சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா.. அமைச்சர் ஜெய்சங்கரில் இலங்கை பயணம்! ஏன் முக்கியம் தெரியுமா
கொழும்பு: மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டிற்குப் பயணம் செய்துள்ளார்.
அண்டை நாடான இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இலங்கையில் உணவு பற்றாக்குறையும் கூட தலைவிரித்தாடுகிறது. அதேபோல எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் மின்வெட்டும் நிலவுகிறது.

அந்நிய செலாவணி
இலங்கையில் அந்நிய செலாவணி மிக மோசமாக உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குக் காகித பற்றாக்குறையும் மிக மோசமாக உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள காகிதங்கள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்களுக்குத் தேர்வுகள் கூட ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தியாவின் உதவி இலங்கைக்கு தற்போது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. இதுவரை இலங்கைக்குப் பல ஆயிரம் கோடிகள் இந்தியா உதவியுள்ளது.

அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலில் உள்ள இரண்டு முக்கிய அண்டை நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது மாலத்தீவு, இலங்கை நாடுகளுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மாலத்தீவில் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித்தை சந்தித்த ஜெய்சங்கர், இப்போது இலங்கை நாட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இலங்கை துணை நிறுவனமான இலங்கை ஐஓசி நிறுனவத்தை பார்வையிட்டார். கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியாவின் உதவி முக்கியமாகத் தேவைப்படும் சூழலில், அமைச்சர் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது ட்விட்டரில், "கொழும்பில் உள்ள லங்கா ஐஓசி-ஐ பார்வையிட்டேன். அங்கு மனோஜ் குப்தா எனக்கு எரிபொருள் விநியோக நிலைமை குறித்து விளக்கினார்" என ட்வீட் செய்துள்ளார்.

கொழும்பு பயணம்
அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கொழும்பு சென்றடைந்தார். அவர் இன்று இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவை சந்தித்து கொழும்பின் பொருளாதார நிலை குறித்துக் கலந்துரையாடினார். நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து அமைச்சர் தனது பயணத்தைத் தொடங்கினார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலேயே இந்தியாவின் கொள்கை எப்போதும் இருக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இலங்கையில் நிதி நிலைமையைச் சரி செய்ய, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இலங்கை நிதி நெருக்கடி
குறிப்பாகச் சர்வதேச நிதியத்திடமும் இலங்கை உதவி கேட்டிருந்தது. இலங்கையில் உள்ள பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தச் சர்வதேச நிதியம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் பொது கடன், குறைந்த அந்நிய செலாவணி, வரும் காலத்தில் முதலீட்டிற்குத் தேவைப்படும் நிதி தேவைகள் ஆகியவை இலங்கையை மோசமாகப் பாதித்துள்ளது. இந்தச் சூழலில் அமைச்சர் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications