மாணவர்கள் உணவு சாப்பிடும் நேரம்.. பொத்தென்று விழுந்த ஏர் இந்தியா விமானம்.. நொறுங்கிய இடத்தை பாருங்க
அகமதாபாத்: லண்டன் நகருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா 171 என்ற விமானம், போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரகத்தைச் சேர்ந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். இந்த விமானம் மோதிய கட்டிடத்தின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி பெரும் சேதம் அடைந்தது. விடுதி அறையில் தங்கியிருந்த பல மருத்துவ மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் உணவு சாப்பிடும் போது மெஸ் மீது விமானம் விழுந்து.. விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
ஏர் இந்தியா விமான விபத்து விவரங்கள்
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் (ATC) தொடர்பை இழந்தது. மேகனின்நகர் அருகே விமான நிலையத்திற்கு வெளியே விமானம் விழுந்து நொறுங்கியது. சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. தீயை அணைக்க ஏழு தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி இந்த விபத்து குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். மேலும், அகமதாபாத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறினார்.

விபத்து குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
"அகமதாபாத்தில் ஏற்பட்ட இந்த சோகம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக் கொண்டிருப்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன், என்று மோடி கூறி உள்ளார்.
விபத்துக்கான காரணங்கள்
விமானம் ஓடுபாதை 23-ல் இருந்து இந்திய நேரப்படி பிற்பகல் 1.38 மணிக்கு (08.09 UTC) புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் விபத்துக்குள்ளானது என்று DGCA தெரிவித்துள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மேடே அழைப்பை விடுத்தது. ஆனால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து (ATC) வந்த அழைப்புகளுக்கு விமானம் பதிலளிக்கவில்லை.
விபத்து நடந்த இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும், தீயை அணைக்க தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைத்தன.
விமானத்தில் இருந்தவர்கள்
விமானத்தில் இருந்த 242 பேரில், 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டினர், ஒரு கனடா நாட்டவர் மற்றும் ஏழு போர்த்துகீசிய நாட்டினர் ஆவர். கேப்டன் சுமீத் சப்பர்வால் விமானத்தை இயக்கினார். அவருக்கு 8,200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. முதல் அதிகாரி கிளைவ் குந்தருக்கு 1,100 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்றார்.
விபத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது:
"அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நாங்கள் உஷாராக இருக்கிறோம். மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. மருத்துவ உதவிகள் மற்றும் நிவாரண உதவிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.", என்கிறார்.
Breaking!🚨
— 𝗩eena Jain (@DrJain21) June 12, 2025
The Plane crashed into the BJ Medical College hostel canteen in Ahmedabad while students were having lunch inside, Many MBBS students are reportedly de@d
This is one of the worst plane crashes in the History of Aviation 😑 #planecrash #Boeing pic.twitter.com/CelFRuMIt1
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் கூறுகையில், "உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடங்கவும், காயமடைந்த பயணிகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார். மேலும், மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும், NDRF குழுவினரும் உதவிக்கு வருவார்கள் என்றும் அமித் ஷா உறுதியளித்ததாக தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறுகையில், "அகமதாபாத்தில் லண்டனுக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளான செய்தி வேதனையளிக்கிறது. இது குறித்து தொடர்ந்து தகவல்களை பெற்று வருகிறேன். இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன" என்றார்.
விபத்து குறித்த தகவல்களை தெரிவிக்க ஏர் இந்தியா உதவி மைய எண் 1800 5691 444 ஐ அறிவித்துள்ளது. மேலும், அவசர உதவிக்கு அகமதாபாத் நகர காவல்துறை அவசர எண் 07925620359 ஐ அறிவித்துள்ளது.
ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 242 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications