வெளிநாட்டு நிதியுடன் நாட்டை சீர்குலைக்க சதி.. டெல்லி போராட்டம் குறித்து ஸ்ரீதர் வேம்பு சொன்ன கருத்து
சென்னை: வெளிநாட்டு ஆதரவுடனும், நிதி உதவியுடனும் நாட்டை சீர்குலைக்க முயலும் சதிகளுக்கு எதிராக தேச பக்தர்கள் ஒன்றுபட வேண்டும் என்று ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி டெல்லியில் போராட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பம் நமக்கு எதிரான போராயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களை முன் கூட்டியே காவல்துறை கைது செய்தது.

சிஜேபி கட்சிக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அமைப்புகள், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் காவல்துறை விட்டு வைக்கவில்லை. அதேபோல் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வராமல் இருக்க மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.
அதேபோல் டெல்லியில் மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது. இருப்பினும் நாடு முழுவதும் சிஜேபி கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களிலும் பரபரப்பான சூழல் நிலவியது. அதேபோல் டெல்லி ஜந்தர் மந்தருக்கு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பேரணியாக செல்வோம் என்று சிஜேபி கட்சி அறிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று சிஜேபி கட்சி அறிவித்துள்ளது. சிஜேபி கட்சியின் போராட்டத்திற்கு இளைஞர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி போராட்டம் தொடர்பாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில், வெளிநாட்டு ஆதரவுடனும், நிதி உதவியுடனும் நாட்டை சீர்குலைக்க முயலும் சதிகளுக்கு எதிராக தேச பக்தர்கள் ஒன்றுபட வேண்டும். தொழில்நுட்பம் நமக்கு எதிராக போராயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த போரை எதிர்கொள்ள நாம் புதிய தொழில்நுட்பங்களையும் பொறியியல் தீர்வுகளையும் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
