"காதுகள் பாவமில்லையா" ரூ.345 மெஷினின் விலை ரூ.10 ஆயிரமா? அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி அட்டாக்!
கோவை: பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உபகரணங்களின் விலையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உயர்த்தி கூறிய சர்ச்சை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல் அண்ணாமலையின் ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே என்றும் காதுகள் பாவமில்லையா என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கைக் கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்ற எண்ணத்தில் பாஜக உதவி செய்யவில்லை. இங்கே அனைவரும் சமமானவர்கள். ஒருவேளை உங்களுக்கு கஷ்டமிருந்தால் கூட, அந்த கஷ்டம் நிரந்திரம் கிடையாது.

ரூ. 10,000 மதிப்பில் கருவிகள்
அதனால் பாஜக சார்பாக கொடுக்க கூடிய சிறு காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து எங்களோடு இருங்கள். ஏழை மக்களை சந்திப்பதன் மூலமாகவே இறைவனை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். பாஜக எப்போதும் சேவை மூலமாக வளரும் கட்சி என்று தெரிவித்தார். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக் கூடிய ஒவ்வொரு மெஷினும் ரூ.10,000-க்கு மேல் இருக்கக்கூடிய மெஷின் என்று தெரிவித்தார்.

காது கேளாதோருக்கான கருவி விலை
அதில் காது கேளாதோருக்கு Cyber Sonic என்ற நிறுவனத்தின் கருவி வைக்கப்பட்டிருந்தது. அதைப் பரிசோதித்தபோது Made in China எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை இணையத்தில் தேடியபோது இதே சிறப்பம்சங்களுடன்கூடிய Cyber Sonic நிறுவனத்தின் கருவி ரூ.345 என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ரூ.345க்கு வாங்கிய மெஷினின் விலையை ரூ.10 ஆயிரம் என்று அண்ணாமலை கூறியதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கினர்.

செந்தில் பாலாஜி ட்வீட்
இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார், 37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம், கணுக்கால் தண்ணீரில் டைட்டானிக் ட்ராமா, 9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ், 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச், இன்று, ரூ.345/- மெஷின் ரூ.10,000.

காதுகள் பாவமில்லையா
ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே என்று பதிவிட்டுள்ளதோடு, #காதுகள்பாவமில்லையா என்று ஹேஷ்டேக்-யும் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திமுகவினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்வீட்டை பதிவிட்டு, விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்ட ஆதாரத்தை இதுவரை அண்ணாமலை வெளியிடவில்லை. அதற்குள் இன்னொரு சர்ச்சை குறித்து செந்தில் பாலாஜி ட்வீட் செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications