இலங்கை அரசின் அசத்தல் அறிவிப்பு! முதலீடு செய்வோருக்கு ‛கோல்டன் விசா’! பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை
கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ரூ.1 லட்சம் அமெரிக்க டாலருக்கு முதலீடு செய்வோர் கோல்டன் விசா திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் வரை இலங்கையில் தங்கி தொழில் செய்யலாம் என்ற அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டதால் தான் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.
மேலும் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருளாதார சரிவு
இதற்கு அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், பிற நாட்டுக்கு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு சரிந்ததும் காரணமாகும். குறிப்பாக கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டு இலங்கையை மோசமான நிலைமைக்கு தள்ளிவிட்டது. பொருளாதார வளர்ச்சி பெருமளவு சரிந்தது.

கரைந்த அந்நிய செலாவணி
அத்துடன் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 70 சதவீதம் சரிந்து பிப்ரவரி மாத நிலவரப்படி சுமார் 2.31 பில்லியன் டாலராக இருந்தது. இது கடன் செலுத்த வேண்டியதை விட மிகவும் குறைவாகும். இதனால் தான் உணவு மற்றும் எரிபொருள் உட்பட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் இலங்கை திணறி கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக தான் வெளிநாட்டு கடன், வட்டி திரும்ப செலுத்துவதை இலங்கை நிறுத்தி உள்ளது.

இலங்கையின் புதிய அறிவிப்பு
இதற்கிடையே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்தியா உதவி செய்து வரும் நிலையில் அதன் நட்பு நாடான சீனாவிடமும் இலங்கை உதவி கோரியுள்ளது. இந்நிலையில் தான் இலங்கை அரசு ‛கோல்டன் பாரடைஸ் விசா' எனும் திட்டத்தை அறிவித்துள்ளது.

1 லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு
அதன்படி இலங்கையில் 1,00,000 அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு 10 ஆண்டுகள் இலங்கையில் தங்கி பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் 75 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அடுக்குமாடி கட்டடங்கள் வாங்கும் நபர்களுக்கு ஐந்து ஆண்டு விசா வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் இலங்கை நாட்டின் முதலீடுக்கு உதவும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications