தாராபுரத்தில் பிரசார பொதுக்கூட்டம்.. பிரதமர் மோடிக்கு முதல்வர், துணை முதல்வர் உற்சாக வரவேற்பு!
கோவை: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
அரசியல் கட்சியினர் மாநிலம் முழுவதும் பம்பரமாக சுழன்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தமிழக தலைவர்கள் மட்டுமின்றி தேசிய தலைவர்களான அமித்ஷா, நிர்மலா சீதாராமன்,ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி உள்பட பலரும் தமிழகத்தில் பிரசாரம் செய்தனர்.

மோடி தமிழகம் வருகை
பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுவைக்கு வந்தார். அப்போது தி.மு.க.வையும், காங்கிரசையும் கடுமையாக தாக்கி பேசினார் பிரதமர் மோடி. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் மற்றும் புதுவைக்கு வருகை தருவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தாராபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டம்
அதன்படி இன்று காலை 10.15 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளம் மாநிலம் பாலக்காடு சென்ற மோடி, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 1.30 மணிக்கு தாராபுரம் உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள அமராவதி திடல் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வருகை புரிந்தார்.

முதல்வர் பங்கேற்பு
மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேடைக்கு வந்ததும் அங்கு இருந்தவர்களை பார்த்து மோடி கையசைத்தார். மேலும் மேடையில் இருந்த தலைவர்களையும் பார்த்து கைகூப்பி வணக்கம் செலுத்தினார்.

கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
இந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். பின்பு கூட்டம் முடிந்ததும் அங்கு இருந்து கோவை செல்லும் மோடி, மாலையில் புதுவையில் நடக்கும் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை, தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.