பேரழிவில் சீனா.. தினமும் 10 லட்சம் பேருக்கு கொரோனா.. மருந்துகள் அனுப்ப தயாரான இந்தியா.. நண்பேண்டா
டெல்லி: சீனாவில் தினமும் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் 5 ஆயிரம் பேர் இறந்து வருகின்றனர். இதனால் அங்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சீனாவின் பகையை மறந்து உதவி செய்ய இந்தியா முன்வந்துள்ளது. அதன்படி காய்ச்சல் மருந்துகளான இப்யூபுரூபன், பாராசிட்டாமாலை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா தயாராக உள்ளது.
2019 இறுதியில் சீனாவில் இருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கொத்து கொத்தாக மக்கள் பலியாகினர்.
இந்நிலையில் தான் கடந்த ஓராண்டாக கொரோனா பாதிப்பு என்பது இந்தியா உள்பட பல நாடுகளில் குறைந்து வந்தது. இந்நிலையில் தான் தற்போது சில நாடுகளில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி அதிர்ச்சியளித்துள்ளது.

தினமும் 10 லட்சம் பேர் பாதிப்பு
அதன்படி சீனா, அமெரிக்கா, தென்கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக சீனாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸால் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் இப்போது தினமும் 10 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், தினசரி 5,000 பேர் வரை கொரோனாவால் உயிரிழப்பதாக சொல்லப்படுகிறது. சீனா மர்மதேசமாக உள்ளதால் அங்கிருந்து அதிாரப்பூர்வ தகவல் வெளியிடாமல் மறைக்கப்படும் நிலையில் சுகாதார நிபுணர்கள், சர்வதேச பத்திரிகைகள் சீனாவின் நிலையை கணித்து இந்த தகவலை கூறியுள்ளன.

மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு
சீனா எதிர்பாராத நிலையில் கொரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக ஐசியூவில் ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல பேருக்கு மருத்துவமனையில் படுக்கை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க சீனாவில் மாத்திரை, மருந்துகள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக காய்ச்சல் தடுப்பு மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மரணங்களும் நிகழ்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உதவி செய்ய தயராான இந்தியா
இந்நிலையில் தான் இந்தியாவை பகையாளியாக நினைக்கும் சீனாவுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவி செய்ய இந்தியா முன்வந்துள்ளது. அதன்படி காய்ச்சல் மருந்துகளான இப்யூபுரூபன் மற்றும் பாராசிட்டமால் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளதாக இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய மருந்து ஏற்றுமதி கவுன்சிலின் தலைவரான சாஹில் முன்ஜால் தெரிவித்துள்ளார். உலகில் ஜெனரிக் மருந்துகளை தயாரிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ள நிலையில் தான் இக்கட்டான சூழலில் சீனாவுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை தகவல்
மேலும் இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‛‛சீனாவின் கொரோனா பாதிப்பு நிலைமையை கண்காணித்து வருகிறோம். நாம் எப்போதும் உலக நாடுகளில் மருந்தகமாக செயல்பட்டு வருகிறோம். இந்தியா சார்பில் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்'' என தெரிவித்துள்ளார். இருப்பினும் கூட டெல்லியில் இருந்த சீன தூதரகம் சார்பில் இதுபற்றி எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

சீனாவின் மருந்து ஏற்றுமதி எவ்வளவு?
Pharmexcil அறிக்கையின்படி 2021-2022ம் ஆண்டில் சீனாவுக்கு இந்தியா குறைந்த அளவில் மட்டுமே மருந்து ஏற்றுமதி செய்துள்ளது. அதாவது இந்தியாவின் மருந்து ஏற்றுமதியின் மொத்த அளவில் சீனாவுக்கு என்பது வெறும் 1.4 சதவீதம் தான். இந்தியா அமெரிக்காவுக்கு தான் அதிகளவில் மருந்துகளை அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications