குழந்தைகளுக்கு தடுப்பூசி இவ்வளவு முக்கியமானதா..! பயாலஜிக்கல் இ வேக்சின் சோதனைக்கு மத்திய அரசு அனுமதி
டெல்லி: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், பயாலஜிக்கல் இ தடுப்பூசியைச் சிறார்கள் மத்தியில் சோதனை செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மே காலகட்டத்தில் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதன் பிறகு இப்போது தான் வைரஸ் பாதிப்பு குறைந்து, 40 ஆயிரம் என்ற அளவில் உள்ளது.
இந்தச் சூழலில் வேக்சின் மட்டும் மக்களின் உயிரைக் காக்கும் ஒரே பேராயுதமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, மத்திய அரசு வேக்சின் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

வேக்சின் சோதனை
இந்நிலையில், கொரோனா 3ஆம் அலை பற்றி தகவல்களும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. 3ஆம் அலையில் சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் ஆபத்து அதிகம் என சில ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் சிறார்களுக்கு வேக்சின் போடும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. தற்போது சிறார்களுக்காக Zydus Cadilla நிறுவனத்தின் Zycov-D தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் சிறார்களுக்கான வேக்சின் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல 2-18 வயதுடையவர்கள் மத்தியில் நடைபெறும் கோவாக்சின் சோதனையும் முடியும் தறுவாயில் உள்ளது. அதற்கும் இம்மாதம் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயாலஜிக்கல் இ நிறுவனத்திற்கு அனுமதி
பொதுவாக அனைத்து நாடுகளிலும் ஒரு மருந்து புதிதாக அறிமுகப்படுத்தும் போது, 18+ ஆனவர்கள் மத்தியிலேயே முதலில் சோதனை நடத்தப்படும். அதன் பின்னரே சிறார்களுக்கு அந்த வேக்சின் அளிக்கப்படும். ஏற்கனவே இரண்டு வேக்சின் சிறார்களிடம் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், 3ஆவது வேக்சினாக பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் (Corbevax) தடுப்பூசியைச் சிறார்கள் மத்தியில் சோதனை செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

கோர்பேவாக்ஸ் வேக்சின் என்றால் என்ன
கோர்பேவாக்ஸ் தடுப்பூசி protein antigen என்ற தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கொரோனா வைரஸ் மனிதர்களின் செல்களில் ஊடுருவ புரோத ஸ்பைக் தான் முக்கியமானது. இந்தத் தடுப்பூசி நமது உடல்களில் இருக்கும் செல்களை கொரோனா புரத ஸ்பைக் போன்ற டம்மிகளை உருவாக்க வைக்கும். இதை புதிய வைரசாக நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் கருதும் என்பதால், கொரோனா ஆன்டிபாடிகள் உற்பத்தியாகத் தொடங்கும். இதனால் அதன் பிறகு ஒருவருக்கு எப்போது வைரஸ் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டாலும், சரியான நேரத்தில் ஆன்டிபாடி உருவாகும்.

44 கோடி சிறார்கள்
நாட்டிலுள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் சிறார்களுக்கான வேக்சின் போடும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டியது முக்கியம். நாட்டில் 12 முதல் 17 வயதுடைய சிறார்களின் எண்ணிக்கை மட்டும் மொத்தம் 44 கோடியாக உள்ளது. பல்வேறு வேக்சின்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், சிறார்கள் அனைவருக்கும் விரைவாக வேக்சின் போட்டு முடிக்கலாம். பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு வரும் அக்டோபர் மாதம் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதே சிறார்களும் ஒப்புதல் அளிக்க வாய்ப்புகள் அதிகம்.

அரசின் திட்டம்
நாட்டில் முதலில் இணை நோய் உள்ள குழந்தைகளுக்கே கொரோனா வேக்சின் பணிகளைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு அடுத்த ஆண்டில் மற்ற குழந்தைகளுக்கு வேக்சின் பணிகளைத் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

ஏன் முக்கியம்
பொதுவாகவே 10 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு நாம் வேறு தடுப்பூசிகள் அதிகமாக அளிப்போம். இதனால் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவர்கள் 10 வயதைத் தாண்டும்போது, இந்த நோயெதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். இதனால் வைரஸ் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். மேலும், பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்படும்போது, 10 வயதைக் கடந்த குழந்தைகளே முதலில் பள்ளிக்கு அழைக்கப்படுவார்கள். எனவே இந்த வயதில் உள்ளவர்களுக்கு முதலில் வேக்சின் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் பரிந்துரையாக உள்ளது.












Click it and Unblock the Notifications