Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் பிறந்தநாள் இனி தனிப்பெருங்கருணை நாள் - முதல்வர் ஸ்டாலின்

அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் 'தனிப்பெருங்கருணை நாளாக' கடைப்பிடிக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கடலூர்: வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வாக்கியத்திற்கு சொந்தக்காரர் வள்ளலாரின் பிறந்தநாள் இனி தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சன்மார்க்கத்திற்காக வாழ்வை அர்பணித்த வள்ளலாரின் 198 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மக்களின் பசிப்பிணி போக்கிய வள்ளலாரின் இயற்பெயர் ராமலிங்க அடிகளார் அக்டோபர் 5, 1823 கடலூர் மாவட்டம் மருதூரில், ராமையாபிள்ளை - சின்னமைய்யார் தம்பதிக்கு மகனாக பிறந்தார். சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், மொழி ஆய்வாளர், சித்த மருத்துவர் , சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களை கொண்டவர் வள்ளலார்.

Ramalinga adigalar a Vallalar Birthday celebrates Thani perun karunai Naal

1867ஆம் ஆண்டு வடலூரில் தர்ம சாலை ஒன்றை தொடங்கி அனைவருக்கும் உணவு வழங்கினார். மக்களின் பசியை போக்க வழி கண்டவர் வள்ளலார். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவரது கருத்துக்கள் அனைத்தும் முற்போக்காகவே பார்க்கப்பட்டன. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று முழங்கியவர் வள்ளலார்.

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்கள், திருவருட்பாவாக தொகுக்கப்பட்டுள்ளது. ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள இது, முதலில் இராமலிங்க அடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது.

இராமலிங்க அடிகளாரின் கொள்கைகள்

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். புலால் உணவு உண்ணக்கூடாது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.

பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. குருவை வணங்கக் கூசி நிற்காதே. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார்.

1874ஆம் ஆண்டு தை 19ஆம் தேதி ஜனவரி 30 ஆம் நாள் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நல்ல நாளில் வள்ளலார் ஜோதி வடிவாக கலந்தார். அந்த அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணையை இன்றைக்கும் அனைவரும் போற்றி வணங்கி வருகின்றனர். ஜோதி திருவிழா வடலூரில் மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது. வருடந்தோறும் வள்ளலாரின் பிறந்த நாள் வடலூரில் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் வள்ளாலாரின் 198 பிறந்த நாளையொட்டி கோயில்களில் சிறப்பு பிராத்தனைகள், விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தனிப்பெருங்கருணை நாள்

வள்ளலாரின் பிறந்தநாள் இனி தனிப்பெருங்கருணை நாளாக' கடைப்பிடிக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார்.

அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கிக் கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார்.

பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்த நாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் 'தனிப்பெருங்கருணை நாள்' எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல் முருகன் வரவேற்பு

வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெய்யியல், மொழியியல், மருத்துவம், வாழ்வியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான புதிய கருத்துகளை முன்வைத்தவர் வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். நீண்ட நெடிய மரபுள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனைத் தொடரில் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கம் என்பது மிகப்பெரிய பாய்ச்சலாகும்.

18ஆம் நூற்றாண்டிலேயே, மூடநம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிராக பேசியதோடு, தந்தை பெரியாருக்கு முன்பாகவே, சாதி, மதங்களை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். சங்கராச்சாரியார், மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சம்ஸ்கிருதமே என்று நிறுவ முயன்றபோது, மிக ஆணித்தரமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தவர் வள்ளலார்.

சமகாலத்தில் ஆரியத்துவா, இந்துத்துவா என்ற அடிப்படையில், மக்களுக்கு எதிராக, ஜனநாயகத்திற்கு விரோதமாக பல்வேறு அடக்குமுறைகளை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கையாண்டு வரும் நிலையில், தமிழர் ஆன்மிகச் சிந்தனை தனித்துவமானது என்பதை வள்ளலாரின் கோட்பாடுகள் வாயிலாக புரிந்து கொள்ளலாம்.

இப்படி பல்வேறு சிறப்புக்குரிய வள்ளலாரை போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது. முதல்வர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+