என்.ஐ.ஏ + உளவுத்துறை இரண்டிலும் குறைபாடுகள்.. முதலில் ஒப்புக்கொள்ளுங்கள்.. விளாசிய கே.பாலகிருஷ்ணன்!
கோவை : உளவுத்துறை, என்.ஐ.ஏ அமைப்புகளில் உள்ள குறைபாடுகளைக் களைவது பற்றி அரசு ஆய்வு செய்ய வேண்டும் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் ஆதாயம் தேட வேண்டும், அமைதிக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பந்த் போன்ற போராட்டங்கள் அவசியமற்றது என்றும் சி.பி.ஐ.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், கோவையில் இப்படியொரு சம்பவம் நடக்கப்போகிறது என்று, என்ஐஏவுக்கும் தெரியவில்லை, உளவுத்துறைக்கும் தெரியவில்லை எனும்போது, இரண்டு அமைப்புகளிலும் உள்ள குறைபாடுகளை எதிர்காலத்தில் களைந்தால்தான் தமிழ்நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

சிபிஐஎம்
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அமைதியான கோவை அனைவருக்கும் தேவை என்ற அடிப்படையில் கோவையில் அமைதியை பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கோவையில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறை துரிதமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்திருப்பது, சம்பவத்தின் பின்னணியை முழுமையாக ஆய்வு செய்து அரசின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தகுந்தது.

உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லை
அதேபோல், நேற்று தமிழக முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி, இதில் பன்னாட்டு பின்னணி தொடர்புடைய சூழலில், இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருப்பதும் அரசின் ஒரு நல்ல நடவடிக்கை. ஆனால், அதே சமயத்தில் நான் தமிழக அரசைக் கேட்டுக்கொள்வது, இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னால், இப்படியான வெடி விபத்துகள் நடப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதை ஏன் உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லை?

எந்த மூலையில்
எனவே உளவுத்துறையில் உள்ள குறைபாடுகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் குறை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கை எந்த மூலையில் ஏற்பட்டாலும், அதனை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு தமிழகத்தின் உளவுத்துறை பலப்படுத்தப்பட வேண்டும்.

என்.ஐ.ஏ ஒப்புக்கொள்ள வேண்டும்
இதில் உயிரிழந்திருக்கும் ஜமேசா முபீன் உட்பட ஒரு 50-க்கும் மேற்பட்டவர்கள் என்ஐஏ விசாரணை வளையத்திற்குள் ஏற்கெனவே இருந்தவர்கள். இவர்களை ஏற்கெனவே என்ஐஏ கண்காணித்து வந்துள்ளனர். அவர்களால்கூட ஏன் இந்த தீவிரவாத நடவடிக்கைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. என்ஐஏவின் புலனாய்வு பணிகளில்கூட மந்தம் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்களின் பணியிலும் குறை ஏற்பட்டிருப்பதை யதார்த்தப்பூர்வமாக என்ஐஏ ஒப்புக்கொள்ள வேண்டும்.

என்.ஐ.ஏ + உளவுத்துறை
கோவையில் நடைபெற்ற சதித் திட்டம் மத்திய அரசின் என்ஐஏவுக்கும் தெரியவில்லை, மாநில அரசின் உளவுத்துறைக்கும் இது தெரியவில்லை எனும்போது, இரண்டு நிறுவனங்களிலும் உள்ள குறைபாடுகளை களைவது அவசியம். இந்த குறைபாடுகளை எதிர்காலத்தில் களைந்தால்தான் தமிழ்நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்.

மதம் சார்ந்து
கைது செய்யப்பட்டிருப்பவர் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே ஒரு அந்த மதத்தை ஒட்டுமொத்தமாக விரோதமாக பார்க்கக்கூடிய பார்வைக்கு இடமளிக்கக்கூடாது. எந்த ஒரு குற்றம் நடந்தாலும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஏதோ ஒரு மதம் அல்லது சாதியை சார்ந்தவர்களாக தான் இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரை சந்தித்த பிறகு அனைத்து ஜமாத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்க வகையில் உள்ளது. எனவே கோவையில் மத அடிப்படையில் குற்றம்சாட்டப்படுவது, மதத் தீவிரவாதிகள் என்ற பெயரில் ஒரு மதத்தை குற்றம் சாட்டுவது போன்ற நிலைக்கு இடமளித்து விடக்கூடாது.

பந்த் - அரசியல் ஆதாயம்
இந்த சூழ்நிலையில் வரும் 31ஆம் தேதி பாஜக பந்த் என்று அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பந்த் தேவையா என்பதை அவர்கள் தான் யோசிக்க வேண்டும். பந்த் நடத்துவதற்கான அவசியம் என்ன இருக்கிறது? சம்பவம் நடந்தவுடன், அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையிடம் தமிழக அரசு அந்த வழக்கை ஒப்படைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக்கத்தோடும், அமைதிக்கு பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் பந்த் போன்ற போராட்டங்கள் அவசியமற்றது." எனத் தெரிவித்துள்ளர்.












Click it and Unblock the Notifications