ஜனவரி முதல் வாரத்தில் தவெகவில் வரப்போகும் பெரிய மாற்றம் - செங்கோட்டையன் சஸ்பென்ஸ்
கோவை: தமிழக வெற்றிக் கழகத்தில் மற்றவர்கள் இணைவது குறித்து ஜனவரி முதல் வாரத்தில் தெரியவரும் என்றும், விஜயை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இணைய முடியும், காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் இணைவது குறித்து என் கவனத்திற்கு இதுவரை வரவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நேற்று முன்தினம் மலேசியாவில் ஆடியோ ரிலீசுக்காக சென்றிருந்தார். அந்தக் கூட்டத்தை பார்க்கின்ற பொழுது அண்டை நாடான மலேசியா வியக்கும் அளவிற்கு, உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய் ரோடு ஷோ
இதுவரை மலேசியாவை பொருத்தவரை பிரதமர், குடியரசுத் தலைவர் மட்டும்தான் ரோட் ஷோ நடத்தியிருப்பார்கள். இந்த முறை இவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரலாற்று நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை வேண்டும் என்ற முறையில் பெண்கள், இளைஞர்கள் என 18 முதல் 35 வரை இருப்பவர்கள் ஒரு மனதாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
எம்ஜிஆருக்கு அடுத்து..
பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து அலை மோதி வருகின்ற கூட்டம் 1972 இல் புரட்சித் தலைவருக்கு பார்த்ததை போல, 1988 இல் ஜெயலலிதாவிற்கு பார்த்ததை போல ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது. இந்த மாற்றம் தமிழகத்தில் முதலமைச்சராக அமர்வதை மக்கள் சக்தியோடு இணைந்து நடைபெறும்.
காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் இணைவது குறித்து பேசி வருவது குறித்த கேள்விக்கு, பல இடங்களில் இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த கருத்துக்களை பொருத்தவரை என்னை போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை.
பரிசு பெற்று வந்த சீமான்
ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த குழந்தை என திருமா விமர்சித்து இருப்பது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு தலைவரும் ஒரு கருத்தை சொல்கிறார்கள். அப்படி நாங்கள் சொல்ல வேண்டும் என்று சொன்னால் இலங்கை தமிழருக்கு குரல் கொடுத்த சீமான், அங்கு விருந்து சாப்பிட்டுவிட்டு பரிசு வாங்கி வந்த காலமும் இருக்கிறது.
காங்கிரஸ் நிர்வாகிகள் பேசுவது குறித்த கேள்விக்கு, கவனத்திற்கு வரவில்லை கவனத்திற்கு வந்தால் தான் பதில் அளிக்க முடியும். ஒரு புதிய இயக்கம் துவங்கியிருக்கிறது. வரலாறு படைக்கின்ற இயக்கம். மக்கள் கோரிக்கை வைக்கின்ற பொழுது எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆய்ந்து கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.
விஜய்தான் முதல்வர்
எங்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்வார்கள் மட்டும்தான் கூட்டணியில் இணைய முடியும். திருமாவளவன் கருத்து வேறு, அவருடைய கருத்துக்களை கேட்கின்ற பொழுது திமுக வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த பொழுது என்ன செய்து கொண்டு இருந்தார் என்பதை அவரிடம் கேட்க வேண்டும்
கூட்டணி சஸ்பென்ஸ்
கூட்டணியில் மற்றவர்கள் இணைவது குறித்த கேள்விக்கு, பொறுத்திருங்கள் ஜனவரி முதல் வாரத்திற்குள் அனைத்தும் தெரியும். 100 நாள் வேலை திட்டம் தொடர்பான கேள்விக்கு, எல்லோரும் வாழ வேண்டும். எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. எங்களைப் பொறுத்தவரை தெளிவாக சொல்லியிருக்கிறோம் ஈரோடு பொதுக்கூட்டத்தில் இரண்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறோம் என்பதற்கு தொண்டர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். மக்கள் உணர்வை விஜய் பிரதிபலிக்கின்றார் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications