எடப்பாடி அணிக்குள் உச்சகட்ட மோதல்.. செருப்பை தூக்கிய நிர்வாகி.. காது கூசும் வார்த்தைகள்.. அச்சோ!
கோவை : வால்பாறையில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் ஆதரவாளரான அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணிக்குள் ஏற்பட்ட இந்த மோதல் வால்பாறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவில் கடந்த 7 மாதங்களாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், ஈபிஎஸ் அணிக்குள்ளேயே இரு பிரிவினர் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர், காது கூசும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி, அடித்துக் கொண்ட நிலையில், நிர்வாகி ஒருவர் செருப்பை எடுத்து தாக்கிய காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதிமுக ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி முன்னிலையில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்கவும், தொழில் வரியை ரத்து செய்யவும் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்தும், வால்பாறை பூங்கா, படகு இல்லத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இரு கோஷ்டி இடையே மோதல்
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக தொழிற்சங்க நிர்வாகியும் கூட்டுறவு வங்கி தலைவருமான அமீது கோஷ்டிக்கும், அதிமுக நகர செயலாளர் மயில்கணேஷ் கோஷ்டிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டம் ஒரு வேனில் நடைபெற்ற நிலையில், அந்த வாகனத்தில் ஏற முயன்ற அமீதுவை கீழே தள்ளி அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு கோஷ்டிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

செருப்பை தூக்கி
இரு தரப்பினரும், மாறி மாறி கடுமையாகத் தாக்கிக் கொண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் வேனில் நின்ற அதிமுக நிர்வாகி ஒருவர் செருப்பை தூக்கி அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை முன்னிலையில் அதிமுகவில் இரு தரப்பினர் கடுமையாக கெட்ட வார்த்தைகளைப் பேசி மோதிக்கொண்டதால் சிறிது நேரம் கடுமையான கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அணிக்குள்ளேயே சண்டை
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே கடந்த 7 மாதங்களாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஈபிஎஸ் தரப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈபிஎஸ் அணிக்குள்ளேயே இரு பிரிவினராகப் பிரிந்து அடித்துக்கொண்டது அதிமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications