”ரன் மெஷின்" சுழன்றடிக்கும் "கிங் கோலி".. எப்படி விராட் கோலியால் மட்டும் முடிகிறது?
சென்னை: டி20 உலகக்கோப்பைத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 220 ரன்கள் விளாசியுள்ளார். ஏன் விராட் கோலி மாடர்ன் கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பது பற்றி பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்று போட்டிகளில் சிறிய அணிகளின் அபார எழுச்சி மற்றும் மழை ஆகியவற்றால் இதுவரை எந்த அணியும் அரையிறுதிக்கு முன்னேறவில்லை.
ஆனால் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு விராட் கோலியின் பேட்டிங் மிகமுக்கிய ஒன்றாக மாறியுள்ளது.
உலககோப்பை டி20: பாகிஸ்தான்-ஜிம்பாப்வே ரசிகர்கள் திடீர் மோதல்.. காரணம் மிஸ்டர் பீன்.. ஒரே காமெடி

இந்திய அணியின் திட்டம்
டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பிருந்தே விராட் கோலிக்கான திட்டத்தை இந்திய அணி சரியாக உருவாக்கியது. ஏனென்றால் விராட் கோலியால் தேவைக்கேற்ப பவுண்டரிகளும் விளாச முடியும், விக்கெட்டுகள் விழாமல் கட்டுபாட்டுடனும் விளையாட முடியும். இதனால் விராட் கோலியை சுற்றியே இந்திய அணியின் பேட்டிங் கட்டமைக்கப்பட்டது.

220 ரன்கள்
தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்தால் விராட் கோலி களமிறங்கி விக்கெட்டை தடுத்து நிறுத்தி, ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப விளையாடுவதே திட்டம். அதற்கு பின்னர் வரும் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக ரன்கள் சேர்ப்பதே இந்திய அணியின் திட்டமாக இருந்து வருகிறது. அதனால் மட்டுமே விராட் கோலி எவ்வித சிரமமுமின்றி தொடக்கத்தில் நிதானமாகவும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட முடிகிறது. இந்திய அணியின் சரியான திட்டத்தால் 4 போட்டிகளில் மொத்தமாக 220 ரன்களை குவித்துள்ளார் விராட் கோலி.

விமர்சனங்களுக்கு பதிலடி
ஆனால் விராட் கோலியை போலவே விளையாடும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு அணியில் இடம்கொடுக்காததால், ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. சில மாதங்களுக்கு முன் விராட் கோலியின் காலம் முடிந்துவிட்டது, இனி அவர் ஃபார்மிற்கு வரமாட்டார், கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெற வேண்டும் என்று பேசிய அனைத்து வார்த்தைகளுக்கும் களத்தில் நின்று விராட் கோலி பதில் அளித்து வருகிறார்.

ஃபேப் 4 பேட்ஸ்மேன்கள் நிலை
மாடர்ன் கிரிக்கெட்டின் மகத்தான வீரராக விராட் கோலி மட்டுமே இருக்கிறார். ஒரு காலத்தில் ஃபாபுலஸ் 4 என்று அழைக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், வில்லியம்சன், விராட் கோலி ஆகிய நான்கு வீரர்களில், தற்போது விராட் கோலி மட்டுமே அனைத்து ஃபார்மட்டுக்குமான வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார். இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக மட்டுமே ரூட் விளையாடி வருகிறார், வில்லியம்சன் சொந்த மண்ணில் மட்டுமே சிறப்பாக ஆடும் வீரராக இருக்கிறார், ஸ்டீ ஸ்மித்திற்கு ஆஸி. அணியில் இடம்கிடைப்பதே அபூர்வமாக இருக்கிறது. ஆனால் விராட் கோலிக்கு அப்படியல்ல.

கோலியை சுற்றி கிரிக்கெட்
ஃபார்மில் இருந்தாலும் இல்லையென்றாலும் சர்வதேச கிரிக்கெட் சூழல் தொடர்ந்து விராட் கோலியை சுற்றியே இருக்கிறது. சூர்யகுமார் யாதவ், டி வில்லியர்ஸ் போல் வித்தியாசமாக ஷாட்கள் இல்லாமல், கிரிக்கெட்டின் இலக்கணத்தில் இருக்கும் ஷாட்களை கொண்டு ஒரு வீரரால் அனைத்து பந்துவீச்சாளர்களையும் எதிர்கொண்டு சாதிக்க முடியும் என்றால் அது விராட் கோலியால் மட்டுமே முடியும். இதுநாள் வரை விராட் கோலி மட்டுமே அதனை செய்து வருகிறார்.

சாம்பியன் பட்டம்
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல், பிசிசிஐ உடனான மோதல், மனநலப் பிரச்சினை என அனைத்தையும் கடந்து விராட் கோலி மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்துள்ளார். நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றால், அதற்கு ஒரே காரணமாக விராட் கோலி மட்டுமே இருப்பார்.

விராட் கோலியின் அரங்கேற்றம்
ஏனென்றால் இந்தியாவின் மிகமுக்கிய பேட்ஸ்மேன் சிறப்பாக ஆடும்போது, அந்த வீரரின் நம்பிக்கை மற்ற வீரர்களுக்கும் சென்றுசேரும். அதுதான் இந்திய அணியில் நடந்து வருகிறது. விராட் கோலியின் எனர்ஜியை மற்றவர்களுக்கும் கொடுத்து வருகிறார். எந்த இடத்தில் இருந்து தனது தோல்வி தொடங்கியதோ, அதே ஆஸி. மண்ணில் யாரும் நினைக்காத ஆட்டத்தை விராட் கோலி அரங்கேற்றம் செய்து வருகிறார். எதிர்காலத்தில் ஆஸி. மண்ணில் விராட் கோலியின் சிலையோ வைக்கவும் வாய்ப்புள்ளது. அப்படிதான் அவரது ஆட்டத்தை ஆஸி. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.