சண்டியர்னு பேர் வச்சா கிருஷ்ணசாமி கோச்சிப்பாரு.. 2003 போல வரலாறு திரும்புகிறதா? கமலுக்கு வார்னிங்
சென்னை: கமல்ஹாசனின் புதிய திரைப்படத்துக்கு மீண்டும் "சண்டியர்" எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தைத் தொடங்கவும், படப்பிடிப்பு நடத்தவும், தமிழகத்தில் வெளியிடவும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் சொல்லியிருப்பது, 23 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய சர்ச்சையை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது...!!!
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி, முதலில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். தீபாவளியை மது இல்லாமல், பட்டாசு புகையைக் குறைத்து அனைவரும் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கிருஷ்ணசாமி எச்சரிக்கை
தொடர்ந்து கமல்ஹாசனின் புதிய திரைப்படம் குறித்துப் பேசிய கிருஷ்ணசாமி, "கடந்த 2003-ம் ஆண்டு இதே 'சண்டியர்'' என்ற பெயரில் கமல்ஹாசன் படம் எடுக்க முயன்றபோது தென் தமிழகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் புகார் அளித்தோம். அதன் பிறகுதான் படத்தின் பெயர் மாற்றப்பட்டது.
இப்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரை வைத்திருக்கிறார். இது சமூகத்தில் சாதி ரீதியான மோதல்களை உருவாக்கும். நடிகராக இருந்த கமல்ஹாசன் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர், அரசியல் கட்சித் தலைவர். அவர் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுவதாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒருவர், சாதி மோதல்களைத் தூண்டும் வகையிலான பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது.
சண்டியர் பட எதிர்ப்பு
இந்தப் படத்தின் பெயரை மாற்ற வேண்டும். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தைச் சந்தித்துப் புகார் அளிக்க இருக்கிறோம். சண்டியர் என்ற பெயரில் படத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம். படப்பிடிப்பு நடத்தவும், தமிழகத்தில் வெளியிடவும் அனுமதிக்க மாட்டோம். தொடர்ந்து படத்தை எடுத்தால் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்" என்றார்.
கிருஷ்ணசாமியின் இந்த பேட்டியும், எச்சரிக்கையும் திரையுலகில் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.. காரணம், 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்தான்
கடந்த 2003-ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த படத்துக்கும் முதலில் இதே பெயர்தான் வைக்கப்பட்டிருந்தது. கையில் அரிவாளுடன் இருக்கும் போஸ்டர்களையும் கமல் வெளியிட்டார்.
அப்போது புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இந்தப் பெயருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தென் தமிழகத்தில் தேவர் சமூகத்தினருக்கும் தலித் மக்களுக்கும் இடையே சாதிய மோதல்கள் நிலவி வந்த சூழலில், "சண்டியர்" என்ற பெயர் அரிவாள் கலாச்சாரத்தையும் வன்முறையையும் ஊக்குவிக்கும் என எதிர்ப்பு கிளம்பியது.
ஜெயலலிதா சந்திப்பு
தேனி மாவட்டத்தில் நடைபெறவிருந்த படப்பிடிப்பைத் தடுக்கப் போவதாக கிருஷ்ணசாமி பகிரங்கமாகவே எச்சரித்தார்.. இதனால் ஷூட்டிங் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது. தான் விரும்பிய இடங்களில் ஷூட்டிங் நடத்த முடியாமல், செட் அமைத்து, ஷூட்டிங்கை தொடர வேண்டிய நிலை கமல்ஹாசனுக்கு அப்போது ஏற்பட்டது.
அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். படப்பிடிப்புக்கும் படத்திற்கும் பாதுகாப்பு தருமாறு கமல் கோரிக்கை வைத்தார். ஆனால், தென் மாவட்டங்களில் ஏற்கனவே சாதிய பதற்றங்கள் நிலவி வந்ததால், கூடுதல் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்க விரும்பாத அதிமுக அரசு, படப்பிடிப்பிற்குச் சிறப்புப் பாதுகாப்பு தர மறுத்துவிட்டது. அரசின் ஆதரவு கிடைக்காத நிலையில், திறந்தவெளியில் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் உருவானது.
சண்டியர்னு பேர் வச்சா
இந்த விவகாரத்தில் தனது ஆதங்கத்தையும் கமல், அப்போது வீடியோ மூலம் வெளிப்படுத்தியிருந்தார். "சண்டியர்னு பேர் வச்சா கிருஷ்ணசாமி கோச்சுப்பாரு, முரட்டுக்காளையின்னு வச்சா ரஜினி கோச்சுப்பாரு, பராசக்தின்னு வச்சா கலைஞர் கோச்சுப்பாரு.. அப்புறம் என்னதான் பேர் வைக்கிறது?" என்று மிகக் காரமான கிண்டலுடன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பிறகுதான் படப்பிடிப்புத் தடையைத் தவிர்க்கவும் தயாரிப்பு விரயத்தைத் தடுக்கவும் வேறு வழியின்றி படத்தின் தலைப்பை "விருமாண்டி" என மாற்றினார். வெளிப்புறப் படப்பிடிப்பைக் குறைத்து, அதிகளவில் சென்னை செட்டுகளிலேயே படப்பிடிப்பை நடத்தி 2004 ஜனவரியில் படத்தை வெளியிட்டார்.
பொங்கல் ரிலீசுக்கு வந்த விருமாண்டி படம், கிராமியப் பின்னணியில் உருவானது. மரண தண்டனை, வன்முறை, மனித உறவுகள், நீதி போன்றவற்றை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் அதே பெயர் ஏன்?
23 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மீண்டும் சண்டியர் என்ற பெயரைத் தனது புதிய படத்துக்குத் தேர்வு செய்துள்ளார். இதனால் பழைய விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
புதிய படத்தின் ஷூட்டிங் ஷெட்யூல், வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கிருஷ்ணசாமி தரப்பில் எதிர்ப்பு இப்போதே கிளம்பியிருக்கிறது.. இதனால் கமல்ஹாசன் தனது முடிவை மாற்றுவாரா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது...!!!




Click it and Unblock the Notifications
