திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்படுமா? கார்த்திகைக்கு அர்ஜுன் சம்பத் விடுத்த அழைப்பு
கோவை: கோவை மருதமலையில் 184 அடி உயர முருகர் சிலை அமைக்கும் திட்டத்திற்கு நீதிமன்ற வழியாகத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வரும் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். இதற்காக திருப்பரங்குன்றத்தில் கட்சியின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. விழாவின் முதல் நாளில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவை மருதமலை
அப்போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள சூரசம்ஹார வேள்வியில் பூர்ணாகுதி செய்வதற்காக தமிழக சிவசேனா அமைப்பின் தலைவர் திருமுருகன் தினேஷ் வழங்கிய 1.5 கிலோ வெள்ளியை மருதமலையில் வைத்து பூஜை செய்து பெற்றுக்கொண்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் சொன்னதாவது: "மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 184 அடி உயரத்தில் முருகர் சிலை அமைக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று கூறி சிலர் உள்நோக்கத்துடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையைப் பெற்றுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சி
இந்த வழக்கில் அவர்கள் முன்வைக்கும் காரணங்களை நீதிமன்றம் புறந்தள்ளி, முருகர் சிலை அமைப்பதற்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. எனவே, முருகர் சிலை அமைப்பதற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கும் அறைகளை முன்பதிவு செய்வதற்கான ஆன்லைன் நடைமுறை பக்தர்களுக்கு சிரமமாக உள்ளது. இதனை எளிமைப்படுத்த வேண்டும்.
தீபத்தூணில் கார்த்திகை தீபம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், கடந்த திமுக அரசு அந்த உத்தரவைப் புறந்தள்ளியது. தீபம் ஏற்றுவதற்காகத் திரண்ட முருக பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். மேலும், 144 தடை உத்தரவு பிறப்பித்து நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த முடியாத நிலையை உருவாக்கினார்கள்.
இப்போதைய அரசு முந்தைய திமுக அரசுக்கு மாற்றாக ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதனால் இந்த ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும்.
அர்ஜுன் சம்பத் அதிரடி
இதனை வலியுறுத்தி, வரும் கார்த்திகை தீபத் திருநாளன்று உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் திருப்பரங்குன்றத்திற்கு வர வேண்டும். மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஒளிர்வதைக் காணவும், முருகனின் அருளை பெறவும் அனைவரும் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். இந்து மக்கள் கட்சியின் சார்பில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் மிகப்பெரிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்" என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.




Click it and Unblock the Notifications
