நீதித்துறை நியமனங்களில் மத்திய அரசிடம் முன் அனுமதி! சந்திரசூட் மீது நீதிபதி வைத்த ஷாக் குற்றச்சாட்டு
டெல்லி: நீதித்துறை நியமனங்களை கொலிஜியம்தான் மேற்கொள்ளும். ஆனால், 'கொலிஜியம்' முடிவுக்கு முன் மத்திய அரசிடம் இது குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்தாலோசனை செய்வார் என, உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த விமர்சனம், நீதித்துறையில் பூகம்பமாக வெடித்திருக்கிறது.
இது ரொம்பவும் சீரியஸான குற்றச்சாட்டாகும். ஏனெனில், 'கொலிஜியம்' முழுக்க முழுக்க சுதந்திரமான அமைப்பாகும். இந்த அமைப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் இருப்பார்கள். இவர்கள் நீதிபதிகளின் நியமனத்திற்கு, பெயர்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார்கள்.

சுதந்திரமான கொலீஜியம்?
அப்படி அனுப்பப்படும் பெயர்களை மத்திய சட்ட அமைச்சகம் ஆய்வு செய்யும். பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பின்புலத்தை உளவுத்துறை மூலம் டாப்-டூ-பாட்டம் வரை முழுமையாக ஆய்வு செய்யும். ஒருவேளை திருப்தி இல்லை எனில், வேறு பெயரை பரிந்துரைக்க திருப்பி அனுப்பும். அப்படி அனுப்பினாலும், மீண்டும் அதே பெயரை 'கொலிஜியம்' மீண்டும் ரெக்கமெண்ட் செய்ததால், அரசு புறக்கணிக்க முடியாது. அவரை நீதிபதியாக்க ஒப்புதல் கொடுத்துவிடும்.
இவ்வளவு பவர்ஃபுல் அமைப்பின் தலைவராக இருந்துக்கொண்டு, நீதிபதிகள் நியமனம் குறித்து 'கொலிஜியம்' முடிவெடுப்பதற்கு முன்னரே, மத்திய அரசிடம் சந்திரசூட் கலந்தாலோசனை செய்தார் என்பது, அவர் மத்திய அரசின் ஆளாக செயல்பட்டார் என்பதை உறுதி செய்திருப்பதாக விமர்சனங்கள் வெடித்திருக்கின்றன.
நான் கடுமையாக எதிர்த்தேன்
'தி வயர்' செய்தி ஊடகத்தின் பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு, நீதிபதி கவுல் அளித்த பேட்டியில் கூறியதாவது, "நீதிபதிகள் நியமனம் குறித்து 'கொலீஜியம்' அமைப்பு முறைப்படி கூறி விவாதிப்பதற்கு முன்பாகவே, பரிந்துரைக்கப்பட வேண்டிய பெயர்களை மத்திய அரசிடம் விவாதித்து, அரசின் முன்-ஒப்புதலை பெறும் வழக்கத்தை சந்திரசூட் கொண்டிருந்தார். இந்த நடைமுறை கொலீஜியம் அமைப்பின் சுதந்திரத்தையே பாதிக்கும் என்பதால் நான் அதை எதிர்த்தேன்" என்று கூறியிருக்கிறார்.
Without Fear Or Favour
நீதிபதி கவுல் எழுதவிருக்கும் சுயசரிதையான 'Without Fear Or Favour' புத்தகத்தில், இது குறித்து குறிப்பிட்டிருக்கிறார். 'கொலீஜியம்' கூட்டத்தின் போது, ஒரு குறிப்பிட்ட நீதிபதியின் பெயரை பரிந்துரைப்பது குறித்து அரசிடம் தொலைபேசியில் பேசவா.. என்று சந்திரசூட் தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு தான் கூட்டத்தின் நடுவே அப்படி செய்யக்கூடாது என மறுப்பு தெரிவித்ததாகவும் விவரித்திருக்கிறார்.
சந்திரசூட் அறிவுசார்ந்த மற்றும் நீதித்துறை சார்ந்த பணிகளில் மிகச் சிறந்த திறமையை கொண்டிருந்தார். ஆனால், நிர்வாக ரீதியாகவும், நீதிபதிகள் நியமன விவகாரங்களிலும் மத்திய அரசிடம் தேவைக்கு அதிகமாகவே இணக்கமாக நடந்துகொண்டார் என்று கவுல் விமர்சித்திருக்கிறார்.
சந்திரசூட்டை எச்சரித்த கவுல்
2 ஆண்டுகள் போன்ற நீண்ட காலம் தலைமை நீதிபதியாக இருக்கும் ஒருவரே அரசிடம் முன்கூட்டியே கலந்துபேசும் இந்த முறையை பின்பற்ற தொடங்கினால், அவருக்கு பின் மிகக் குறுகிய காலம் தலைமை நீதிபதியாக வருபவர்களால் இந்த அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் போகும் என்றும், அரசிடம் முன்கூட்டியே ஒப்புதல் வாங்கும் தவறான முன் உதாரணத்தை இது உருவாக்கிவிடும் என்றும் தான் சந்திரசூட்டை எச்சரித்ததாக கவுல் தெரிவித்திருக்கிறார்.
கொலீஜியம் ஒரு முடிவை எடுத்த பிறகு அரசிடம் அதுகுறித்து ஆலோசிப்பது வேறு.. ஆனால், கொலீஜியம் கூடும் முன்பே அரசிடம் பட்டியலை கொடுத்து பேசுவது முற்றிலும் தவறான முன்மாதிரியை உருவாக்கிவிடும் என்பதே கவுலின் கருத்தாகும். கவுல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு நீதித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
