''குஜராத்தில் ராகவ் சதாவை கைது செய்ய பாஜக முயற்சிக்கிறது'' அரவிந்த் கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டு!
டெல்லி: குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராகவ் சதா தேர்தல் பிரசாரங்களை தொடங்கியிருப்பதால் அவரை கைது செய்ய பாஜக தயாராகி வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் பாஜகவின் கோட்டையாக திகழ்கிறது. கடந்த 24 ஆண்டுகளாக அங்கு பாஜக ஆட்சியில் உள்ளது.
வரும் டிசம்பர் மாதம் குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.

குஜராத் தேர்தல்
எனவே இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதிலும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள ஆம் ஆத்மி, குஜராத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வியூகத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி குஜராத்திற்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். மேலும் அங்கு பல வாக்குறுதிகளையும் அள்ளி வீசி வருகிறார்.

இளம் வாக்காளர்கள் ஓட்டுகளை கவர
தரமான இலவச கல்வி, 300 யூனிட் வரை இலவச மின்சாரம் என பல்வேறு வாக்குறுதிகளை கூறி வாக்காளர்களை கவரும் முயற்சியில் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக அந்தக் கட்சியின் இளம் தலைவரான ராகவ் சதாவை நியமனம் செய்துள்ளார். இளம் வாக்காளர்களின் ஓட்டுக்களை கவரும் வகையில் ஆம் ஆத்மி இந்த வியூகங்களை வகுத்துள்ளது. ராஜ்ய சபா எம்.பியான ராகவ் சதா, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற முக்கிய பங்காற்றியதாக ஆம் ஆத்மியினரால் புகழப்பட்டு வருகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
இதனால், ராகவ் சதாவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், ராகவ் சதாவை கைது செய்ய பாஜக திட்டமிட்டு இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். எனினும், எந்த விசாரணை அமைப்பு, எந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய திட்டமிட்டு இருக்கிறது என்ற எந்த விவரத்தையும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:-

கைது செய்ய முயற்சிக்கிறது
''குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளராக ராகவ் சதா நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தல் பிரசாரங்களையும் ராகவ் சதா தொடங்கியிருப்பதால் அவரை கைது செய்ய பாஜக தயாராகி வருவதாக நாங்கள் அறிகிறோம்'' என்றார். ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் விஜய் நாயரை சிபிஐ கைது செய்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications