25 பவுன், 5 லட்சம் வரதட்சிணை கேட்டு வன அலுவலருக்கு டார்ச்சர்.. 5 மாத கருவை கொன்ற மாமியார், கணவர்!
கடலூர்: கடலூரில் பெண் வன அலுவலர் ஒருவரை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி அவருக்கு கசாயம் என கூறி கருக்கலைப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரது கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தையா நகரைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் சரவணன் தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், வடலூர் ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவரும், நெய்வேலியில் வன அலுவலராக பணிபுரிபவருமான நர்மதா (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

சீர்வரிசை பொருட்கள்
திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் சரவணனுக்கு சீர்வரிசை பொருட்கள் கொடுத்துள்ளனர். இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் பெற்றோர் வீட்டில் இருந்து 25 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் கூடுதல் வரதட்சணையாக வாங்கி வரும்படி கேட்டு நர்மதாவை, சரவணனின் குடும்பத்தினர் துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

நர்மதா
ஆனால் நர்மதாவோ எனது குடும்பத்தில் அவ்வளவு வரதட்சிணை கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லை என்றே கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நர்மதா கர்ப்பமானார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு சரவணனின் குடும்பத்தினர் அவருக்கு கசாயம் என கூறி ஒரு திரவத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

கட்டாயப்படுத்தி கசாயம்
அவர் வேண்டாம் என கூறியும் கட்டாயப்படுத்தி அவருக்கு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் அவரது கர்ப்பம் கலைந்தது. இதுகுறித்து நர்மதா திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சரவணன், மற்றும் அவரின் தாய் மல்லிகா, மல்லிகாவின் மகள்கள் ரேவதி, கவிதா என்கிற பூரணி ஆகியோர் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்தார்.

இருவருக்கு வலை
இதில் சரவணன், மல்லிகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 25 பவுன் நகைக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு தங்கள் வீட்டு வாரிசு என்றும் பாராமல் அதை கருவிலேயே அழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications