கைது செய்யப்பட்டாலே.. பிரதமர் & முதல்வர்களை பதவி நீக்க மசோதா! லோக்சபாவில் தாக்கல் செய்த அமித் ஷா
டெல்லி: பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் உள்ளிட்டோர் கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது அல்லது காவலில் வைக்கப்பட்டால் அவர்களைப் பதவியில் இருந்து நீக்குவதற்குச் சட்டப்பூர்வமான கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தும் மசோதா மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவை அமித் ஷா தாக்கல் செய்தார்.
இப்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. பஹல்காம் தாக்குதல், பீகார் சார் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதால் நாடாளுமன்றம் தொடங்கி முடங்கி வருகிறது. இருப்பினும், அதையும் தாண்டி மத்திய அரசு தொடர்ந்து பல முக்கிய மசோதாக்களை கொண்டு வருகிறது.

அமித் ஷா தாக்கல் செய்தார்
அப்படித் தான் இன்றும் மத்திய அரசு ஒரு முக்கிய மசோதாவை கொண்டு வர இருக்கிறது. பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டால் அல்லது காவலில் எடுக்கப்பட்டால் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வழிவகை செய்யும் இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் அவர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
நீக்கப்படுவார்
2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் 54வது பிரிவில், (4A) என்ற புதிய உட்பிரிவைச் சேர்க்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.. இந்த உட்பிரிவு, அமைச்சர் ஒருவர் பதவிக்காலத்தில் தொடர்ந்து 30 நாட்கள் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டால், 31வது நாளில் முதலமைச்சரின் ஆலோசனைப்படி துணைநிலை ஆளுநரால் அவர் நீக்கப்படுவார் என்று குறிப்பிடுகிறது.
அவ்வாறு முதலமைச்சர் ஆலோசனை வழங்காத பட்சத்தில், அமைச்சர் அடுத்த நாளிலிருந்து தானாகவே பதவியை இழப்பார். இந்த மசோதாவின் கீழ் இதேபோன்ற ஒரு நடைமுறை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கும் முன்மொழியப்பட்டுள்ளது. அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் அல்லது பிரதமர் தொடர்ந்து 31 நாட்கள் காவலில் இருந்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
ஏன் இந்த நடவடிக்கை
அரசியலமைப்பு ஒழுக்கத்தைப் பாதுகாக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையை உறுதி செய்யவுமே மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு தரப்பு கூறுகையில், "தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்களின் நம்பிக்கையைக் கொண்டவர்கள் தான் என்றாலும், கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும்போது பிரதமர் அல்லது அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவதற்குத் தற்போது அரசியலமைப்பில் எந்த விதமான விதியும் இல்லை.
பதவியில் உள்ள அமைச்சர்களின் நடத்தை எந்தவிதமான சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். எனவே, கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு அமைச்சர் பதவியில் இருந்தால் அது மக்கள் அரசியலமைப்பு மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யும். இதை தடுக்கவே இந்த மசோதா" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டாலே பதவி நீக்கம்
இதற்கு முன்பு வரை முதல்வர் அல்லது அமைச்சர்களுக்கு நீதிமன்றங்கள் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தால் மட்டுமே அவர்கள் பதவியை இழப்பார்கள். மதுபான வழக்கில் கைதான கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே முதல்வராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த மசோதாவின் கீழ் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கைதாகி சிறையில் இருந்தாலே பதவி நீக்கம் செய்ய முடியும். இது அரசியல் பழிவாங்கலுக்கு வழிவகை செய்யும் என்பதால் எதிர்க்கட்சியினர் இந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications