Gen Zக்கு பிறகு களமிறங்கிய Gen ஆல்பா.. 3 மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம்.. என்ன நடக்கிறது?
டெல்லி: Gen Z மாணவர் போராட்டம் மத்திய அரசையே இறங்கி வர வைத்திருந்தது. இதற்கிடையே ஜென் Z இளைஞர்களை போலவே அடுத்த தலைமுறை ஜென் ஆல்பா மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ராஜஸ்தான் உட்பட 3 மாநிலங்களில் ஜென் ஆல்பா மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நீட் வினாத்தாள் லீக் மற்றும் கல்வி கொள்கைகளை எதிர்த்து ஜென் Z இளைஞர்கள் தொடங்கிய போராட்டங்கள் நாடு முழுக்க எதிரொலித்தது. இதனால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூட ராஜினாமா செய்தார். இதற்கிடையே இப்போது அடுத்த தலைமுறை ஜெனரேஷன் ஆல்பா பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

போராட்டம்
உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஜெனரேஷன் ஆல்பா மாணவர்கள், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை கோரி சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை, குடிநீர் வசதி, சுகாதாரமற்ற கழிப்பறைகள், மின்விசிறி இல்லாத வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாததால், மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உத்தர பிரதேசம்
இந்தப் போராட்டங்களில் மிகவும் கவனம் பெற்றது உத்தர பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் உள்ள சர்வோதயா இன்டர் கல்லூரி மாணவர்களின் போராட்டமாகும். சுமார் 1,500 மாணவர்கள் ஆறு மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் மின்சாரம் மற்றும் மின்விசிறி வசதி இல்லாதது, சுகாதாரமற்ற கழிப்பறைகள், சுத்தமான குடிநீர் வசதி இல்லாதது, பள்ளி வளாகம் சரியாக பராமரிக்கப்படாதது குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட பள்ளி கல்வி ஆய்வாளர் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.
ராஜஸ்தான்
இதேபோல ராஜஸ்தானிலும் ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்த்து அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பார்மர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் பள்ளி நுழைவாயிலைப் பூட்டி தர்ணாவில் ஈடுபட்டனர். நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை தற்காலிகமாக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதேபோல் ஜலோர் மாவட்டத்தின் மேகல்வா கிராமத்தில் உள்ள PM SHRI அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பல பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் தங்கள் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முழக்கமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் ஒருவர், "எங்கள் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். தற்போது உள்ள ஆசிரியர்களும் கூட பெரும்பாலும் நிர்வாக பணிகளை கவனிக்க வேண்டி இருப்பதால் அவர்களால் மாணவர்களுக்கு போதியளவு கவனம் செலுத்த முடிவதில்லை" என்றனர்.
பீகார்
இந்த போராட்ட அலை தற்போது பீகாருக்கும் பரவியுள்ளது. கயா மாவட்டத்தில் உள்ள சிமுவாரா நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஜூலை 30ஆம் தேதி பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். பள்ளியின் அடிப்படை வசதிகள் கூட இல்லாதது குறித்து சுட்டிக்காட்டினர். தரமற்ற மதிய உணவு, சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
மாணவர்களின் கோரிக்கையை கேட்ட டிகாரி துணை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குந்தன், ஐந்து நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்யப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். மேலும், நிர்வாக அதிகாரி ரஞ்சித் குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவையும் அமைத்து, புகார்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
