தமிழ்நாட்டின் நலனுக்காக.. தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க வேண்டும் - ராகுல் காந்தி
டெல்லி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்களுடன் சென்னை செல்வதாகவும், தமிழ்நாட்டின் நலனுக்காக தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டிருக்கிறார்.
"இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் நானும், மு.க. ஸ்டாலினை சந்திக்க சென்னை செல்கிறேன். தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரிடமும், திமுகவிடமும் கேட்டுக்கொள்ள உள்ளோம்.

நாடாளுமன்ற இடங்களை 850-ஆக அதிகரிப்பது, இந்தியாவில் ஜனநாயகத்தையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். இது, இந்தியாவின் ஒட்டுமொத்த தேர்தல் வரைபடத்தையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைக்க பாஜக-ஆர்எஸ்எஸ் (BJP-RSS) அமைப்புகளுக்கு அளவற்ற வாய்ப்பை வழங்கிவிடும். தமிழர்களுக்கு எதிரான சக்திகளை எதிர்ப்பதில், ஸ்டாலின் அவர்கள் எப்போதும் உறுதியாக நின்றுள்ளார். நாட்டின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், நாம் அனைவரும் இணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்" என்று ராகுல் காந்தி பதிவிட்டிருக்கிறார்.
திமுகவின் ஆதரவும் காங்கிரஸின் எதிர்ப்பும்
தொகுதி மறுவரையறை விஷயத்தில், நாங்கள் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதாக திமுக கூறியிருக்கிறது. மக்களவையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறைய கூடாது, அதேபோல அனைத்து மாநிலகளுக்கும் 50% அளவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை சரிசமமாக ஏற்ற வேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கிறது என்று திமுக தலைவர்கள் கூறியிருந்தனர்.
மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுகவின் ஆதரவு நிலைபாடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று சென்னை வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
