உண்மை! தமிழ்நாட்டிலும் நிச்சயம் நடக்கும்! பீட்டர் அல்போன்ஸ் சொன்ன பாயிண்டுக்கு பாஜக நாராயணன் பதிலடி!
சென்னை : மதக்கலவரங்கள் நடைபெற்ற இடத்தில் எல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது என பீட்டர் அல்போன்ஸ் சுட்டிக்காட்டிய நிலையில், உண்மைதான், தமிழகத்திலும் பாஜக ஆட்சிக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
எங்கெல்லாம் மதக்கலவரம் நடந்து முடிந்ததோ அங்கெல்லாம் பாஜக தான் ஆட்சிக்கு வந்துள்ளது. அது தமிழ்நாட்டில் நடக்காது என தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலடியாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மதக்கலவரங்ளை ஒடுக்க தவறிய அரசுகளை மக்கள் விரும்பவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரம் நடக்காது என்று மக்கள் நம்புகின்றனர். தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கோவை சம்பவம்
கோவை உக்கடம் அருகே கடந்த அக்டோபர் 23அம் தேதி நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜகவினர், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்து வருகின்றன. பாஜகவின் குரலை ஆளுநரும் ஒலிப்பதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இதனால் பாஜக vs எதிர்க்கட்சிகள் இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து வருகிறது.

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் ஆளுநர்
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்தும், அதுபற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் கருத்துகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது அவரின் பதவிக்கு ஒவ்வாத செயல் எனத் தெரிவித்தார்.

வன்முறைக் களமாக
மேலும் பேசிய பீட்டர் அல்போன்ஸ், "தமிழக அரசுக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் பொருளாதார சமூக முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இருவரும் தமிழ்நாட்டை வன்முறைக் களமாக மாற்றவும், வெறுப்பு அரசியலை செய்யவும் முயற்சிக்கின்றனர். மத்திய அரசு பின்னால் இருந்து இந்த வேலைகளை செய்கிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது.

சந்தேகம் எழுகிறது
கேரளா, தமிழ்நாடு அரசுகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்கள் தங்களின் செயல்பாடுகளை கைவிட வேண்டும். சனாதானத்தின் சோதனைக்களமாக கோவையை, கொங்கு மண்டலத்தை மாற்ற முயற்சி நடக்கிறது. எங்கெல்லாம் மதக்கலவரம் நடந்து முடிந்ததோ அங்கெல்லாம் பாஜக தான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது தமிழ்நாட்டில் நடக்காது" எனத் தெரிவித்தார்.

இங்கும் நடக்கும்
பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். பீட்டர் அல்போன்ஸ் பேச்சைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "உண்மை! மதக்கலவரங்ளை ஒடுக்க தவறிய அரசுகளை மக்கள் விரும்பவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரம் நடக்காது என்று மக்கள் நம்புகின்றனர். தமிழகத்திலும் விரைவில் பாஜக ஆட்சியமைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications