மிஸ் ஆகவே கூடாது! திட்டமிட்டு காய் நகர்த்தும் இந்தியா.. பிரதமருடன் விமான படை தளபதி திடீர் ஆலோசனை
டெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைத் திடீரெனச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கை அழகைச் சுற்றுலாப் பயணிகள் ரசித்து வந்தனர். அப்போது திடீரென இறங்கிய தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

இந்தியா நடவடிக்கை
இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் அவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானியர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற குரல்களும் நாட்டில் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவ நடவடிக்கை குறித்து விவாதிக்கப் பிரதமர் மோடி, முப்படைகளின் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 26ம் தேதி, அதாவது தாக்குதல் நடந்து சில நாட்களில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் (CDS) ஜெனரல் அனில் சவுகான் மற்றும் பிற ஆயுதப் படைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
பிரதமர் மோடி ஆலோசனை
சுமார் 1.5 மணி நேரம் வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தான் பாகிஸ்தானில் எப்படி எங்கே தாக்குதல் நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுக்கப் பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் அளித்திருந்தார். இதனால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தப்படலாம் எனச் சொல்லப்பட்டது.
அடுத்தடுத்து ஆலோசனை
தொடர்ந்து கடந்த ஏப்ரல் 30ம் தேதி லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் உள்ள பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி சந்தித்தார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் என்எஸ்ஏ தோவல் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிறகு மே 3ஆம் தேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு முறையே சுமார் ஒரு மணி நேரம் மற்றும் 40 நிமிடங்கள் நடந்தது.
விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங்
இந்தச் சூழலில் தான் விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியைத் திடீரெனச் சந்தித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி தரும் எனச் சொல்லப்படும் நிலையில், இந்த திடீர் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அதேநேரம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications