‘திருக்குறள் புத்தகம்'.. பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு மோடி வழங்கிய பரிசு
டெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருநாடுகள் இடையேயான உறவு பற்றி விவாதிக்க பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். அப்போது விளாடிமிர் புதினுக்கு, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகம் வழங்கிய பிரதமர் மோடி வரவேற்றது கவனம் பெற்றது.

உலகளவில் 11 நாடுகள் இணைந்து 'பிரிக்ஸ்' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் இந்த உச்சி மாநாட்டிற்கு தலைமை வகிக்கும். அந்த வகையில் 18 வது பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்று டெல்லியில் நடத்த உள்ளது.
இந்த உச்சி மாநாடு நாளை தொடங்கி நாளை மறுநாள் வரை 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று காலையில் டெல்லி வந்தார். அதேபோல் பிற நாடுகளின் தலைவர்கள் அடுத்தடுத்து டெல்லி வருகை தருகின்றனர். இந்நிலையில் தான் டெல்லி வந்த விளாடிமிர் புதின், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இந்தியா - ரஷ்யா இடையே நல்ல நட்பு உள்ளது. இந்நிலையில் தான் டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிற அதிகாரிகள் சந்தித்தனர். இந்த சமயத்தில் புதினுக்கு, பிரதமர் மோடி திருக்குறள் புத்தகத்ததை பரிசாக வழங்கினார். ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த புத்தகத்தை பிரதமர் மோடியிடம் இருந்து புதின் பெற்று கொண்டார்.
உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறளை, திருவள்ளுவர் இயற்றினார். அனைத்து காலத்திற்கும் பொருந்தக்கூடிய இந்த நூலை தமிழகத்தை சேர்ந்த திருவள்ளுவர் எழுதியது நமக்கு பெருமையான விஷயமாக உள்ளது. அந்த வரிசையில் திருக்குறள் நூலை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து அதனை பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
