கோபம் காட்டிய குருமூர்த்தி..! உறுதியாக நிற்கும் அண்ணாமலை! இந்தி விவகாரத்தில் மீண்டும் வார்த்தை போர்!
கோவை : இந்தி விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது தனக்கு பிடிக்கவில்லை என துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி கூறிய நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணமாலை 'தமிழகத்தில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது' என மீண்டும் உறுதிபட கூறியுள்ளார்.
Recommended Video
இந்தி திணிப்பு குறித்த சர்ச்சைகள் மீண்டும் மீண்டும் கிளம்பி விவாத பொருளாகி மாறி வருகிறது. நீண்ட காலமாகவே இந்தி திணிப்புக்கு தமிழகம் பலத்த எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறது அனைவரும் அறிந்ததே.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை அமைதியாக இருந்த இந்தி திணிப்பு விவகாரம், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி அலுவல் மொழி பேச்சின் காரணமாக தமிழகம் மட்டுமல்லாது தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கிடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்தி திணிப்பு
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் தமிழக பாஜக தெளிவாக இருக்கிறது." என்றார். , "இந்தியை திணிக்க முயற்சித்தால் தமிழக பாஜக நிச்சயம் அதனை எதிர்க்கும். இந்தி திணிப்பு முயற்சியை எந்தவிதத்திலும் தமிழக பாஜக ஏற்காது. தாய்மொழி தமிழ்தான் நமக்கு பெருமை, இந்தியால் நமக்கு பெருமையில்லை .அந்நிய மொழியான ஆங்கிலமும் , இந்தியும் ஒன்றுதான் எனக்கு" என கூறியிருந்தார்.

துக்ளக் குருமுர்த்தி
அவரது பேச்சு பாஜக தலைமையை நேரடியாக எதிர்ப்பது போல் இருந்தாலும் அதனை பாஜக தலைமை கண்டுகொள்ளவில்லை. அதேநேரத்தில் கட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள் இதுகுறித்து தலைமைக்கு புகார் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக பாஜக தலைமையுடன் நெருக்கம் காட்டி வரும் துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி இதுதொடர்பாக அவ்வப்போது தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

எனக்கு பிடிக்கவில்லை
இந்த நிலையில் துக்ளக் இதழ் 52ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது தனக்கு பிடிக்கவில்லை எனவும் பாஜக இந்த தவறை செய்யக்கூடாது என கூறினார். மேலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தோல்வி அடைந்து இருப்பதாகவும் பேசினார். அண்ணாமலை பேசியது தனக்கு பிடிக்கவில்லை என நேருக்கு நேர் குருமூர்த்தி கூறியது, பெரும் பரபரப்பை அரசியல் தளத்தில் ஏற்படுத்தியது.

உறுதியான நிலைப்பாடு
இதுகுறித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில் குருமூர்த்திக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியில் உறுதியான நிலைப்பாடு தமிழகத்தில் இந்தித் திணிப்பை ஏற்க முடியாது. இது அண்ணாமலை சொல்லிவிட்டார் என்பதை விட, இது தான் கட்சியினுடைய நிலைப்பாடு. அண்ணாமலை என்பவன் தனிமனிதன் கிடையாது அதைச் சொல்வதற்கு எனக்கு உரிமையும் கிடையாது. தமிழகத்தில் இந்தியை திணிக்க முடியாது என்பது கட்சியின் நிலைப்பாடு. தாமாக முன்வந்து இந்தி கற்றுக் கொண்டால் சந்தோஷம். நானும் இந்தி கற்றுக் கொண்டு வருகிறேன். ஆனால் கட்டாயப்படுத்தி யாரையும் இந்தி படிக்க வைக்க முடியாது" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications