கோவை கைதி தப்பித்து 3 நாளாச்சு.. ஏற்கனவே காவல் பாதுகாப்பில் தப்பித்தவரை கூட பாதுகாக்க முடியாதா
கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. சிறை கைதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறை உள்ளது. தேனி தேக்கம்பட்டி சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பி சென்று, பிறகு கைது செய்யப்பட்டனர். கோவை மத்திய சிறையில் ராகவன் என்கிற கைதி கடந்த சனிக்கிழமை தப்பினார். 3 நாட்களாகியும் அவரை பிடிக்கவில்லை. ஏற்கனவே காவல்துறை பாதுகாப்பில் தப்பித்த கைதியை, மெத்தனமாக கையாண்டு தப்பிக்கவிட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் ராகவன் (வயது 25). இவர் மீது தமிழகம், கர்நாடகா மாநிலங்களில் வழிப்பறி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரை அன்னூர் காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அன்னூர் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நள்ளிரவு கோவை மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்டார். சிறை வாளாகத்தில் இருந்து கைதி ராகவன் திடீரென தப்பி ஓடினார்.

கோவை சிறையில் கைதி தப்பியோட்டம்
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பி பிடிபட்ட அதிர்ச்சி ஓய்வதற்குள் இந்த சம்பவம் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் எச்சரித்தும் சிறை பாதுகாப்பில் மெத்தனபோக்கு நிலவுகிறது. இத்தனைக்கு கோவை மத்திய சிறையில் 400க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தேனி கிளை சிறை போல அல்ல. இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் மீறி ராகவன் தப்பித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறை, தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவரை 3 நாட்களாக காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கவனக்குறைவுக்குப் பொறுப்பான நான்கு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு முன்பும் ஒருமுறை காவல்துறையிடம் இருந்து தப்பித்துள்ளார். அப்படியும் அவரை சரியாக பாதுகாக்காதது சர்சையை ஏற்படுத்தியது.
மெகா மெத்தனம்
ராகவன் திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் தொடர்புடையவர். தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருட்டு வழக்கில் ஒன்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக போலீசார் ராகவனை கைது செய்தனர். விசாரணைக்காக தமிழகம் அழைத்து வந்தனர். அப்போது அன்னூர் அடுத்த கணுவ கரையில் இயற்கை உபாதை என்று கூறி போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளார்.
பிறகு கண் இமைக்கும் நேரத்தில் வேனிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கர்நாடக காவல்துறையினர் அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் அன்னூர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த வழக்கில் தான் அவரை அன்னூர் காவல்துறையினர் கைது செய்தனர். பிடிபட்டார். ஏற்கனவே காவல் பாதுகாப்பில் தப்பியவரை, கூடுதல் எச்சரிக்கையுடன் கையாள காவல்துறையினர் தவறிவிட்டனர்.
கோவைக்கே இந்த நிலை
அதன் விளைவு தான் மீண்டும் தப்பித்துள்ளார். இது முழுக்க முழுக்க காவல்துறையின் மெத்தன போக்கு. தேனி சிறையை போல கோவை மத்திய சிறை காட்டு பகுதியில் இல்லை. இது கோவையின் மைய பகுதியில் அமைந்துள்ளது. ஏராளமான சிசிடிவி, டிரோன் கேமரா, வாகன தணிக்கை நடத்தியும் ராகவனை கைது செய்ய முடியவில்லை. இதற்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
