ஆம்ஆத்மி தோல்விக்கு நடுவே டெல்லி முதல்வர் அதிஷி செய்ததை பாருங்க.. வெளுக்கும் நெட்டிசன்கள் - ட்ரோல்
டெல்லி: டெல்லி சட்டபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி படுதோல்வியடைந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் தோற்ற நிலையில் முதல்வர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் வெற்றியை நடனமாடி கொண்டாடினார். இந்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் ஆம்ஆத்மி படுதோல்வியடைந்த சமயத்தில் இது தேவைதானா? என்று நெட்டிசன்கள் அதிஷியை விளாசி வருவதோடு ட்ரோல் செய்து வருகின்றனர்.
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவிடம், ஆளும் ஆம்ஆத்மி ஆட்சியை பறிகொடுத்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வழக்கம்போல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

டெல்லியில் மெஜாரிட்டிக்கு 36 எம்எல்ஏக்கள் போதும் என்ற நிலையில் பாஜக 48 எம்எல்ஏக்களை பெற்றுள்ளது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக தலைநகர் டெல்லியை கைப்பற்றி உள்ளது. அதோடு டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சிக்கு நேற்றுடன் முடிவுரை எழுதப்பட்டுள்ளது.
ஆம்ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பறிகொடுத்தது மட்டுமின்றி ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மாஜி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.
இருப்பினும் டெல்லி முதல்வரான அதிஷி வெற்றி பெற்றுள்ளார். கல்கஜி தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். 3,521 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ரமேசை வீழ்த்தி அவர் வாகை சூடினார்.
இந்த வெற்றியை அவர் தனது ஆதரவாளர்களுடன் நடனமாடி கொண்டாடினர். பாடல்களை ஒலிக்கவிட்டு அதிஷி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இந்நிலையில் தான் அதிஷியின் இந்த செயலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதாவது டெல்லியை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆம்ஆத்மி தற்போது 22 இடங்களை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா போன்ற தலைவர்கள் தோற்றுள்ளனர். இப்படியான சூழலில் இந்த நடனம் தேவையா? இந்த வெற்றி கொண்டாட்டம் தேவையா? இதனை ஏற்க முடியவில்லை என்று ஆம்ஆத்மி மற்றும் அந்த கட்சியினர் கவலையை பகிர்ந்து வருகின்றனர்.
இதுஒருபுறம் இருக்க அதிஷியை பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளனர். டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி தோற்றுவிட்டது. மக்கள் ஆம்ஆத்மியை தூக்கி எறிந்து விட்டனர். ஆனால் முதல்வராக இருக்கும் அதிஷி தனது சொந்த வெற்றியை கொண்டாடி வருகிறார் எனக்கூறி ட்ரோல் செய்கின்றனர். அதோடு அதிஷியின் இந்த நடனம் என்பது ஆம்ஆத்மி கட்சியில் ஒற்றுமையில்லை. அனைத்து தலைவர்களும் தோற்றுவிட்டனர். இனி முக்கிய பதவிகளை கைப்பற்றலாம் என்று அதிஷி கணக்கிட்டு மகிழ்ந்து நடனமாடி வருவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications