்சியாக தனது களபலத்தை நிரூபித்து, புதிய அரசியல் சக்தியின் வேகத்தை அளவிட வேண்டிய தேர்தல்.
வெற்றி யாருக்கு?
அதனால்தான் தாராபுரமும் மதுராந்தகமும் இப்போது வெறும் 2 சட்டமன்றத் தொகுதிகளாக தெரியவில்லை. இந்த 2 தொகுதிகளில் விழும் ஒவ்வொரு ஓட்டும், அடுத்த கட்ட தமிழக அரசியலில் எந்தக் கட்சி எந்த இடத்தில் நிற்கிறது என்பதற்கான ஒரு முக்கியமான அரசியல் அளவுகோலாக மாறப்போகிறது.
அதேபோல, இங்கே வெற்றி என்பது ஒரு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல... அதன் பின்னால் ஒரு கட்சியின் நம்பிக்கை உள்ளது.. ஒரு தலைவரின் அரசியல் செல்வாக்கு அடங்கியுள்ளது.. ஒரு ஆட்சியின் மீதான பார்வை நிரம்பி உள்ளது.. ஒரு எதிர்க்கட்சியின் எதிர்கால வியூகம் அடங்கியுள்ளது.. இப்படி நிறைய விஷயங்கள் இதில் இருக்கின்றன..
அதனால்தான் தாராபுரம், மதுராந்தகம் முடிவை தமிழ்நாடு அரசியல் இவ்வளவு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது... விடிந்தால் தேர்தல்.. என்ன நடக்கபோகிறது எனுறு தெரியவில்லை.. நாம் பொறுத்திருந்து பார்ப்போம்...!!


Click it and Unblock the Notifications
