அட பாவமே! தெரு விளக்குகளை ஆன் செய்ய கூட மின்சாரம் இல்லையாம்! மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை
கொழும்பு: இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி நாளுக்கு நாள் மிக மோசமானதாக மாறி வருகிறது.
நமது அண்டை நாடான இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

அந்நிய செலாவணி
பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இலங்கையில் காகிதங்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காகித பற்றாக்குறை காரணமாக சில செய்தி நிறுவனங்களும் கூட அச்சுப்பிரதியை நிறுத்தி உள்ளன. நிலைமை சீர் செய்ய அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும், நிலைமை எப்போது மேம்படும் என யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

மின்வெட்டு
உணவுப் பற்றாக்குறை மட்டுமின்றி, அங்கு மின்சாரத்திற்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை நாட்டில் பல்வேறு இடங்களில் 13 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால், உரியக் கட்டணத்தை அந்நாட்டு அரசால் செலுத்த முடியாததாலேயே இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கட்டான நிலையில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளைச் செய்து வரும் போதிலும், அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

தெரு விளக்குகள்
இந்நிலையில், மின்சாரத்தைச் சேமிக்கத் தெரு விளக்குகளை அணைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இலங்கையில் உள்ள பல பகுதிகள் இரவு நேரங்களில் இருளில் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தைச் சேமிக்க நாடு முழுவதும் உள்ள தெரு விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஏற்கனவே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக அந்நாட்டின் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

டீசல்
இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியா அனுப்பி உள்ள டீசல் சனிக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர் வன்னியாராச்சி, இருந்த போதிலும் நிலைமை சீக்கிரம் முன்னேற வாய்ப்பில்லை என்று எச்சரித்தார். மேலும் அவர் கூறுகையில், "இந்தியா அனுப்பி உள்ள டீசல் வந்த உடன் நமது சுமை குறையும். மின்வெட்டு நேரம் குறையும். ஆனால் மே மாதம் வரை மின்வெட்டு தொடரும். நீர் மின் நிலையங்களில் நீரின் அளவு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. அதேபோல கொடை காலத்தில் மின் தேவையும் அதிகரித்துள்ளதால் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை" என்றார்.

இலங்கை பங்குச் சந்தை
இதனால் இலங்கை பங்குச் சந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வெட்டு மிக மோசமாக உள்ளதால், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) தினசரி வர்த்தக நேரம் வழக்கமான நான்கரை மணியிலிருந்து இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல இலங்கை சந்தையும் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. இன்றைய தினம் வர்த்தகத்தைத் தொடங்கிய உடன் பங்குகள் மிக மோசமாகச் சரிந்ததால் சுமார் 30 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. கடந்த இரண்டு நாட்களில் பங்கு வர்த்தகம் இதுபோல சஸ்பெண்ட் செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

என்ன காரணம்
இந்த நெருக்கடி பல்வேறு மோசமான நடவடிக்கையின் முடிவாகவே பார்க்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இலங்கையின் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதேபோல உரத்தட்டுப்பாடு காரணமாக அந்நாட்டின் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தவறான நேரத்தில் செய்யப்பட்ட வரிக் குறைப்புகளும் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பைக் கடுமையாகப் பாதித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 70% வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த பிப். மாதம் இலங்கையிடம் $2.31 பில்லியன் மட்டுமே கையிருப்பு இருந்த நிலையில், அந்நாட்டு அரசு சர்வதேச நிதியம். இந்தியா மற்றும் சீனா நாடுகளிடம் உதவி கோர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications