இப்போ பாரு விஜய் பிரதமராக ஆசைப்படுறாரு! ஸ்டாலின் இப்படி இல்லை! ராகுல் மீது பாய்ந்த சோனியா காந்தி!
டெல்லி: தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் அமைந்த கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து வந்த காங்கிரஸ் கட்சிக்குள், தற்போது மிகக் கடுமையான மோதலும் அதிர்வலைகளும் வெடித்துள்ளன.
2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து 'தேசிய வெற்றி கழகம்' என்ற பெயரில் கட்சியை விரிவுபடுத்தி, உ.பி., பிகார் மற்றும் 5 தென் மாநிலங்களில் யூனிட்டுகளைத் தொடங்கி, விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த தவெக தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்தக் காய்நகர்த்தல் காங்கிரஸ் மேலிடத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, விஜய்யுடன் கூட்டணி வைத்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது சோனியா காந்தி மிகுந்த கோபத்தில் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுகவுடனான நீண்ட கால கூட்டணியை முறித்துக்கொண்டு, பிரதர் ஸ்டாலின் முதுகில் குத்திவிட்டு, விஜய் தலைமையிலான தவெகவுடன் கைகோர்க்கும் முடிவை ராகுல் காந்தி முன்னெடுத்தபோதே கட்சிக்குள் பல முணுமுணுப்புகள் எழுந்தன. தற்போது அந்த முடிவே காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் பெரிய தலைவலியாக மாறியிருப்பதாக சோனியா காந்தி கருதுவதாகக் கூறப்படுகிறது.
ஸ்டாலின் காட்டிய விசுவாசம்: சோனியாவின் ஆதங்கம்
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்த காலகட்டத்தில், தேசிய அளவில் ராகுல் காந்தியின் தலைமைக்கு எந்தவொரு பின்னடைவும் அல்லது சவாலும் ஏற்பட்டதில்லை என்பதை சோனியா காந்தி சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, 2019 மற்றும் 2024 ஆகிய இரண்டு அடுத்தடுத்த நாடாளுமன்றத் தேர்தல்களிலுமே, தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கே முன்னதாக ராகுல் காந்தியை நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக முதல் ஆளாக மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
எந்தவித ஈகோவும் இன்றி, தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் தலைமைக்கு முழு விசுவாசத்தோடு தோளோடு தோள் நின்ற ஸ்டாலினை கழற்றிவிட்டு, புதிய வரவான விஜய்யை நம்பி ராகுல் காந்தி சென்றது ஒரு தவறான அரசியல் கணக்கு என சோனியா காந்தி கருதுகிறார். ஸ்டாலினைப் போன்ற ஒரு நம்பகமான தலைவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு விஜய்யுடன் சென்றிருக்கக் கூடாது என்ற எண்ணம் சோனியா காந்தியின் கோபத்திற்கு பிரதான காரணமாக உள்ளது.
கூட்டணியில் இருந்துகொண்டே முதுகில் குத்தும் நடவடிக்கையா?
தமிழகத்தில் காங்கிரஸ் கொடுத்த ஆதரவின் பலத்தால்தான் விஜய் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளார். ஆனால், அதிகாரத்திற்கு வந்த மூன்றே மாதங்களில், தவெக அரசு தனது பிரதமர் பசியைக் காட்டத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் 3-வது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, தவெகவின் தேசிய வேகம் அதிகரித்துள்ளது.
"ராகுல் காந்தியை பிரதமராக்க நாங்கள் கட்சி தொடங்கவில்லை; 1996 தேவகவுடா பாணியில் 100 இடங்களைப் பிடித்து விஜய்யை பிரதமராக்குவதே இலக்கு" என்று தவெக தலைவர்கள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். காங்கிரஸை தனது அமைச்சரவையில் வைத்துக்கொண்டே, தேசிய அளவில் ராகுல் காந்தியின் இடத்திற்கே விஜய் குறிவைப்பது கூட்டணிக் கொள்கைக்கே எதிரானது என்றும், இது தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்றும் சோனியா காந்தி கருதுகிறார்.
டெல்லியில் நடக்கும் தீவிர ஆலோசனைகள்
காங்கிரஸ் கட்சியின் முகமாக நாடு முழுவதும் ராகுல் காந்தியை முன்னிறுத்தப் போராடி வரும் வேளையில், தமிழகத்தின் கூட்டணிக் கட்சியே அவரை ஓரம் கட்டிவிட்டு விஜய்யை முன்னிறுத்துவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது என சோனியா காந்தி எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசிய அளவில் ராகுல் காந்தியின் தலைமையைக் கேள்விக்குள்ளாக்கும் தவெகவுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பது காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியைக் குலைத்துவிடும் என்றும், உடனடியாக இந்த விவகாரத்தில் கடினமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சிக்கு வரப்போகும் ஆபத்து
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் விஜய் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை பாதியிலேயே திரும்பப் பெறுவது குறித்தும், திமுக உள்ளிட்ட பழைய கூட்டணிக் கட்சிகளுடன் மீண்டும் சுமூக உறவை ஏற்படுத்துவது குறித்தும் காங்கிரஸ் மேலிடம் ஆழமாகப் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றால், தனிப் பெரும்பான்மை இல்லாத தவெக அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழக்கும் அபாயமும் நிலவுகிறது.
ராகுல் காந்தியின் அவசர முடிவால் ஏற்பட்ட இந்த அரசியல் குழப்பம், தமிழக தவெக அரசின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு டெல்லி அரசியலில் புதிய மோதலாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
