குப்பையில் ஜொலித்த வைர நெக்லஸ்; தேடி எடுத்த துப்புரவுத் தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?
கொச்சி: குப்பையில் கிடந்த வைர நெக்லஸை கேரளத் துப்புரவுப் பணி செய்யும் இரண்டு பெண்கள் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவுக்குப் பின்னர் கேரளாவில் உணர்ச்சிகரமான உண்மைக் கதைகள் பல நாள்தோறும் வெளிவந்துகொண்டுள்ளன. ஒருவர் 100 பேரை மலைச்சரிவு விபத்திலிருந்து காப்பாற்றிவிட்டு, மீண்டும் 6 பேரைக் காப்பாற்ற முயன்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு தன் உயிரை இழந்துள்ளார். மற்றொருவரின் செல்லப் பிராணி கிளி ஒன்று நிலச்சரிவை முன்கூட்டியே உரிமையாளருக்கு உணர்த்தவே அவரும் அவரது அக்கம் பக்கத்துக் குடும்பமும் நிலச்சரிவு விபத்தில் சிக்காமல் உயிர்பிழைத்துள்ளது.

இந்த வரிசையில் இப்போது கொச்சியில் உணர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கொச்சியில் உள்ள கும்பளங்கி பஞ்சாயத்தைச் சேர்ந்தவர்கள் ஜெஸ்ஸி மற்றும் ரீனா. இந்த இருவரும் பிளாஸ்டிக் கழிவுகளில் கலந்து கிடந்த வைர நெக்லஸ் மற்றும் தோடுகளைக் கண்டு எடுத்துள்ளனர். அந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைத்ததும் அதை யாருக்கும் தெரியாமல் தாமே வைத்துக் கொள்வோம் என்று இவர்கள் நினைக்கவே இல்லை. உடனடியாக உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
நேர்மையாக அந்த வைர நெக்லசை திருப்பிக் கொடுத்ததற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்களைப் பாராட்டி ரொக்கமாகப் பரிசை கொடுத்துள்ளனர். ஆனால், அதைக் கூட தாங்கள் வைத்துக் கொள்ள இந்தப் பெண்மணிகள் விரும்பவில்லை. அந்தப் பரிசுத் தொகையை வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு (சிஎம்டிஆர்எஃப்) பரிசு பெற்ற அந்த இடத்திலேயே வழங்கியுள்ளனர். ஆகவே, இந்தப் பெண்கள் கேரளாவில் இப்போது பேசப்படும் நபர்களாக மாறியுள்ளனர். கூடவே பலரது பாராட்டையும் பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக மனோரமா பத்திரிகை ஜெஸ்ஸியுடன் தொலைபேசியில் பேசி விவரங்களைக் கேட்டுள்ளது. அந்த அழைப்பை எதிர்பார்க்காத இவர்கள் உற்சாகத்தில், 'ஜெஸ்ஸி கொச்சியில் பிரபலமாகிவிட்டார்' என்று சொன்னபடி துள்ளிக்குதிக்கும் சத்தம் கேட்டுள்ளது. சுமார் 53 வயதான இந்த பெண் 10 வருடங்களாகக் கழிவுகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஓட்டுநர் வேலை பார்த்து வந்த இவரது கணவர், 2014இல் கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தைத் தொங்கவிடுவதற்காக மரத்தில் ஏறியுள்ளார். அப்போது மரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார். அன்று முதல் அவர் வீட்டில் நோயாளியாகப் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அப்போது முதல் இவர் தனது குடும்ப பாரத்தைத் தனியாக சுமந்து வருகிறார்.
இந்த இரண்டு பெண்களும் கடந்த ஜூலை மாதம் இந்த வைர ஆபரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர். மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை தனித்தனியே தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது ஒரு மூட்டையில் இந்த ஆபரணம் இருந்துள்ளது. ரீனாவும், ஜெஸ்ஸியும் பிளாஸ்டிக் கவரில் ஏதோ சுற்றப்பட்டிருப்பதை உணர்ந்து பிரித்துப் பார்த்துள்ளனர்.
"அதைப் பார்க்கும் போதே பிரகாசமாக இருந்தது. நான் தங்கத்தை மட்டுமே பார்த்தேன். மற்றது வைரம் என்று என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால், அதன் மதிப்பு அதிகம் எனப் புரிந்தது. நாங்கள் அந்தக் குப்பை மூட்டையைச் சேகரித்த வீட்டை அறிந்து வைத்திருந்தோம். ஆகவே, உடனடியாக அதை உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்தோம்" என்கிறார் ஜெஸ்ஸி.
வைர நகைகளைப் பெற்றுக் கொண்ட உரிமையாளர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துள்ளார். அது பற்றி ரீனா, “ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் அதைத் தொலைத்துவிட்டு, நகைகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அதைத் திரும்பக் கிடைத்தால் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் நகைகளைக் கொடுத்தபோது, அவர்கள் சந்தோஷத்தில் அப்படியே எங்களைக் கட்டிப்பிடிக் கொண்டார்கள்.
உடனே அதை எங்கள் கழுத்தில் போட்டுப் பார்க்கச் சொன்னார்கள். நாங்கள் அதை அதைப் பணிவுடன் மறுத்துவிட்டோம். நகைகள் கிடைத்ததில் அவர்கள் முகத்தில் அவ்வளவு ஆனந்தம். கண்களில் ஆனந்தக் கண்ணீர் வேறு. அந்த நகைகளின் விலை ரூ. 4 லட்சம் இருக்கும் என்றும், ஒரு ஜோடி தோடு விலை ரூ. 25,000 இருக்கும் என்றும் நாங்கள் நினைத்தோம்” என்கிறார்.
பஞ்சாயத்து போர்டு சார்பில் ஏற்பாடு செய்திருந்த விழாவில், கொச்சி எம்எல்ஏ கேஜே மேக்சி, இந்தப் பெண்களின் நேர்மையைப் பாராட்டி ரொக்கப் பரிசாக ஒரு தொகையை வழங்கினார். அதற்கு அந்தப் பெண்கள் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பரிசாக வந்த பணத்தை முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கும்படி கூறி பணத்தைத் திருப்பி கொடுத்துள்ளனர். ஏழைகளாக இருந்தாலும் மனதளவில் இந்த இரண்டு பெண்களும் கோடீஸ்வரர்கள்தான்.
“எங்கள் பெற்றோர் எங்களை வளர்த்த விதத்திற்குக் கிடைத்த ஆசீர்வாதமாக இந்தப் பரிசை நாங்கள் கருதுகிறோம். நமக்குச் சொந்தமில்லாத ஒன்றை நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. அதைத் திருப்பித் தர வேண்டும். அதற்கு மேல் எதுவும் இல்லை” என்கிறார் ரீனா. இது வெறும் வார்த்தையல்ல; சுவரில் எழுதி மாட்ட வேண்டிய பொன்மொழி அது.












Click it and Unblock the Notifications