ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்: முதலிடம் பிடித்த வலிமை.. மாஸ்டர் இரண்டாவது இடம்!
டெல்லி: இந்தியாவில் இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் எது என்பது குறித்த அறிவிப்பை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி தொடர்ந்து தகவல் பகிர வேண்டுமானால் ஹேஷ்டேக் பயன்படுத்தப்படுவது வழக்கம். பேஸ்புக், இன்ஸ்டா என சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும், ஹேஷ்டேக் போட்டு தகவல் பரிமாறப்படுவது வழக்கம் என்றாலும், ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் கவுரவத்தின் அடையாளமாக மாற்றப்பட்டுள்ளன.
ஒரு தலைவருக்கு எதிராக ஹேஷ்டேக் போடுவது, அதற்கு பதிலடியாக அவருக்கு ஆதரவாக ஆதரவாளர்கள் ஹேஷ்டேக் போடுவது என்பது அரசியல் களத்தில் இன்றியமையாத பணியாகிவிட்ட காலகட்டம் இது.

அஜித், விஜய்
அதேபோலத்தான், நடிகர்களின் ரசிகர்களும், ஹேஷ்டேக்குகளுடன் தங்கள் அபிமான நடிகர் தொடர்பான அப்டேட்கள், அபிமான நடிகரின் படங்கள் பற்றிய அப்டேட்களை செய்கிறார்கள். அதிலும், ட்விட்டரில் பெரும் ஆதிக்கம் செலுத்துவது, அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்தான். சூர்யா ரசிகர்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. 90களில் திரைத்துறைக்கு அறிமுகமான, இந்த மூன்று முன்னணி நடிகர்களின் ரசிகர்களும்தான் ட்விட்டரில் சினிமா தொடர்பான ஹேஷ்டேக்குகளில் முன்னணியில் உள்ளனர்.

வலிமை முதலிடம்
இதோ இன்று ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட தகவல்படி, இந்தாண்டு இதுவரை வலிமை திரைப்படம் தொடர்பான #valimai என்ற ஹேஷ்டேக்தான் முதலிடத்தில் உள்ளதாம். சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் இந்த திரைப்படத்தின் முதல் போட்டோ உள்ளிட்ட சில அப்டேட்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தன. நீண்ட காலமாக இந்த படம் தொடர்பான அப்டேட் வெளியிடப்படாமல் இருந்ததால், ரசிகர்கள், பொது வெளியில் அரசியல் தலைவர்களிடம் கூட வலிமை அப்டேட் கேட்க ஆரம்பித்தனர். கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களிடம் கூட வலிமை அப்டேட் கேட்டனர். எனவே இந்த திரைப்படத்தின் ஹேஷ்டேக் முதல் இடத்தை பிடித்ததில் ஆச்சரியம் இல்லைதான் என்று காலரை தூக்கி விடுகிறார்கள் ரசிகர்கள்.

மாஸ்டர் திரைப்படம்
இந்த பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது #master ஹேஷ்டேக். விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளிலும் பிறகு அமேசான் ஓடிடி தளத்திலும் இவ்வாண்டு இந்த படம் வெளியானது. எனவே ரசிகர்கள் அதிகமாக இந்த படம் பற்றி பேசியுள்ளனர்.

திரைப்படங்கள் ஆதிக்கம்
4வது இடத்தில் #ajithkumar 5வது இடத்தில் #thalapathy65 போன்ற ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளன. இந்தியாவையே புரட்டிப் போட்ட 2வது அலைக்கு மத்தியிலும், இந்த லிஸ்டில் #covid19 என்ற ஹேஷ்டேக் 9வது இடத்தைதான் பிடித்துள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
Recommended Video

மகேஷ் பாபுவை முந்திய அஜித், விஜய்
3வது இடம் பிடித்துள்ள ஹேஷ்டேக் #sarakaruvaaripaata ஆகும். தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தில் மகேஷ் பாபு நடித்துள்ளார். அதாவது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள்தான், மகேஷ் பாபு ரசிகர்களை விட அதிகப்படியாக டேக் பயன்படுத்தி டிவிட்டரில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

அஜித் ரசிகர்கள் ஆரவாரம்
6வது இடத்தில் #iheartawards, 7வது இடத்தில் #rubinadilaik, 8வது இடத்தில் #bts ஆகியவையும், #vakeelsaab ஹேஷ்டேக் 10வது இடத்தையும் பிடித்துள்ளது. ட்விட்டரில் வலிமை முதலிடம் பிடித்துள்ளதை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications