எச்ஐவி ரத்தம் சிறுமிக்கு செலுத்தப்பட்டதா? கோவை அரசு மருத்துவமனையில் 2018-ல் நடந்தது என்ன?
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில், 2018-ல் சிகிச்சை பெற்ற தனது மகளுக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாக நெசவுத் தொழிலாளி ஒருவர் அதிர்ச்சி புகார் அளித்துள்ளார். மருத்துவமனை நிர்வாகம் நியாயம் வழங்காமல் மறைக்க பார்ப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், தனக்கு உரிய இழப்பீடு மற்றும் இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மனு அளித்துள்ளார்.. இந்த விவகாரம் பெருத்த அதிர்ச்சியை மட்டுமல்லாமல், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. என்ன நடந்தது?
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் பவன்குமார் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டுக் கொண்டிருந்தன.

கோவை சூலூர் தொழிலாளி
அப்போது சூலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 40 வயது நெசவு தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து அளித் த மனு அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் இதுதான்;
"எங்களுக்கு முதலில் ஒரு மகன், மகள் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இதன்பின்னர் ஒரு மகன் பிறந்தான். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு எனது மகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரத்தம் குறைவாக உள்ளது என்றனர்.
மகளுக்கு எச்ஐவி பாதிப்பு
இதன்பின்னர் எனது மகளை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு எனது மகளுக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினோம். இதனிடையே எனது மகளின் காது அருகே கட்டிகள் ஏற்பட்டன. இதனால் நாங்கள் டாக்டரிடம் எனது மகளை அழைத்து சென்றோம். பிறகு எனது மகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.
இதையடுத்து எனக்கும், எனது மனைவிக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எங்கள் இருவரில் யாருக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. கோவை அரசு மருத்துவமனையில் தான் எச்.ஐ.வி. பாதித்தவரின் ரத்தம் தவறுதலாக செலுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நாங்கள் ஆஸ்பத்திரிக்கு நேரிடையாக சென்று இதுகுறித்து கேட்டோம்.
வெள்ளை அணுக்கள், ரத்தம் பிளாஸ்மா
அப்போது நிர்வாகம் இதுகுறித்து வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று எங்களிடம் சொன்னார்கள்.. ஆனால் எங்களுக்கு எவ்வித நியாயமும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு உரிய இழப்பீடு அல்லது இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுவைப் பெற்ற ஆட்சியர் பவன்குமார், சிறுமிக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளித்து, அதுகுறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு
இதனிடையே, அரசு மருத்துவமனை நிர்வாகம் இந்தச் குற்றச்சாட்டிற்கு முற்றிலும் வேறுபட்ட விளக்கத்தை அளித்துள்ளது. சிறுமிக்குச் ரத்த சிவப்பு அணுக்கள் மட்டுமே செலுத்தப்பட்டதாகவும், குறிப்பிட்ட கொடையாளரின் ரத்தம் பிளாஸ்மா, சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் என 3 பேருக்கு பிரித்து வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்ல, அந்த ரத்தத்தைப் பெற்ற மற்ற இருவருக்கும், ரத்தம் கொடுத்த நபருக்கும் எச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பதால் மருத்துவமனை மூலம் இந்தத் தொற்று பரவவில்லை என்றும், வெளிநபர்களிடம் ஊசி போட்டுக் கொண்டதால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வரும்நிலையில், ஆட்சியரின் விசாரணை முடிவிலேயே இந்தச் சம்பவத்தின் முழு உண்மையும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது...!!!


Click it and Unblock the Notifications
